ஸ்கூட்டருக்கு மாறிவிட்டேன்……

ஆரம்பத்தில் நான் ஒரு ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்கினேன். அதை வைத்துக்கொண்டு சென்னையில் எல்லா இடங்களுக்கும் சுற்றுவேன். அலட்சியமாக மாம்பலத்திலிருந்து மயிலாப்பூருக்குச் செல்வேன். மயிலாப்பூரில் உள்ள நண்பருக்கு என் மீது ஆச்சரியம். திருவல்லிக்கேணியில் உள்ள இலக்கிய நண்பர்களைப் பார்ப்பேன். உண்மையில் நான் சைக்கிளை ஓட்டிக்கொண்டு செல்வதில்தான் ஆர்வம். இதைச் சாக்காக வைத்துக்கொண்டு அவர்களைப் பார்ப்பேன். என்னால் முடிகிறது என்ற சந்தோஷம். ஒரு முறை என் மனைவியை பின்னால் உட்கார வைத்து ஓட்டிக்கொண்டு போனேன். ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கிய போது மனைவி கீழே விழுந்து விட்டாள். எனக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது.
சைக்கிள் மோகம் கொஞ்சம் கொஞ்சமாகப் போய் ஒரு லாம்பி ஸ்கூட்டர் வாங்கினேன். உண்மையில் எனக்கு லாம்பி ஸ்கூட்டர் வாங்கப் பிடிக்கவில்லை. அப்போதெல்லாம் பஜாஜ் ஸ்கூட்டர்கள் அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது. வெஸ்பா கூட. அதனால் லாம்பி வாங்கினேன். பல ஆண்டுகள் லாம்பி வண்டியில் பறந்து கொண்டிருந்தேன். ஒரு முறை ஒரு சைக்கிள் எதிரில் வந்த லாம்பியை ஒரு தட்டுத் தட்டியது. அவ்வளவுதான் லாம்பி கோணிக்கொண்டது.
ரொம்ப வருடம் கழித்து ஸ்கூட்டரிலிருந்து விடுதலைப் பெறலாம் என்று தோன்றியது. ஒரு பைக் வாங்கினேன். கவாஸôகி பைக். அதிலிருந்து நான் பைக் வாசியாகிவிட்டேன். பைக் பல விதங்களில் சௌகரியம். உயரமாக இருப்பதால்என் உயரத்திற்கு ஏற்ற மாதிரி பைக் காட்சி அளித்தது. லாம்பியை ஒழித்துக் கட்டிவிட்டு பைக்கில் தாவிக்கொண்டிருந்தேன். பல ஆண்டுகள் ஏன் இப்போது கூட பைக்கில்தான் போய்க் செகாண்டிருக்கிறேன். ரிட்டையர்டு ஆன பிறகு கார் வாங்கி ஓட்டலாமென்று நானோ வண்டியை வாங்கி, அழகு பதுமையாக பத்திரமாக வைத்திருக்கிறேன்.
இப்போது என்னிடம் இரண்டு பைக்குகள் சேர்ந்து விட்டிருந்தன. ஒரு பைக் வாங்கி 12 ஆண்டுகள் ஓடிவிட்டன. அதை மாற்றலாம் என்று யோசித்தபோது திரும்பவும் ஸ்கூட்டர் வாங்கினால் என்ன என்று தோன்றியது. பிளஷர் என்ற ஹ÷ரோ ஸ்கூட்டர் வாங்கினேன். எனக்குப் பலமாகச் சந்தேகம். என்னால் ஸ்கூட்டர் ஓட்ட முடியுமா என்று. முதலில் நடு ஸ்டான்டை ஸ்கூட்டரில் போடுவதற்கு சிரமமாக இருக்கிறது. அதனால் சைட் ஸ்டேன்ட்டைத்தான் பயன் படுத்துகிறேன். எனக்கு வயது 64 என்பதால் இந்தச் சந்தேகம். நேற்றுதான் நான் ஸ்கூட்டரை வாங்கி வீட்டில் வைத்துள்ளேன். 20 கிலோ மீட்டர் வேகத்தில் ஸ்கூட்டரை ஓட்டுகிறேன்.
இப்போதெல்லாம் பல சொளகரியங்கள் ஸ்கூட்டர் ஓட்ட இருப்பதைப் பற்றி ஆச்சரியம். கையிலே பிரேக் போடலாம். நம் விருப்பப்படி ஸ்பீடாகவும் ஸ்பிட் குறைவாகம் ஓட்டலாம். ஆனால் இன்னும் தெருவில் வேகமாக ஓட்டப் பழக வேண்டும். பைக் மாதிரி வரவில்லை. மஞ்சள் நிறத்தில் ஸ்கூட்டர் வாஙகியிருக்கிறேன்.
ஆனால் என்னால் இனிமேல் சைக்கிள் வாங்கி ஓட்ட முடியாது. அது வருத்தம்தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன