ஓராண்டுக்கு முன்னால் மா அரங்கநாதன் என்ற படைப்பாளி இறந்து விட்டார் என்ற செய்தியை என்னால் நம்ப முடியாமல் இருந்தது. சிலரைப் பார்க்கும்போது நோயின் உபாதையில் நெளிந்துகொண்டிருப்பவராகத் தோற்றம் தருவார்கள். பேசும்போது உடல் உபாதையைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் மா அரங்கநாதன் வித்தியாசமானவர். பலமுறை அவர் என்னுடன் தொடர்புகொண்டு பேசிக்கொண்டிருப்பார். ஒருமுறை கூட உடல்நிலை சரியில்லை என்று சொன்னதில்லை. முதுமையில் அவர் கம்பீரமாக நடந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன்.
மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறி நான் பீச் ரயில்வே ஸ்டேஷனலில் இறங்கி எதிரில் உள்ள தேசிய வங்கிக்குச் செல்வேன். மின்சார வண்டியில் பயணம் செய்யும்போது மா அரங்கநாதனும் மின்சார வண்டியில் பயணம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். அதுமாதிரியான தருணங்களில் நானும் அவரும் உரையாடிக்கொண்டிருப்போம். அவர் முன்றில் என்ற பத்திரிகைக் கொண்டு வந்துகொண்டிருந்தார். நான் விருட்சம் என்ற பத்திரிகைக் கொண்டு வந்துகொண்டிருந்தேன். கிட்டத்தட்ட முன்றிலும் விருட்சமும் ஒரே மாதிரியாக இருக்கும். ஒரே அச்சு. ஆதிமூலம் லட்டரிங். முன்றில் வந்தவுடன் விருட்சம் வந்துவிடும். ஒரே அச்சகத்தில் இரண்டும் அச்சிடப்படும். பத்திரிகைகளின் உள்ளே வித்தியாசமான பக்கங்கள்.
மா அரங்கநாதன் அரசின் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின் தி நகரில் ஒரு இடத்தில் முன்றில் என்ற பெயரில் புத்தகம்/பத்திரிகை விற்கும் கடை ஒன்றை ஆரம்பித்தார். அந்த இடத்தில் எல்லோரும் சந்திப்போம். தூய வெண்ணிற ஆடைகளுடன் மா அரங்கநாதன் காட்சி அளிப்பார். நான் பல எழுத்தாளர்களை கோபப்பட்டுப் பார்த்திருக்கிறேன். ஆனால் மா அரங்கநாதனை நான் அப்படிப் பார்த்ததில்லை. அந்தக் கடை வைத்திருந்ததால் பெரிய லாபமே வராது. ஆனால் புத்தகங்கள் பத்திரிகைகள் விற்று ஒழுங்காகப் பணம் கிடைத்துவிடும். இப்படி பலமுறை பல சந்தர்ப்பங்களில் பார்த்துப் பேசியிருக்கிறேன். கடைசியாக அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தடம் பத்திரிகையில் அவரைப் பற்றி பேட்டி ஒன்று வந்திருந்தது. அது குறித்து நான் சொன்னபோது அவருக்கு அது தெரியவில்லை. அந்தப் பத்திரிகை பாண்டிச்சேரி போய்ச் சேர்வதற்கு முன்னரே நான் குறிப்பிட்டிருந்தேன். ஒரு சிறுவனின் குதூகலத்துடன் அவர் அந்தப் பேட்டியைப் பற்றி என்னிடம் விஜாரித்துக்கொண்டிருந்தார்.
இன்று திரிசடை என்ற கவிஞரின் கவிதைப் புத்தகத்தைத் தேடிக்கொண்டு விருட்சம் நூலகத்திற்கு வந்தேன். நான் கிட்டத்தட்ட 400 கவிதைப் புத்தகங்களை என் நூலகத்தில் சேகரித்து வைத்திருக்கிறேன். ஏன் 500 கூட இருக்கும்.
நான் புத்தகம் வைத்திருக்கும் ஸ்டீல் அலமாரியின் அடித்தட்டில் ஒரு புத்தகம் எதிர்பாராத விதமாக என் கண்ணில் பட்டது. ‘மா அரங்கநாதன் படைப்புகள்’ என்ற புத்தகம்தான் அது. அதைப் பார்த்தவுடன் அடடா என்று தோன்றியது. என்னமோ அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு சிறுகதையை மா அரங்கநாதன் ஞாபகமாய்ப் படிக்க வேண்டுமென்று தோன்றியது. வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்தேன். 1021 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது.
அந்தக் காலத்தில் சிறு பத்திரிகையில் ஒரு கதை வந்தால் பெரும்பாலும் யாருக்கும் தெரியாமல் இருக்கும். அப்படியே வந்தாலும் படிப்பவர்கள் யார் என்றும் தெரியாது. அப்படியே படிப்பவர்கள் இருந்தாலும், வாய்திறந்து எழுதுபவரைப் பாராட்டவும் மாட்டார்கள். இப்படித்தான் மா அரங்கநாதன் கதைகள் பல வந்திருக்கின்றன. ஆனாலும் அவர் ஓரளவு எல்லோருக்கும் தெரிந்த எழுத்தாளர்தான்.
அவர் மொத்தப் படைப்புகள் அடங்கிய இத் தொகுதியில் அவருடைய ‘எறும்பு’ என்ற சிறுகதையைப் படித்தேன். படிக்க ஆரம்பிக்கும்போது எறும்பு பற்றி என்ன கதை எழுதியிருக்க முடியும் என்று யோசித்துத்தான் படித்தேன். ஒரு எறும்பு எளிதாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்வதைப் பற்றிய கதையா? அதாவது எறும்பு இன்னொரு இடத்திற்குப் போனாலும் அங்குள்ள எறும்பு கூட்டத்துடன் எளிதாகக் கலந்துகொண்டு விடுவதாக எழுதி உள்ளார். காலம் காலமாக பயன்படுத்தப்படும் பழமொழிகளின் அபத்தங்களைப் பற்றியும் கதை சொல்கிறது. பின் இக் கதை சொல்லி நெல்லையிலிருந்து ரயில் பயணம் தொடங்கி பட்டிணம் போகிற அவதியை வெளிப்படுத்துகிறான். அங்கு சில நாட்கள் தங்கி விட்டுத் திரும்பவும் ஊருக்குக் கிளம்புகிறான். அங்குள்ள எறும்பு ஒன்று அவன் வேட்டியில் ஏறி இருந்தது என்று முடிக்கிறார்.
இந்தக் கதையில் ஒரு வரி வருகிறது.
‘குறிஞ்சி நிலம் ஏற்பட்டு விவசாயம் மலராத காலத்திலேயே தோன்றிய அந்த மொழியில் அவன் பேசி பதிலையும் பெற்றாலும் புரியாத நிலை. அப்போதே தோன்றி மறைந்தது அந்த வெறுப்பு.’ என்று முடிக்கிறார். இந்தக் கதையை முடிக்கும்போது, இது எறும்பைப் பற்றிய கதையா அல்லது எறும்பை முன்னிறுத்திக் கதை சொல்லியின் கதையா என்பது யோசிக்க வேண்டி உள்ளது. வழக்கம்போல மா அரங்கநாதனின் நுணுக்கம் மிகுந்த கதை.
இன்னொரு இடத்தில் ஆசிரியர் கூற்று வெளிப்படுகிறது. ‘பிறபொக்கும் எல்லாம் உயிர்க்கும் சொன்னவரா மனுதர்ம சாத்திரப்படி நிற்க என்று சொல்லுவார். வேடிக்கைதான். இது பரிமேலழகர் அருளிச் செய்த உரை. அவர் ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர். நிற்க.’
மா அரங்கநாதன் நினைவாக அவர் பெயரில் ஒவ்வொரு வருடமும் பரிசு வழங்க உள்ளனர் அவர் குடும்பத்தினர். இந்த ஆண்டு பரிசு பெறும் எஸ். சண்முகத்திற்கும், கவிஞர் ரவி சுப்பிரமணியத்திற்கும் என் வாழ்த்துகள்.
எப்படி எறும்பு வேட்டியில் ஒட்டிக்கொண்டதோ அதேபோல் என் நினைவில் மா அரங்கநாதனின் கதையும் ஒட்டிக்கொண்டு என்னைத் திரும்பத் திரும்ப படிக்க வைத்துவிட்டது. அடடா என்று சொல்லாமல் என்ன சொல்வது.