நடிகை ஸ்ரீ தேவியின் மரணத்தை அறிந்தவுடன் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. ஸ்ரீதேவி என்ற நடிகை நடித்தப் பல படங்களைப் பார்த்து ரசித்தவன். அவருக்குக் குழந்தைத் தனமான ஒரு முகம். அட்டகாசமான நடிப்புத் திறன் கொண்டவர். படம் பார்த்துவிட்டு வந்தபின்னும் சில தினங்கள் அவர் ஞாபகம் இருந்துகொண்டு இருக்கும். நம்ம் வீட்டில் உள்ள ஒரு பெண்மணி என்று தோன்றும். ரஜனியுடனும் கமல்ஹாசனுடன் அவர் நடித்த 16 வயதினிலே என்ற படத்தை என்னால் மறக்க முடியாது. இப்படி கவர்ச்சிகரமான ஒரு தமிழ் நடிகை மும்பையில் ஹிந்திப் படங்களில் நடிக்கப் போய்விட்டாரே என்று தோன்றும். பின்பு அவர் மும்பையிலேயே திருமணம் செய்துகொண்டு இருந்துவிட்டார் என்ற செய்தி எட்டியபோது, அந்த நடிகையைப் பற்றிய கவனம் சற்று கலைந்து போயிற்று. நேற்று இரவு அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்ற செய்தியை அறிந்தபோது வருத்தமாக இருந்தது. 54 வயதுதான்.
மாரடைப்பால் ஏற்படும் மரணம் குறித்து என் சிந்தனை குதித்து ஓடிற்று. நான் பந்தநல்லுரில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது என் அலுவலகத்தில் பணிபுரியும் காஷ÷யர் ஒருநாள் காலையில் ஒரு மாதிரியாக இருந்தார். கிராமத்தில் மருத்துவரைப் பிடிப்பது என்பது கஷ்டம். ஒரு மருத்துவரைப் பிடித்து அழைத்துக்கொண்டு வந்தோம். அவர் உடனே காஷ÷யரை கும்பகோணம் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போகும்படி அறிவுரை கூறினார். உடனே கும்பகோணம் கிளம்பினோம். நான்தான் முன்னின்று அவரை அழைத்துக்கொண்டு போனேன். நான் என்ன நினைத்தேன் என்றால் காலையில் அவர் தக்காளி சாதம் சாப்பிட்டதாகச் சொன்னார் என்பதால் அது அவருடைய வயிற்றை ஒரு கலக்கு கலக்குகிறது என்று நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை. அவருக்கு தீவிர மாரடைப்பு. மருத்துவமனையில் அவரைக் காப்பாற்றி விட்டார்கள்.
அப்போது நான் தனியாக மயிலாடுதுறையில் ஒரு வீடு எடுத்துத் தங்கியிருந்தேன். இதுமாதிரியான சம்பவம் இயற்கையானது. ஆனால் நம் மனம் சஞ்சலம் அடையாமல் இருப்பதில்லை. அதுவும் தனியாக இருக்கும்போது அதி தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்போம். நானும் அப்படித்தான். அப்போதுதான் யோசித்தேன். ஏன் இப்படி குடும்பத்தை விட்டு பதவி உயர்வு என்ற போர்வையில் இப்படி மாட்டிக்கொண்டோம் என்று. கார்லஸ் காஸ்டினேடா ஒரு புத்தகத்தில் கூறுகிறபடி மரணம்தான் ஒருவனுக்கு எதிரி என்ற எண்ணம் எனக்குத் தோன்றிக்கொண்டிருக்கும். அதைத் தயார் நிலையில் எதிர்கொண்டு போராடுவதுதான் முக்கியம் என்று தோன்றும்.
என் நண்பர் சந்தியா நடராஜன் ‘இனி இல்லை மரணபயம்’…என்ற புத்தகத்தை தொகுத்து உள்ளார். அதில் அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தைக் குறிப்பிட்டுள்ளார். பலர் கூறிய மரண அனுபவங்களை புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார். 120 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை . ரூ.110. அப் புத்தகத்தில் வெளியான ‘கால வரிசையில்’ என்ற தலைப்பில் வெளிவந்த கதையுடன் இதை முடிக்கிறேன்.
‘கால வரிசையில்’
ஜென் துறவி சென்காயைப் பார்க்க ஒரு பணக்காரன் வந்தான். தனக்கு ஒரு அழகிய வாசகமொன்றை அலங்காரமாய் எழுதித் தரவேண்டுமென்று சென்காயிடம் கேட்டான்.
அப்பா மரணம், மகனின் மரணம், பேரனின் மரணம் என்று ஒரு தாளில் எழுதிக் கொடுத்தார் துறவி.
பணக்காரனுக்குக் கோபம் வந்தது. ‘இப்படி ஒரு அமங்கள் மான வாசகத்தையா எழுதித் தருவது. நீர் என்ன துறவி?” என்று சத்தம் போட்டான்.
துறவி சொன்னார்: உனக்கு முன் உனது பிள்ளைகள் இறந்தால் அது எத்தகைய புத்திர சோகம். உனது மகனுக்கு முன் உனது பேரன்கள் இறந்தால் நீ எத்தகைய கொடிய சோகத்திற்கு ஆட்படுவாய். உனது குடும்பத்தினர் ஒரு தலைமுறைக்குப் பின் அடுத்த தலைமுறையினர் என்று காலக் கிரமப்படி இறந்தனர் என்றால் அது நற்பேறு அல்லவா?
‘ஆமாம். அர்த்தம் புரிகிறது’ என்றான் பணக்காரன்.