என்னுடைய முழு சிறுகதைத் தொகுதி வாங்குபவர்களுக்கு சென்னையில் இருந்தால் அவர்கள் வீட்டிற்குச் சென்று புத்தகம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அப்படி சிலருக்குக் கொடுத்துக்கொண்டும் இருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை அன்று மடிப்பாக்கத்தில் உள்ள பெண் வீட்டிற்குச் சென்றுவிட்டு வரும் வழியில் என் அலுவலக நண்பர் சுரேஷ் அவர்களிடம் என் புத்தகம் ஒன்றை கொடுக்கச் சென்றேன். அவர்கள் வீட்டு மாடிப்படிக்கட்டிற்குப் போகும்போது ஜாக்கிரதையாகப் போக வேண்டும். தடுமாறி விழ தரை ஒரு விதமாக ஏமாற்றும். அவரிடமும் புத்தகம் கொடுத்துவிட்டு ஷண்முக சுந்தரம் என்ற நண்பரை ஆதம்பாக்கத்தில் சந்தித்து கதைப் புத்தகம் கொடுக்கச் சென்றேன்.
புக்கிஸ் என்ற பெயரில் ஒரு புத்தகக் கடை வைத்திருக்கிறார் ஷண்முக சுந்தரம். ஒரே ஆச்சரியம். ஏகப்பட்டப் புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கிறார். பளீரென்ற விளக்குகள் வெளிச்சத்தில். இரும்பு அலமாரிகளில் பெரும்பாலும் தமிழ் புத்தகங்கள்.. வாடகை நூல் நிலையம் வைத்து நடத்துகிறார். அலுவலகம் போய்விட்டு வந்து மீதி நேரத்தில் நடத்துகிறார். எல்லோரும் வந்திருந்து புத்தகங்களை எடுக்கிறார்களா என்று கேட்டேன். இல்லை என்கிறார். யாராவது வந்தால் இப்போது பாக்கெட் நாவல்கள் எழுதும் பெண் எழுத்தாளர்கள் புத்தகம்தான் வாங்குகிறார்கள் இல்லாவிட்டால் பாலகுமாரன் புத்தகங்கள் எடுக்கிறார்கள் என்றார். நான் நடத்திய விருட்சம் இலக்கியக் கூட்டத்திற்கெல்லாம் வந்திருப்பதாக சொன்னார். என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி என்றார். மேற்கு மாம்பலத்தில் வைத்திருக்கும் என் நூல் நிலையத்திற்கு வந்திருந்து அதைச் சரி செய்ய உதவும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன். வருகிறேன் என்றார். ஆனால் ஒன்று மட்டும் சொல்லவில்லை. அந்த நூல்நிலையத்தில் ஒருவர் மட்டும்தான் மெம்பர் என்றும், அது நான் மட்டும்தான் என்றும் அவரிடம் சொல்லவில்லை.