என் அறையில் என் கண் முன்னால் பல புத்தகங்கள் இருக்கின்றன. எந்தப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படித்தாலும் படித்துக்கொண்டே போகலாம். ஆனால் எதாவது ஒன்றை எடுத்து கொஞ்சம் புரட்டிப் பார்த்தாலும் பின் அதை வைத்துவிட்டு வேறு எதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தோன்றும். மெதுவாகப் படிக்கலாமென்று விட்டுவிடத் தோன்றும்.
ஆனால் ஒரு வண்டியில் வெகு தூரம் செல்லும்போது எதாவது புத்தகங்களை பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்று தோன்றுகிறது. மேலும் இரவு நேரங்களில் இதுமாதிரியான வண்டிகளில் பயணம் செய்யும்போது தூக்கம் சிறிது கூட வருவதில்லை. நம் பக்கத்தில் உள்ள பயணிகள் இதுமாதிரியான யாத்திரிகளில் பழக்கமானவர்கள் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருப்பார்கள். அது போராகத் தோன்றுகிறது. அதனால் இந்த முறை இரவு பயணத்தை தவிர்த்துவிட்டு பகல் பயணத்தை ஏற்படுத்திக்கொண்டேன்.
இந்தப் பயணத்தில் போகும்போதும் வரும்போதும் நான் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் படித்துக்கொண்டே போனேன். நான் எடுத்துக்கொண்ட புத்தகங்களைப் படித்துவிட வேண்டுமென்ற துடிப்பும் என்னிடம் இருந்தது.
‘அது ஒரு நோன்புக்காலம்,’ என்ற கதை. சித்திக் அவர்கள் எழுதியது. தினமணி-எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை. 4.3.2018 தினமணிகதிரில் வெளிவந்துள்ளது. வஹிதா மாமிக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு பெண் பிள்ளைகள். ஒரு ஆண் பிள்ளை. மூவரும் வயதான அம்மா வைத்துக்கொள்ள விரும்பவில்லை. விரட்டி விடுகிறார்கள். அக் குடும்பத்தின் நண்பர் ஒருவர் வஹிதா மாமியை அவருடைய பிள்ளைகள் வீட்டில் கொண்டு சேர்க்கப் போராடி தோல்வி அடைகிறார். இதைச் சிக்கலில்லாமல் எழுதியிருக்கிறார் சித்திக். குரான், நபிகள் நாயகம் சொல்வதையெல்லாம் எடுத்துக் கூறியும் அவர்கள் மனம் மாறுவதில்லை. இந்தக் கதையைப் படிக்கும்போது ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு முஸ்லீம் பெரியவரை அவர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஜி எஸ் டி தெருவில் அனாதையாக விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அவர் திரும்பவும் அவருடைய பையன் வீட்டிற்குப் போக விரும்பவில்லை. இது உண்மை சம்பவம்.
இப்படி புத்தகங்கள் பத்திரிகைகள் புரட்டியபடி நானும் மனைவியும் மயிலாடுதுறைக்கு மதியம் போய்ச் சேர்ந்தோம். அடுத்தநாள் அசிக்காடு என்ற கிராமத்தில் உள்ள எங்கள் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றோம். அங்குள்ள வீரன்தான் எங்கள் குல தெய்வம். அப்பா இறந்துபோய் ஒரு வருடம் கழித்து குலதெய்வம் கோயிலுக்குப் போக வேண்டுமென்று போனோம்.
வீரன் பாதத்தில் என் முழுச் சிறுகதைத் தொகுப்பை வைத்து வணங்கினேன். எல்லார் மனதிலும் புகுந்து என் கதைகளைப் படிக்க அருள் புரிவாய் ஆக என்று மனதில் நினைத்து நமஸ்கரித்தேன். வேடிக்கையாகத்தான் வேண்டிக்கொண்டேன். வீரனைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டும். முதலில் வீரன் ஒரு பனை மரத்தின் கீழே கிராமத்தின் எல்லையில் 6 செங்கற்களில் குடியிருந்தார். அதன்பின அவர் அருளால் கோயிலில் குடியிருக்கிறார்.
மயிலாடுதுறையில் இருக்கும்போதுதான் காமதேனு என்ற பத்திரிகையைப் பற்றி கேள்விப்பட்டேன். ஹிந்து பத்திரிகையிலிருந்து வருகிறது. முதலில் முகநூல் வாயிலாக பத்திரிகையைப் பற்றி அறிந்து கொண்டேன். அங்குள்ள கடைகளில் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. கிடைத்தது. உடனே வாங்கியும் விட்டேன். எனக்கு எப்போதும் எதாவது பத்திரிகை புதிதாக வந்தால் அதன் முதல் பத்திரிகையை வாங்கிவிட வேண்டும் என்று தோன்றும். அப்படி வாங்கிய பத்திரிகைகளை நான் தொலைத்தும் விட்டிருக்கிறேன். இந்த முதல் பத்திரிகையை ‘விருட்சம் நூல் நிலையத்தில்’ பத்திரப் படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.
அடுத்தநாள் நான் வைதீஸ்வரன் கோயிலுக்குச் சென்றோம். புதன் கிழமை என்பதால் கோயிலில் கூட்டமே இல்லை. உற்சாகமாக இருந்தது. நான் இருந்த இரண்டு நாட்களில் என் நண்பர் குடும்பமும், உறவினர் குடும்பமும் எங்களை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். அவர்களுக்கு என் நன்றியைக் குறிப்பிடுவது அவசியம். வழக்கம்போல் ஒரு நாள் காலை நேரத்தில் ராஜன் தோட்டத்திற்குச் சென்றேன். பெரிய இடமாக இருந்தது. ஒரு முறை சுற்றி வர 20 நிமிடங்கள் பிடித்தது. வழக்கம்போல் சந்திக்கும் இன்ஜினியர் நண்பரைச் சந்தித்தேன். உற்சாகமான மனிதர். தினமும் கிட்டத்தட்ட 2 மணி நேரம்வரை நடப்பது, ஓடுவது என்று பலவிதமான உடற் பயிற்சிகளை செய்துகொண்டிருப்பார்.
மதியம் டே எக்ஸ்பிரஸ் சோழனைப் பிடித்து வந்து கொண்டிருந்தேன். அன்று வியாழக்கிழமை. ஆனந்தவிகடன் பத்திரிகையும் வாங்கிக்கொண்டேன். திரும்பவும் டிரெயினில் வந்து கொண்டிருக்கும்போது கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். நான் விருட்சம் 105வது கொண்டு வரப்போகிறேன். இந்த மாதத்திற்குள் எப்படியாவது முடித்துவிட நினைத்திருக்கிறேன். இந்த முறை விருட்சம் இதழிற்கு ஏகப்பட்ட கதைகள் கவிதைகள் குவிந்திருக்கின்றன. 80 பக்கங்களுக்குள் எல்லாவற்றையும் அடக்க வேண்டும். இது ஒரு சவால். என் பத்திரிகைக்கு பிரபலமான எழுத்தாளர் பிரபலமில்லாத எழுத்தாளர் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. ஆனால் பிரபலமான எழுத்தாளர்கள் என் பத்திரிகையில் எழுதுவதில்லை. சுஜாதா என் பத்திரிகையைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார். அவரைப் பார்த்து ஒரு முறை, ‘என் பத்திரிகைக்கு ஒரு கதை எழுதித் தாருங்களேன்,’ என்று கேட்டிருக்கிறேன். அவர் அதைக் காதில் வாங்கிக் கொண்ட மாதிரியே தெரியாது. அவர் எழுதியும் தந்ததில்லை. ஆனால் என் பத்திரிகையைப் பற்றி உயர்வாகவே பேசுவார். அசோகமித்திரன் அப்படி இல்லை. ‘சார் எதாவது எழுதி அனுப்புங்கள்,’ என்பேன். ‘என்ன வேணும்?’ என்று கேட்பார். கதை கேட்டால் கதை. கட்டுரை கேட்டால் கட்டுரை. ஆனால் அவரிடம் நான் கட்டுரைதான் கேட்பேன். அவர் உடனே 2 நாட்களில் எழுதி அனுப்பி விடுவார். பின் அனுப்பி விட்டேன் என்றும் கூறுவார்.
இதை டைப் அடிக்கும்போது என் டேபிளில் ‘எது இலக்கியம்?’ என்று அசோகமித்திரன் 14.12.2008 அன்று எழுதிய கட்டுரை இருக்கிறது. 4 பக்கங்களில் எழுதி அனுப்பியிருக்கிறார். இந்த முறை விருட்சம் சந்தாவைப் புதுப்பிப்பவர்களுக்கும், புதிதாகச் சந்தா அனுப்புவர்களுக்கும் இந்தக் கட்டுரையின் ஜெராக்ûஸ அனுப்ப யோசித்துக்கொண்டிருக்கிறேன். இதை எல்லோரும் வரவேற்பார்களா அதனால் சந்தா அதிகமாகச் சேர்ந்து விடுமா அதெல்லாம் தெரியாது. ஏன் இதுமாதிரியான செய்கை கூட. முட்டாள்தனமாக இருக்கும்.
பா ராகவன், ‘ஆதி வராகம்’ என்ற கதையை எழுதி அனுப்பியிருக்கிறார். விருட்சத்திற்குத்தான் இந்தக் கதை என்று கூறிவிட்டார். அந்தக் கதையை அவ்வளவு சிறப்பாக எழுதி இருக்கிறார். ‘இந்தக் கதையை நீங்கள் வேற பத்திரிகைக்கு அனுப்பினால் அவர்கள் நிச்சயம் பிரசுரம் செய்வார்கள்,’ என்றேன். ‘இல்லை. விருட்சத்திற்குத்தான்,’ என்று கூறிவிட்டார்.
(இன்னும் வரும்)
//இந்த முறை விருட்சம் சந்தாவைப் புதுப்பிப்பவர்களுக்கும்,// already renewed and emailed. Hope you received.