என் கையில் 18.04.2018 ஆம் தேதியிட்ட ஆனந்தவிகடன் கிடைத்தது. உடனே அதில் வெளிவந்த கதையைப் பார்த்தேன். எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய ‘புறாப்பித்து’ என்ற கதை. உடனே படிக்க ஆரம்பித்தேன். எனக்கு என்ன தோன்றியது என்றால் ராமகிருஷ்ணனின் இந்தக் கதையை எப்படி ஆனந்தவிகடனில் பிரசுரம் செய்தார்கள் என்றுதான். இது ஒரு சிறுபத்திரிகையில் வர வேண்டிய கதை. இக் கதையை ஆனந்தவிகடன் பிரசுரம் செய்ததன் மூலம் ஆனந்தவிகடன் தன் தரத்தை உயர்த்திக்கொண்டதாகத்தான் நான் சொல்ல விரும்புகிறேன்.
ராமகிருஷ்ணன் கதைகளை வாசிக்கும் வாசகர்கள் இக் கதையை எளிதாகப் புரிந்துகொள்வார்கள். ஆனால் சாதாரண ஆனந்தவிகடன் வாசகனுக்கு இக் கதை புரியுமா என்ற கேள்வி என்னுள் எழாமல் இல்லை. ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகள் இதுமாதிரியான கதைகளைப் பிரசுரம் செய்து சிறுபத்திரிகை (ஒன்றிரண்டு) என்று வரும் பத்திரிகைகளின் இடத்தை வெற்றிடமாக மாற்றி விடுகிறார்கள் என்றும் தோன்றுகிறது.
அதனால் இனிமேல் சிறுபத்திரிகைகள், முன்பு பெரும் பத்திரிகைகளில் வெளிவந்த சாதாரண கதைகளைப் பிரசுரம் செய்து தங்கள் வெற்றிடத்தை நிரப்ப வேண்டுமென்று தோன்றுகிறது. சிறு பத்திரிகை பெரும் பத்திரிகைக்கு நடுவில் இருக்கும் கோடு அழிக்கப்பட்டு விட்டதாக நினைக்கிறேன். இந்த இடத்தில் சிறுபத்திரிகை எதற்கு என்ற கேள்விக்குப் போகவில்லை. எழுதுபவர்கள் அதிகமாக இருக்க இருக்க சிறுபத்திரிகைகளும் அவசியம்.
இனி ராமகிருஷ்ணன் கதைக்கு வருகிறேன். கிட்டத்தட்ட இக் கதையில் வரும் கோவர்த்தன் நிலைக்குத்தான் பதவி மூப்பு அடையும் தறுவாயில் இருக்கும் வயதானவர்கள் பலரும் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர்களுக்கு என்ன செய்வது என்பது தெரியவில்லை. 30 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருந்து இருந்து அவர்களுக்கு வேற எதையும் செய்ய முடியவில்லை.
அவர் அலுவலகக் கட்டடத்திற்கு எதிரில் இருக்கும் மத்திய உணவு சேமிப்பு கிடங்கு சுவர் மீது வீற்றிருக்கும் புறாக்கள் மீது கவனம் போகிறது. வரிசையாக புறாக்கள் அமர்ந்து இருக்கின்றன. அதில் ஒரு புறா மட்டும் வித்தியாசமாக இருக்கிறது. அது சாம்பல் நிறத்தில் இருக்கிறது. மற்றவை வெள்ளை நிறப் புறாக்கள்.
திடீரென்று வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வந்ததுபோல் இந்தப் புறாக்கள் மீது கவனம் கொள்கிறார் கோவர்த்தன். புறாக்களை எண்ணத் தொடங்குகிறார். அவர் கண் பார்வையில் தென்படும் புறாக்கள் 16 எண்ணிக்கைக் கொண்டதாக உள்ளன.
தாம்பரத்தில் குடியிருக்கும் அவர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மேற்கு மாம்பலம் என்று பல இடங்களில் கூடும் பல புறாக்களை எண்ண ஆரம்பிக்கிறார். ஒரு சிறிய நோட்டில் குறிப்பு எடுத்துக்கொள்கிறார். எந்தந்த இடத்தில் எத்தனைப் புறாக்கள் என்று. கிட்டத்தட்ட கோவர்த்தன் புறா மாதிரியாக மாறி விடுகிறார். புறா மாதிரி சன்னமாகப் பேசுகிறார். அவர் குடும்பத்தாருக்கே அவர் மாற்றம் ஆச்சரியமாக இருக்கிறது. புறாக்கள் வானுலகின் தூதுவர்கள், புறாக்களின் சத்தம் காசநோயின் இழுப்புச் சத்தம்போல் இருக்கிறது என்றெல்லாம் எழுதியிருக்கிறார் ராமகிருஷ்ணன்.
கோவர்த்தன் அலுவலகத்தில் பணிபுரியும் ஹெட்கிளார்க் சுந்தரம் புறாவைப் பற்றிய தகவலை அவருடன் பகிர்ந்துகொள்கிறார். இந்த அலுவலகத்தில் புறாவைத் தவிர வேற எதுவும் இல்லை என்பதுபோல் அவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
கோவர்த்தன் பர்தா அணிந்த இளம்பெண் ஒருவளைச் சந்திக்கிறார். அவளும் புறாவைத் தேடுபவளாக இருக்கிறாள். புறாவைப் பார்த்து பரவசம் அடைகிறாள். அவளுக்கு கோவர்த்தனைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. கோவர்த்தன் புறாவின் எண்ணிக்கையை ஒரு நோட்புக்கில் குறித்து வைத்திருப்பது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. அதை அவரிடமிருந்து வாங்கி வைத்துக்கொள்கிறாள். கோவர்த்தனிடமிருந்து அந்த நோட்புக்கை வாங்கிக்கொள்ள ஒரு டீ வாங்கிக்கொடுக்கிறாள். கோவர்த்தன் அந்தப் பெண் பெயரைக் கேட்கும்போது அவள் சொல்லாமல் போய்விடுகிறாள். புறாவைச் சுற்றிக்கொண்டிருந்தால் புறா ஒருவர் கனவிலும் வரும் என்கிறாள் அந்தப் பெண்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கோவர்த்தன் அலுவலகத்தில் உரையாடும்போது அவர் இயல்புக்கு மாறாக சத்தமாகப் பேசுவதுபோல் கதையை முடிக்கிறார் ராமகிருஷ்ணன். வயது மூப்பு, வாழ்க்கையின் அலுப்பு என்று எல்லாவற்றையும் கதையில் கொண்டு வருகிறார் ராமகிருஷ்ணன்.
1. இந்தக் கதை புறாக்களைப் பற்றி பேசுகிறதா? புறாக்களைச் சுற்றிக்கொண்டிருக்கும் மனிதர்களின் இயல்பைப் பற்றிப் பேசுகிறதா?
2. வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் அற்ற கோவர்த்தனுக்கு புறாக்களைப் பார்ப்பது ஒரு பிடிப்பாக மாறி விடுகிறதா?
வாசிப்பனுபவத்தை நீடித்துக்கொண்டு போகும் கதைகளில் இதுவும் ஒன்று என்று சொல்லத்தோன்றுகிறது.