திருக்குறள் சிந்தனை 5

நான் சீர்காழி என்ற இடத்தில் பொது வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுதான், திருக்குறள் வெறியர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் நூற்றுக்கணக்கில் திருக்குறள் புத்தகங்கள் வாங்கி எல்லோருக்கும் இலவசமாக வழங்கிக் கொண்டிருப்பார். அவரும் என்னைப் போல என் அலுவலகத்தில் ஒரு அலுவலர். அவர் ஏற்பாடில் எங்கள் வங்கியில் ஒரு போர்டு வாங்கி ஒவ்வொருநாளும் திருக்குறளும் அதன் கருத்துரையும் எழுதி வாடிக்கையாளர் பார்வையில் படும்படி வைப்பேன். ஏதோ ஒரு திருக்குறள் புத்தகத்தில் உள்ள ஏதோ ஒரு குறளை எடுத்து மூலத்தையும் கருத்தையும் எழுதி வைப்பேன். உண்மையில் யாரும் படிக்க மாட்டார்கள். ஏன் என்பதற்கு ஒரு காரணம் கண்டுபிடித்தேன். உண்மையில் போர்டில் திருக்குறள் எழுதினாலும் எந்த உணர்வுநிலையும் இல்லாமல் மரக்கட்டைபோல் ஏதோ இதெல்லாம் செய்ய வேண்டுமென்று செய்து வந்தேன். இதைத்தான் வாடிக்காளர்களும் பிரதிபலித்ததாக நினைக்கிறேன்.
இதோ இப்போது ஒவ்வொரு நாளும் ஒரு குறள் விதம் எடுத்து எழுதிக்கொண்டிருக்கிறேன். உலகத்தில் உள்ள எல்லா தத்துவங்களும் திருக்குறளின் ஒன்றரை அடியில் வந்து விடும்போல் தோன்றுகிறது.
இன்றைய திருக்குறளை இங்கே குறிப்பிடுகிறேன்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இந்தக் குறளுக்கு இரா கோ அண்ணாமலை இப்படி அர்த்தம் சொல்கிறார். நல்வினை தீவினை, பாவம் புண்ணியம், புகழ்ச்சி, இகழ்ச்சி என்ற இவ்வுலகின் செயல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் இறைவன் என்கிறார் அவனை நாடிச் செல்லும்போது எல்லாம் ஒன்றே என்று தோன்றும் என்கிறார். இதை இளங்குமரனார் வேறு விதமாகக் கூறுகிறார். நன்மைக்கு உறைவிடமானவனின் மெய்வழியில் நடப்பவர்க்கு மயக்கும் இன்ப துன்பமில்லை என்கிறார்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் என்ற வரி மனதை விட்டு அகலவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன