1. 41வது சென்னை புத்தகக் காட்சி எப்படிப் போயிற்று?
41வது சென்னை புத்தகக் காட்சியும், நானும், மூன்று இளைஞர்களும் என்று கட்டுரை எழுத உள்ளேன்.
2. யார் அந்த மூன்று இளைஞர்கள்?
எல்லாம் என் நண்பர்கள். கிருபானந்தன், சுந்தர்ராஜன், கல்லூரி நண்பர் சுரேஷ்.
3. எல்லோரும் இளைஞர்களா?
எனக்கு 64. என்னை விட சில மாதங்கள் பெரியவர் சுந்தர்ராஜன், என்னை விட சில மாதங்கள் சின்னவர் கிருபானந்தனும், சுரேஷ÷ம். அவர்கள் மூவரும் என்னை ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு புத்தகக் காட்சியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்கள்.
4. 15 கோடிக்குப் புத்தகங்கள் விற்றதாக செய்தி வந்துள்ளதே?
உண்மைதான். ஆனால் எதுமாதிரியான புத்தகங்கள் விற்றன என்பது தெரியாது. அதை நம்பி புத்தகங்களை அதிகமாக அச்சடித்து விடாதீர்கள்.
5. புத்தகக் காட்சியில் நடந்த சோகமான நிகழ்ச்சி எது?
ஞாநியின் மரணம். முதன்முதலாக நானும் ஞாநியும்தான் புத்தக ஸ்டாலில் நுழைந்தோம். அது எந்த ஆண்டு என்ற ஞாபகம் இல்லை.
6. ஒருநாளில் அதிகமாக எழுதுவது ஜெயமோகனா பா ராகவனா?
இந்தக் கேள்வியை நான் ராகவனிடம் கேட்டேன். ஜெயமோகன்தான் என்கிறார் அவர்.
7. இந்தப் புத்தகக் காட்சியில் நீங்கள் செய்த புதுமை என்ன?
கிருபானந்தன் செய்த புதுமை என்று சொல்லுங்கள். ஒரு அட்டைப் பெட்டியில் படித்தப் புத்தகத்தைப் போட்டுவிட்டு படிக்காதப் புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாரகள்.
8. யாரையெல்லாம் புத்தகக் காட்சியில் சந்தித்தீர்கள்?
சந்திக்கவே முடியாது என்று எண்ணிய ஒரு நண்பரைச் சந்தித்தேன். என்னால் நம்ப முடியவில்லை. அவர் எப்படி இருக்கிறார் என்பதை அடிக்கடி யோசித்துக்கொண்டிருப்பேன். புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன். முடியாது என்று மறுத்துவிட்டார். சில நிமிடங்கள் பேசிவிட்டு எப்போது நான் செய்த உதவிக்கு கைமாறாக என் பையில் பணத்தைத் திணித்துவிட்டுப் போய்விட்டார். திரும்பவும் வந்து பார்க்க வருகிறேன் என்று சொன்னவர் வரவில்லை.
9. இந்தப் புத்தகக் காட்சியில் உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி எது,
என் முழு சிறுகதைத் தொகுதியைக் கொண்டு வந்ததுதான் மறக்க முடியாத நிகழ்ச்சி.
10. அடுத்தது என்ன செய்வதாக உத்தேசம்.
சி சு செல்லப்பா தனி மனிதராக எழுத்து பத்திரிகையை 120 இதழ்கள் வரை கொண்டு வந்ததாக நினைக்கிறேன். நான் விருட்சம் இதழை 121 இதழ்கள் வரை கொண்டு வர எண்ணி உள்ளேன். சாத்தியமா என்பது தெரியவில்லை.