அமர்ந்திருக்கும் நெடுங்காலம்
ஸ்ரீஷங்கர்
நீ என்பது
எனக்கு
துலங்கும்
வெம்மைமிகு தாபச் சொற்கள்
என்னில் புத்துயிர்களை ஈணுவது
நான் என்பது உனக்கு
உனது நீர்மையில்
அடியுறக்கம் கொள்ள அனுமதித்திருக்கும் மீன்
சிலவேளை
சிறு சலனம்கூட அற்ற
பூட்டிய கதவுகளுக்குக்கீழ்
அமர்ந்திருக்கும் என் நெடுங்காலமும்தான் நீ
நானென்பது
உன் விருப்பத்துக்கென குற்றங்கள் புரிய
நீ நியமித்திருக்கும் ஒப்பந்தக்காரன்
எனக்கு நீ
உறங்கும் என் குறியின்மேல்
அலைந்து கொண்டிருக்கும் பூரான்
அதன் துளைக்குள் பரபரத்து நுழைவது
மேலும்
நீ என்பது எனக்கு
தனித்து கரையில் அமர்ந்திருக்கும்
பசித்த உயிரை
இரை காட்டி அழைக்கும் தெப்பம்
நானோ
நீ தரும் மாமிசம் உண்டு
உயிர்த்திருக்குமுன் வளர்ப்பு விலங்கு
நீயோ
என்னைத் தெரிவிக்கமுடியாதபோது
தரித்தயென் ஆடைகளிலிருந்து
கழற்றிவிட்டுக்கொள்ளும் முழுப்பொத்தான்களும்தான்
நானுனக்கென்பது
உனை மீட்டெடுக்கும் கனவுகளின்மேல் நீ
உருவாக்கிக்கொண்டிருக்கும்
சித்திரத்தய்யல்
நீயெனக்கென்பது
உன்னோடு கிடந்து
நாம் இல்லாது போக விரும்பும் புலன்களின் காமத்தை
ஆராதிப்பவள்
மற்றும்
எனது வீடு பேறு
நன்றி : திருமார்புவல்லி – ஸ்ரீஷங்கர் – கவிதைகள் – ஆதி பதிப்பகம் – மாரியம்மன் கோயில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை – விலை ; ரூ.60 செல் : 999488000