நடிகையர் திலகம் என்ற படம் பார்த்தேன்

ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கும் போது, அதில் எந்த அளவிற்கு உண்மையும் பொய்யும் கலந்திருக்கும் என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம். உண்மையைப் போல பொய்யும் பொய்யைப் போல உண்மையும் தென்படும். உண்மை 10% விதத்திற்கு மேல் இருந்தால் பெரிய விஷயம். வரலாற்றை எடுக்கும்போது சில கற்பனை காட்சிகளையும் கலக்க வேண்டும். முழுமையான உண்மை வரலாறு பார்ப்பவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தும். சாவித்திரி குறித்து கட்டுரை எழுதும் பத்திரிகையாளராக வரும் மதுர வாணியாகசமந்தாவின் பாத்திரம் படத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.
இந்தப் படத்தில் ஜெமினிகணேசனை வில்லனாகச் சித்தரித்திருக்கிறார்கள். வில்லன் என்று எதாவது உண்டா என்பது தெரியவில்லை. அதேபோல் ஹ÷ரோ என்று சொல்லப்படுவதை ஹ÷ரோவாகக் காட்ட முடியுமா? வாழ்க்கைப் பாதையில் யாருமே ஹ÷ரோ கிடையாது அதேபோல் யாருமே வில்லனும் கிடையாது. புகழ் உச்சிக்குச் சென்ற நடிகை சாவித்திரியின் மோசமான நிலை பார்ப்பவரை சலனப்படுத்தும் விதமாகப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் நடிகை வாழ்க்கையில் குடிப்பது சாதாரண நிகழ்ச்சி. ஆனால் அதுவே உயிரைப் பறிக்கும் நிகழ்ச்சியாக மாற்றப்படுகிறது.
பொதுவாக இதுமாதிரியான சுய வரலாறு படங்களைப் பார்க்கும்போது நமக்குள் பச்சாதாபம் கொள்கிற நிகழ்ச்சிகளைக் கோர்த்துக் கொடுப்பார்கள். அந்தவிதத்தில் அலுப்பில்லாமல் படத்தை எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷ் என்ற நடிகை தன் நடிப்பாற்றலால் பல இடங்களில் சாவித்திரியாக மாறி விட்டதுபோல ஒரு பிரமை ஏற்படுகிறது. தெலுங்கு பட உலகை முக்கியமாக எடுத்துக் காட்டப்படுகிற படம் இது. இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் நாக் அஸ்வின் பாராட்டுக்குரியவர்.
இதேபோல் இன்னும் சில வாழ்க்கை வரலாறு படங்களை எடுத்தால் நன்றாக இருக்கும். உதாரணமாக எம் கே தியாகராஜ பாகவதர், நடிகர் சந்திரபாபு போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் படமாக எடுக்கலாம்.
நேற்று குடும்பத்தோடு இந்தப் படத்தை பி வி ஆர் சினிமா அரங்கில் வேளச்சேரியில் பார்த்தேன். தியேட்டர் முழுவதும் கூட்டம் கூடியிருந்தது. கடைசிவரை உச்சுக்கொட்டாமல் எல்லோரும் இருக்கையில் அமர்ந்தபடி படத்தை ரசித்தார்கள்.

“நடிகையர் திலகம் என்ற படம் பார்த்தேன்” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன