ஆற்றங்கரை வணிகனின் மனைவி
ஒரு கடிதம்
என் தலைமயிற் வருடாக நெற்றியில் வெட்டியிருக்கும் போதே
வாசல் முற்றத்தில் பூ பறித்து, நான் விளையாடியிருக்க
நீர் வந்தீர். மூங்கில் பொய்கால் ஏறி குதிரை விளையாடி வந்தீர்.
நீலக் கொடிமுந்திரிகளை வைத்து விளையாடிக்
கொண்டு நான் இருக்கும் இடத்தைச் சுற்றி நடந்தீர்.
நாம் சொக்கான் கிராமத்திலேயே வாழ்ந்து வந்தோம்.
இரு சிறுவர்கள் வெறுப்பும் சந்தேகமும் இன்றி
பதினாலு வயதில் ஐயனே உம்மை மணம் புரிந்தேன்
நான் ஒரு போதும் சிரிக்கவில்லை, நாணத்தினால்
தலை குனிந்து சுவரைப் பார்த்து நின்றேன்.
ஆயிரம் தடவை அழைத்தும் ஒரு பொழுதாவது நான் திரும்பிப்
பார்க்கவில்லை.
பதினைந்து வயதில் முகம் சுளிப்பதை நிறுத்தினேன்
என் தூசு உங்கள் தூசுடன் கலக்க விரும்பினேன்
என்றைக்கும் என்றைக்கும் என்றென்றைக்குமாக
ஏன் நான் வெளியைப் பார்க்க ஏறிவர வேண்டும்?
பதினாறில் நீங்கள் பிரிந்தீர்கள்
குமரி மறையும் நீர்ச் சுழிகள் நிறைந்த நதி வழியாக
தொலைவிலுள்ள கோடு யென்னுக்கு சென்றீர்கள்
நீங்கள் போய் மாதங்கள் ஐந்தாகி விட்டன.
மேலே குரங்குகள் சோகமாய் கரைகின்றன.
நீங்கள் போகும்போது
மனதில்லா மனதுடன் கால்களை இழுத்துச் சென்றீர்கள்
வாசலில் பாசி படர்ந்திருக்கிறது
பலவிதமான பாசிகள் அகற்ற முடியாத அடர்த்தியுடன்.
இந்த இளவேனிலில் காற்றில் இலைகள் உதிர்கின்றன
இந்த ஆகஸ்டிலேயே வண்ணத்தி ஜோடிகள் மஞ்சளித்து விட்டன.
மேற்கு தோட்டத்து புல் தரைகளில்
அவை எனக்கு úவெதனை தருகின்றன
எனக்க வயது ஆகிறது.
சியாங் நதியின் இடுக்கன் வழியாக நீங்கள் வருகிறீர்கள் என்றால்
என்னை முன்னமே தெரிவியுங்கள்
நான் உங்களைப் பார்க்க வருகிறேன்
லி போ வின் சீனக் கவிதை. எஸ்ரா பவுண்டின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து – காசியபன்
(நவீன விருட்சம் ஜனவரி – மார்ச்சு 1989)