ஒரு குறளை எடுத்து வாசிக்கும்போது அதற்கிணையாக நவீன கவிதை என்ன சொல்ல வருகிறது என்பதையும் சேர்த்து வாசிக்க ஆரம்பித்துள்ளேன். ஒன்றரை அடியில் திருவள்ளுவர் சில உண்மைகளைக் கூறுகிறார். சில குறள்கள் மூலம் போதிக்கவும் செய்கிறார்.
வான் சிறப்பு என்ற இரண்டாவது அதிகாரத்தின் மூலம், வானின் சிறப்பாக மழையைப் பற்றியும் அந்த மழை மாத்திரம் இல்லாவிட்டால் நாமெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் பத்து குறள்கள் மூலம் சொல்லிக்கொண்டு போகிறார்.
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றிக் கால்.
இது மிக எளிமையான குறள் இது. புயல்என்னும் என்கிறார். ஏன் இப்படிச் சொல்கிறார் என்று யோசித்தேன். வானத்திலிருந்து பெய்யும் மழை புயல்போல் வரவேண்டும் என்கிறார். அப்படி வராவிட்டால் உழவர்கள் ஏர் ஓட்டி நிலத்தை உழமாட்டார்கள் என்கிறார்.
இதில் அதிகாரத்தில் கூறப்பட்ட கவிதைகள் எல்லாம் மழையின் பெருமையைக் கூறும் குறள்கள். மழையின் பெருமையைப் பற்றி திருவள்ளுவர் தவிர வேற யாராவது கூறியிருப்பார்களா என்பது சந்தேகம். மேலே குறிப்பிட்ட குறளில் எனக்குப் பிடித்த வார்த்தை புயல்என்னும்.
வைதீஸ்வரன் என்ற தற்கால கவிஞர் மழையைப் பற்றி இரண்டு கவிதைகள் எழுதி உள்ளார். இன்னும் யார் யாரோ எழுதியிருப்பார்கள். ஒரு கவிதையின் பெயர் மழை என்ற கனவு.
திருவள்ளுவர் சொல்கிறார் மழை இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்று. மழை கனவில் வருவதாக வைதீஸ்வரன் கூறுகிறார். அவர் கடைசி வரை மழை பெய்ததை நம்ப மறுக்கிறார். இந்தக் கவிதையையும் பார்ப்போம்.
விடிய விடியப் பெய்ததாம்.
எல்லோரும் சொன்னார்கள்.
எனக்கு
நம்பிக்கை வரவில்லை.
மழை ஊரறிந்த ரகஸியம்
இது
யார் சொல்லித் தெரிய
வேண்டும்.
விடிந்தவுடன்
மண்ணே காட்டிக் கொடுத்துவிடும்
மழை வெறும்
கனவில்தான் பெய்திருக்கிறது
அத்தனை பேர் கனவிலும்.
தவறி மண்ணில் விழுந்திருந்தால்,
கருமி கண்ட காசு போல்
பூமி பதுங்கியிருக்கும்
அதன் மனம்
நெருப்பென்று எனக்குத் தெரியும்.
மழை
பேப்பரிலும்
விடிய விடியப் பெய்ததாம்.
வந்தது செய்தியாக.
மழைக்கு நல்ல
மார்க்கட்டு இருப்பதால்
மிகைப்படுத்துவது வழக்கமான
மனித பலவீனம்தான்.
ஜன்னலிடம் என்
சின்னக் குழந்தை
கைநீட்டிச் சிரிக்கிறது, இரண்டு இலைகளைப்
பார்த்து
இலைகளின் மேல் இன்னும்
திருட்டுப் போகாமல் இருக்கும்
இரண்டொரு முத்துக்களைப் பார்த்து.
இவைகள் முடிந்தவரை
தலையாட்டியது
மழையை எனக்கு நம்பவைப்பதற்காக.
(மனக்குருவி என்ற புத்தகம்)