கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன். ஞாநியை முதன் முதலாக எங்கே சந்தித்தேன் என்று. கிருத்துவ கல்லூரியில் சங்கரன் என்ற மாணவர் யாருடனோ பேசுவதிலிருந்து தெரிந்துகொண்டேன். அவர்தான் பின்னாளில் பரீக்ஷா ஞாநியாக வரப் போகிறார். அப்போது எனக்கு அவருடன் அறிமுகம் கிடையாது. ஆனால் அவர் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தது மட்டும் காதில் விழுந்தது. ‘கசடதபற நின்று விட்டது. இனிமேல் வராது.’ üகசடதபறý ஒரு சிறு பத்திரிகை. அது நின்று விட்டதை அவர் விவரித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் üகசடதபறý என்ற சிற்றேட்டின் அறிமுகம் எனக்குக் கிடைத்திருந்தது. அது எங்கே விற்கும் என்ற விபரம் தெரியவில்லை.
திரும்பவும் ஞாநியாக சங்கரன்தான் எனக்கு அறிமுகம் ஆனார். அப்போது சில சபா நாடகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கும் நாடகங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசை. ஒரு நாடகக் குழுவுடன் இணைந்து கொண்டேன். அதில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். முதல் நாள் நாடக ஒத்திகையின்போது ஒரு வசனத்தைக் கொடுத்து பேசச் சொன்னார்கள். ஒரு பெண் நடிகையைப் பார்த்து காதல் வசனம் பேச வேண்டும். நாடக இயக்குநர் நான் நடிப்பதைப் பார்த்து üநீங்கள் சத்தமாக வசனம் பேச வேண்டும்,ý என்றார். திரும்பவும் நாடக ஒத்திகை நடந்தது. இந்த முறை சத்தமாக வசனம் பேசினேன்.
திரும்பவும் அந்த நாடக இயக்குநர் சொன்னார்: “நீங்கள் ஏன் இப்படி காதல் வசனம் பேசும்போது, மார்பில் கை வைத்துக்கொண்டு பேசுகிறீர்க,.” எனக்கு வாய்ப்பு போய்விட்டது. நாடகத்தில் கூட என்னால் காதல் வசனம் பேசி காதிலிக்க முடியாது என்று தோன்றியது.
அந்தத் தருணத்தில்தான் பரீக்ஷா என்ற நாடகக் குழு எனக்கு அறிமுகம் ஆனது. அவர்கள் நாடகங்களை சென்னை மியூசியம் தியேட்டரில் பார்த்து முதலில் ஆச்சரியப்பட்டேன். பின் ஏன் இப்படி என்று யோசிப்பேன். எனக்கும் நாடகத்தில் நடிக்க வேண்டுமென்ற ஆசை விடவில்லை. ஞாநியைப் போய்ப் பார்த்தேன். என்னை அவர்களில் ஒருவனாக சேர்த்துக்கொண்டார்.
எனக்கும் ஒரு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அறந்தை நாராயணனின் ‘மூர் மார்க்கெட்’ என்ற நாடகம். அப்பாவி இளைஞன் வேஷம். மேடையில் பாதி தூரம் வரை வந்திருந்து நடிக்க வேண்டும்.. ஞாநியின் எளிமையும், எல்லோரையும் நடிக்க வைக்கலாமென்ற தன்மையும் எனக்குப் பிடித்திருந்தது. பீட்டர்ஸ் காலனியில் உள்ள ஞாநியின் வீட்டிற்கு நான் மேட் இன் இங்கிலாந்து சைக்கிளில்தான் போவேன். நாடகம் அன்று அலுவலகம் போகாமல் சைக்கிளை அவர்கள் வீட்டின் வெளியே வைத்துவிட்டு அவர்களுடன் ஆர் ஆர் சபாவிற்குச் சென்றேன். அங்கு முன் மாதிரியாக நாடக ஒத்திகை நடந்தது. எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். எனக்கு படக் படக்கென் நெஞ்சு துடிப்பது போலிருந்தது.
அந்தத் தருணம் வந்தது. நாடக மேடையில் பாதி தூரம் வந்து நான் வசனம் பேச வேண்டும். நான் பேசுவதற்குள் என் கூட இருந்தவர்கள் அவர்களாகவே இட்டுக்கட்டி வசனம் பேசி என்னை டிஸ்டர்ப் செய்து விட்டார்கள். எனக்கு இப்போது கூட ஒரு வசனம் ஞாபகத்திற்கு வருகிறது. ‘என்னம்மா குறியில்லாமல் இருக்கியே,’ என்று. அந்த வசனம். நாடகத்தில் நடித்த அன்று இரவு தூக்கமே வரவில்லை. மேடையில் நடித்த அப்பாவி இளைஞன் பாதி தூரம் மேடையில் நடந்து நடந்து வசனம் பேசுவது போல் கனவு. எனக்கு இனிமேல் நாடகத்திலேயே நடிக்க வராது என்று தோன்றியது. அடுத்த நாள் காலையில் ஞாநி வீட்டு வாசலில் வைத்திருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு ஞாநியிடம் சொல்லாமல் ஓட்டமாய் ஓடி விட்டேன்.
ஞாநி என் தூர நண்பராகிவிட்டார். அவரைப் பற்றிய செய்திகள் எல்லாம் எனக்கு வந்துகொண்டிருக்கும். அவருடைய திருமணம் கூட சென்னை மியூசியம் தியேட்டரில்தான் ஒரு நாடகத்துடன் நடந்தது. அவர் திருமண வைபத்தில் கலந்து கொண்டேன். ‘நானும் பத்மாவும் சேர்ந்து வாழப்போகிறோம்,’ என்று அவர் சொன்னதாக ஞாபகம்.
நாடகத்தில் நடிக்கும் ஆசை போய்விட்டதால் என் நட்பு வட்டமும் மாறிவிட்டது. ஞானக்கூத்தன், ஆர் ராஜகோபாலன், ஆனந்த், ஸ்டெல்லா புரூஸ், வைத்தியநாதன், ஸ்ரீனிவாஸன், பிரமிள், அசோபமித்திரன், வெங்கட்சாமிநாதன் என்றெல்லாம் என் நட்பு வட்டம் பெரிதாகிவிட்டது. ஆரம்பத்தில் தொடர்ந்த எழுத்து முயற்சி விருட்சம் என்ற பத்திரிகை கொண்டு வரும் அளவிற்கு மாறியது. இந்தத் தருணத்தில் ஞாநியை சந்திக்காவிட்டாலும் ஞாநியைக் குறித்த செய்திகளை அறியாமல் இருக்க மாட்டேன். தன் கருத்துக்களைத் தெரிவிப்பதில் ஞாநி துணிச்சலானவர். சோ ராமசாமிக்கு அடுத்ததாக ஞாநி ஒருவர்தான் தன் மனதில் தோன்றுவதை தைரியமாக வெளிப்படுத்தக் கூடியவர். அதே சமயத்தில் அவர் சொல்வதில் சிலவற்றை ஏற்றுக்கொள்வேன். சிலவற்றை ஏற்க மாட்டேன். பாரதியார் மீது அவருக்குப் பற்று அதிகமாக இருக்கும். அவர் ஒரு ஓவியர். பாரதியார் படம் ஒன்றை மீசையுடன் அவர் வரைந்திருப்பார். அதைப் பார்க்கும்போது நாமும் அதை நம் வீட்டில் வைத்திருக்கலாமென்று தோன்றும். தீம்தரிகிட என்ற பத்திரிகை ஒன்றை அவர் ஆரம்பித்தார். அப் பத்திரிகை மூலம் தன் மனதில் தோன்றுவதெல்லாம் எழுதுவார். ஆனால் அவரால் அப் பத்திரிகையைத் தொடர்ந்து கொண்டு வர முடியவில்லை. பத்திரிகையைக் கொண்டு வருவதில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால், நிறுத்தி விட்டார்.
இருந்தாலும் அவர் பல பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தார். முரசொலி, ஆனந்தவிகடன், தினமணி, தினமலர் என்று பல பத்திரிகைளில் பல பொறுப்புகளில் பணி புரிந்தவர். டிவிகளிலும் அவர் பங்குபெற்று தொடர்கள் இயக்கிக்கொண்டிருந்தார். பெரியார் பற்றி அவர் எடுத்தது குறிப்பிடத்தகுந்தது. அதிகம் செலவாகாமல் ஒரு ஆவணப்படத்தை எடுக்க முடியும் என்று நிரூபித்தவர். ‘எப்படி விருட்சத்தை இவ்வளவு தூரம் நடத்துகிறீர்கள்?’ என்று ஒரு முறை ஞாநி என்னிடம் கேட்டார்.
விருட்சம் போன்ற பத்திரிகை நடத்துவதற்கான வழிமுறையைக் அவரிடம் தெரிவித்தேன். எங்கே அச்சடிக்கிறேனோ அந்த இடத்தைக் குறிப்பிட்டேன். அவர் திரும்பவும் தீம்தரிகிட பத்திரிகையைக் கொண்டு வந்தார். ஆனால் தொடர முடியவில்லை. தீம்தரிகிட திரும்பவும் நின்று விட்டது. அந்த அச்சகத்தில் புத்தகங்களை கொண்டு வந்தார். அவர் வட்டம் பெரிதாகி விட்டது. பல அரசியல் நண்பர்கள் அவருக்கு நண்பர்களாக இருந்தார்கள். இவ்வளவு இருந்தும் ஞாநியை எல்லோரும் பார்க்க முடியும். பேச முடியும். நான் பத்து கேள்வி பத்து பதில்கள் என்ற தலைப்பில் பல எழுத்தாளர்களைப் பேட்டி எடுத்தேன். ஞாநியையும் எடுத்தேன். அவர் வீட்டுப் பின்பக்கத்தில்.
(15.01.2018 அன்று மறைந்த ஞாநியின் நினைவாக..)