நகுலன் மதியம் டீ குடிக்க வந்தார்….

நானும் நண்பரும் மதியம் அசோக்நகர் சரவணபவன் ஓட்டலில் காப்பி குடிக்கச் சென்றோம். அப்போது ஒரு வயதானவரைப் பார்த்து அசந்து விட்டேன். எனக்கு உடனே ஒருவர்தான் ஞாபகத்திற்கு வந்தார். நகுலன். அவர் எப்படி இங்கே வந்தார். அவர்தான் எப்போதோ போய்விட்டாரே என்று தோன்றியது. என்னால் நம்ப முடியவில்லை. நகுலன் மாதிரி அந்த வயதானவர் தோற்றம் அளித்தார்.
பக்கத்தில் என்னுடன் இருந்த நண்பரைப் பார்த்துக் கேட்டேன். ‘இவரைப் பார்த்தால் நகுலன் மாதிரி தெரியவில்லையா?’ என்று.
நண்பர் ஒன்றும் சொல்லவில்லை. நகுலன், அசோகமித்திரன், ஞானக்கூத்தன், பிரமிள், ஐராவதம், வெங்கட் சாமிநாதன், ஸ்டெல்லாபுரூஸ் என்று பலர் இறந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் என் நினைவில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்தப் பெரியவரைப் பார்த்தவுடன் நகுலன் மாதிரி இருந்தார்.
அவரைப் பார்த்து கேட்டேன் : “உங்கள் பெயர் டி கே துரைசாமியா?ýý
“இல்லை. மோகன்.”
என்னால் நம்ப முடியவில்லை. எப்படி இவர் நகுலன் மாதிரி தோற்றம் அளிக்கிறார் என்று.
“ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளட்டுமா?” என்று கேட்டேன்.
“சரி,” என்றார்.
“என் நண்பர் மாதிரி நீங்கள் இருக்கிறீர்கள்,” என்றேன்.
“உலகத்தில் ஏழு பேர்கள் அப்படி இருப்பார்கள்,” என்றார் அவர்.
“ஏழு பேர்கள் இல்லை. இரண்டு பேர்கள்,” என்றேன் நான்.
போட்டோ எடுத்தேன். சிறிது நேரம் கழித்து, அந்தப் பெரியவர் என்னிடம் கேட்டார். “ஒரு டீ வாங்கித் தர முடியுமா?” என்று.
ஒரு டீ வாங்கிக் கொடுத்தேன். அவர் குடித்துக்கொண்டிருந்தார் நான் போய் வருகிறேன் என்று விடை பெற்றுக்கொண்டேன்.
நகுலனுடன்தான் நான் பேசினேனா என்ற சந்தேகம் வந்தது. என்னுடன் வந்த நண்பர் இது குறித்து ஒன்றும் சொல்லவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன