சமீபத்தில் நடந்த இரு நிகழ்வுகளைக் குறித்து சொல்வதுதான் என் நோக்கம். படிப்பவருக்கு இரு நிகழ்வுகளும் சாதாரணமாகத் தோன்றக் கூடும்.
ஒவ்வொரு மாதம் மூன்றாவது சனிக்கிழமை கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்துகிறேன். ஒரு படைப்பாளியின் மேன்மையைப் பற்றி இன்னொரு படைப்பாளி அல்லது வாசகர் பேசுவதுபோல்.
இந்த முறை கு ப ராஜகோபலன் என்ற படைப்பாளியைப் பற்றி சாருநிவேதிதா உரை நிகழ்த்தியதை நீங்கள் அறிவீர்கள். தி ஜானகிராமனை வைத்து ஆரம்பித்த இந்தக்கூட்டங்களில் எல்லோரும் சிறப்பாகவே உரை நிகழ்த்துகிறார்கள்.
இன்னொரு கண்ணோட்த்துடனும் இக் கூட்டங்களை அணுக வேண்டும். நாம் இந்தக் கூட்டங்களில் பேசுவதைக் கேட்டபிறகு அந்தப் படைப்பாளிகளின் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. இது முக்கியம் என்று எனக்குப் படுகிறது.
சாருநிவேதிதா கு ப ரா என்ற எழுத்தாளர் பற்றி பேசியதைக் கேட்டபோது, கு ப ரா என்ற படைப்பாளியின் படைப்புகளை உடனே எடுத்துப் படிக்க வேண்டுமென்ற ஆவேசம் என்னுள் உண்டாகியது. இது பேசுபவரின் வெற்றியாக நான் கருதுகிறேன். இக் கூட்டத்தில் சிறப்பாக உரை நிகழ்த்திய சாரு நிவேதிதாவிற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாசகர் வட்டம் தயாரித்த சிறிது வெளிச்சம் என்ற புத்தகம் நான் பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கிப் படித்திருக்கிறேன். ஒரு வாசகனாகப் படிக்கும்போது நம் மனதில் புத்தகத்தின் அருமை பெருமைகள் எல்லாம் தெரியாமல் போய்விடும். எந்தப் புத்தகமாக இருந்தாலும் ஒரு புத்தகத்தை மனமுவந்து படிக்க வேண்டும். நாம் படிக்கும்போது அவசரம் காட்டக் கூடாது. சிறிது வெளிச்சம் புத்தகத்தைப் படிக்கும்போது அதுமாதிரி அப்போது அணுகவில்லை என்று நினைக்கிறேன்.
சாரு உரை நிகழ்த்துகிறார் என்ற போது நான் அந்தப் புத்தகத்தைத் திரும்பவும் எடுத்து வைத்துக்கொண்டேன். அதேபோல் இன்னொரு புத்தகம் அல்லயன்ஸ் கு ப ராவின் நூற்றாண்டு விழாவை ஒட்டிக் கொண்டு வந்தது. இதை வாங்கி வைத்ததோடு சரி. தொடக்கூட இல்லை. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் வைத்திருந்த புத்தகத்தை சாரு நிவேதிதா பேசியதைக் கேட்டவுடன், தூசி தட்டி எடுத்துப் படிக்க ஆரம்பித்துள்ளேன். குறிப்பாக இரண்டு கிழவர்கள் என்ற கதையைத்தான் படித்து முடித்தேன். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இப்படி யாராவது தூண்டினால்தான் நாம் புத்தகத்தை எடுத்துப் படிப்போம் என்று தோன்றுகிறது. ஆனால் இது சரியான நிலை இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. நம்மைச் சுற்றி உள்ள எழுத்தாளர்களின் கதைகளை மனமுவந்து நாம் படிப்பதோடு அல்லாமல் நாம் மற்றவர்கள் அறிய அந்த எழுத்தாளர்களைப் பற்றி புகழ்ந்து சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது.
ஆனால் இது இயல்பாக அமைய வேண்டும். இல்லாவிட்டால் கேட்பவர்களுக்கு அபத்தமாகக் கூடப் போய்விடும்.
*************
இன்று உலகப் புத்தகத் தினம். நேற்று என் நண்பர் ஒருவர் பேசும்போது, ஷேக்ஸ்பியரின் பிறந்த தினத்தைத்தான் உலகப் புத்தகத் தினமாகக் கொண்டாடுகிறோம் என்று சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக ஏன் உலகப் புத்தகத் தினம் வந்தது என்று ஆராய்ச்சிச் செய்கிற குணம் என்னிடம் ரொம்பவும் குறைவு.
ராகவன் காலனி மூன்றாவது தெருவில் உள்ள கிளை நூலகத்தின் வாசலில் நான் விருட்சம் புத்தகங்களைக் கெசாண்டு வந்து வைத்த0ருக்கிறேன். 40 சதவீதம் தள்ளுபடியில் விற்கத் தயாராகிவிட்டேன். நேற்று இரண்டு டேபிள்களை நூல்நிலையத்திலிருந்து எடுத்துக்கொண்டு வந்து வாசலில் வைத்துக்கொண்டு புத்தகங்களை முழுவதும் பரப்பிக்கொண்டேன். எப்போதும் என் மீது அன்புகொண்டு உதவி செய்கிற நண்பர்கள் உதவி செய்தார்கள்.
வெளியே இப்படி உட்கார்ந்து புத்தகம் விற்பது புதிய அனுபவமாக எனக்குப் பட்டது. முக்கியமாகக்ட காற்று. அப்படியொரு காற்றை என் வாழ்க்கையில் ரொம்ப நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் அனுபவிப்பதாகத் தோன்றுகிறது. நாம் எல்லோரும் செயற்கைக் காற்றில்தான் நம் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். அதன்பின் மரங்களின் நிழல். நிசப்பதமான தெரு.
இந்தக் கிளை நூலகத்தில் பலர் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நூலகத்திற்கு எதிரில் அடுக்கத்தில் குடியிருப்பவர்கள், படிக்கிறப் பாதகமான செயலை செய்ய வேண்டாமென்று இந்த நூல் நிலையத்திற்கு வருவதே இல்லை என்று தோன்றுகிறது. என் அலுவலகத்தில் பல ஆண்டுகளாகப் பணி புரிந்த நண்பரின் வீடு ஒன்று எதிரில்தான் இருக்கிறது. அவரைப் போனில் கூப்பிட்டேன். ஏதோ ஒரு தருணத்தில் வருவார் என்று எதிர்பார்த்தேன். வரவே இல்லை. நான் என் புத்தகங்களை அவர் தலையில் கட்டிவிடுவேன் என்று யோசிக்கிறாரா என்று என் எண்ணத்தைத் தாறுமாறாக ஓட விட்டேன்.
ஆனால் எனக்குத் தனிப்பட்ட முறையில் இது பயனுள்ள ஒன்றாகத் தோன்றியது. கு ப ராவின் இரண்டு கிழவர்கள் கதையை நிதானமாகப் படித்து முடித்தேன். காற்று வீச வீச கொஞ்சம் தூங்கினேன். முக நூல் படித்து சில நண்பர்கள் புத்தகங்கள் வாங்கினார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றி. ஒரு வேன் ஓட்டுபவர் ஆர்வத்துடன் புத்தகம் வாங்கிக்கொண்டு சென்றது நெகிழ்ச்சியாக இருந்தது. மரத்திலிருந்த இறங்கிய கறுப்பு எறும்புகள் என் உடலில் ஊறி முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தன. நல்ல அனுபவம்.