நண்பனுக்கு
கு ப ராஜகோபாலன்
ஓயாமல் எண்ணியும் பேசியும்,
சளைத்துப் போய்விட்டோம் அல்லவா?
வார்த்தையை வைத்து வாதாடி
வீண்வித்தியாசம் கொண்டோம், போதும்!
மாயையும் தத்துவமும் என்ன
என்று தெரியவே வேண்டாம் ;
கண்கண்ட சுகத்தைக் கடைந்து
உண்போம், இனிமேல், வா!
இல்வாழ்க்கை நதி வரண்டு
மணலாகும் மரணம் வரை
அதன் கரை புரளும் வெற்றியை
ஒப்புக் கொள்வோம், அதனாலென்ன?
உயிரின் இன்ப ஊழியத்தில்
அடிமைகளாவோம், பாதகமில்லை!
ஆத்மா, பரமாத்மா – இந்தப் பேச்சு –
யுகம் யுகமாக, காது துளைத்துப்போச்சு!
அது வேண்டாம் நமக்கு !
மதுக் கிண்ணத்தைப் பற்றி பேசினானே –
அவன் யார் ? – உமர்கயாம் –
அவனைத் தொடர்வோம், அப்பா!
நன்றி : சிறிது வெளிச்சம் – கு ப ராஜகோபாலன் – வாசகர் வட்டம் – 14 தணிகாசலம் செட்டி ரோடு, தியாகராய நகர், சென்னை 17 -வெளிவந்த ஆண்டு : 1969 – விலை : ரூ.7