‘எழுத்தாளர்கள் நூல்கள் நிகழ்ச்சிகள்’ என்ற அசோகமித்திரன் புத்தகம் ஒன்றை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன்.
‘உதிர்ந்த மணி’ என்ற கட்டுரையில் எம் வி வெங்கட்ராமன் பற்றி இப்படி எழுதியிருக்கிறார் : அவருடைய நெருக்கடி மிகுந்த நாட்களில் நாங்கள் இருவரும் ஒரு திருவல்லிக்கேணி காபிக்கடையில் காபி அருந்தினோம். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே காபிக்கடையில் காபி அருந்தினோம். இம்முறை அவரே üüஇப்போது சிரமம் இல்லை, கவலைப்படாதே,ýý என்றார். ஆனால் எனக்கு அவரை எப்போது நினைக்கும்போது இருட்டில் புத்தக அடுக்குகள் மத்தியில் குகைவாசியாக அவர் எழுதிக்கொண்டிருந்த காட்சிதான் திரும்பத் திரும்ப வருகிறது.
********
தி நகர் செல்லும்போது கண்ணதாசன் சிலை அருகில் சிக்னலுக்காக வண்டியை நிறுத்துவேன். அப்போது ஒரு நிமிடம் இடது பக்கம் பார்ப்பேன். பலமுறை அசோகமித்திரனைப் பார்க்க இப்படித்தான் செல்வேன்.
********
புதுமைப்பித்தன் இருந்த நாளிலும் அவர் மறைந்த பின்னரும் அவரைப் பற்றி அலுப்பு சோர்வு இல்லாமல் வெளிமாநிலத்தவருக்கு எடுத்துச் சொன்னவர் க நா சு அவர்கள். க நா சு எழுதத் தொடங்கிய 1930களிலிருந்து தமிழ் எழுத்தின் தரம் உலகின் இலக்கிய சிகரங்களுக்கு இணையானதாக இருக்கவேண்டுமென்பதை அவர் வலியுறுத்த வண்ணம் இருந்தார்.
********
அசோகமித்திரனை நான் பார்க்கச் சென்றாலும் சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டிருப்பேன். ஒரு முறை ஒரு தாளில் நாடகம் எழுதிக்கொண்டிருந்தார். அதை முடிக்கவில்லை. அவரே சொன்னார் நாடகம் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று. எனக்கு ஆச்சரியம். 86 வயதில் அவருக்கு எழுத வேண்டுமென்ற எண்ணம் இருந்துகொண்டிருக்கிறது என்றுதான். அந்த நாடகத்தை எழுதி விருட்சம் பத்திரிகைக்குக் கொடுத்தார்.
************
அந்த நாளில் இத்தாலிய எழுத்தாளர் ஆல்பெர்ட்டோ மொராவியா பிரபலமாக இருந்தார். அவருடைய நாவல்களுக்கு மிகச் சிறப்பான ஆங்கில மொழி பெயர்ப்புகள் வெளிவந்து கொண்டிருந்தன. அவருடைய பெயர் திரும்பத் திரும்ப நோபல் பரிசுப் பரிசீலனையில் இருந்தது. ஆனால் அந்தக் குழுவில் இருந்த ஒருவர் மொராவியா மனித ஒழுக்கத்தைக் குலைக்கும் எழுத்தாளர் என்று சொல்லிக் கடுமையாக எதிர்த்து வந்தார். இலக்கியவாதிகள் மத்தியில் பிரபலமாக இருந்த மொராவியாவை இன்று படிப்பவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம். ஆனால் ஜானகிராமனுக்கு மொராவியாவைப் பிடிக்கவில்லை.
************
ஆர்கே சென்டரில் இரண்டு நாட்கள் முன் பேசிய சாருநிவேதிதா அசோகமித்திரன் எழுத்துக்களை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லவேண்டுமென்று குறிப்பிட்டார். இதைத் தீவிரமாக ஒருவர் எடுத்துச் செய்ய வேண்டும். சாரு நிவேதிதா நாவலை ஆங்கிலப் படுத்தி மார்ஜினல் மேன் என்ற புத்தகத்தை ஜøரோ பதிப்பகம் கொண்டு வந்துள்ளனர். புத்தகத்தை ஆங்கிலப் படுத்துவதில் ஒரு குழுவாக இருந்து செயல்படுகிறார்கள். அவர்கள்தான் அசோகமித்திரன் புத்தகங்களையும் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். செய்வார்கள் என்று நம்புகிறேன்.
************
பிச்சமூர்த்தி சிஷ்யர்களை உருவாக்குவதில் அக்கறை காட்டவில்லை. அவருடைய அந்தரங்கம் அவருக்கு மிகவும் முக்கியம்.அவரைப் பற்றி என்ன எழுதினாலும் எல்லாம் புறவாழ்க்கைத் தகவûல்களைத்தான் பதிவு செய்ய முடிகிறது.
*****************
நவீன விருட்சம் என்ற பத்திரிகையால் நான் பல எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தேன். வெங்கட் சாமிநாதனுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு முறை, ‘உன் குருநாதர்கள் ஞானக்கூத்தன், அசோகமித்திரன் எல்லாம் என்ன சொல்கிறார்கள்’ என்று கேட்டார். எனக்கு அவர் கேட்ட விதம் பிடிக்கவில்லை. ‘அவர்கள் இருவரும் எனக்கு குருநாதர்கள் இல்லை. என்னையும் அவர்கள் சிஷ்யராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,’ என்றேன். வெங்கட்சாமிநாதன் கடைசிவரை இதை நம்பவில்லை. என்னுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார்.
*************
சிறந்த இந்தியக் கவிஞர்களில் ஒருவரான டாம் மொரேஸ், இன்றும் அவருடைய எல்லாப் படைப்புகளையும் கையாலேயே இங்க் பேனாவால் எழுதுவதாகக் கூறுகிறார். இது போன்ற ஒரு சிறு கூட்டம் இன்றும் இருக்கிறது.
************
அசோகமித்திரன் மறைந்து ஓராண்டு ஆனாலும் அவர் இன்னும் இருந்து கொண்டு இருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. கண்ணதாசன் சிலை முன்னால் நான் திரும்பி இடதுபக்கம் பார்க்காமல் போக மாட்டேன். அது அசோகமித்திரனுக்கு நான் செலுத்தும் மரியாதை.
(Photo taken by Click Ravi)