ஒருமுறைதான் சந்தித்தேன். 1991ஆம் ஆண்டு சரஸ்வதி பூஜை அன்று சென்னைக்கு என்னைப் பார்க்க வந்தார். வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டேன். மனமுவந்து சாப்பிட்டார். பின் அவர் கவிதைத் தொகுதி எப்படி கொண்டு வரவேண்டுமென்று அறிவுரை கூறிவிட்டு கவிதைத் தொகுதி கொண்டுவர பணமும் கொடுத்துவிட்டுச் சென்று விட்டார். அவர் வேற யாருமில்லை உமாபதி என்கிற கவிஞர். அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. கோவில்பட்டியா சென்னையா தெரியவில்லை.
என்னுடைய இந்த முகநூலை பார்ப்பாரா? தெரியவில்லை. அப்படி என்ன விசேஷம் அவரிடம். அவருடைய கவிதைத் தொகுப்புதான். ழ பத்திரிகையில் அவருடைய கவிதை ஒன்று பிரசுரம் ஆனது. அசந்து விட்டேன். மரணம் என்ற கவிதை அது.
தன் கவிதைத் தொகுதி புத்தகமாக வருவதில் ரொம்பவும் கூச்சப்படுவார் என்பதை அவருடைய நண்பார்களான சுந்தர ராமசாமியும், ராஜ மாத்தாண்டனும் தெரிவித்துள்ளார்கள். அவர்களுடைய தூண்டுதல் பேரில்தான் அவருடைய கவிதைத் தொகுதி வெளிவந்தது. அதுவும் விருட்சம் வெளியீடாக. 1991ஆம் ஆண்டு.
‘வெளியிலிருந்து வந்தவன்’ என்ற உமாபதி புத்தகத்துடன், ‘இரு நீண்ட கவிதைகள்’ என்ற நகுலன் புத்தகமும் கொண்டு வந்தேன். ஒரே ஆண்டில்.
பின் பீக்காக் பதிப்பக உரிமையாளர் சசச்சிதானந்தத்துடன் சேர்ந்து 3 புத்தகங்களுக்கும் ஒரு அறிமுகக் கூட்டம் ஏற்பாடு செய்தேன். பீக்காக் பதிப்பகம் மௌனி கதைகள் புத்தகத்தைக் கொண்டு வந்திருந்தது. நான் உமாபதி, நகுலனின் கவிதைத் தொகுதிகள்.
கூட்டத்தில் எல்லோரும் பேசி முடித்தவுடன், யாரும் ஒரு புத்தகம் கூட நகுலனின் இரு நீண்ட கவிதைப் புத்தகத்தையும், வெளியிலிருந்து வந்தவன் புத்தகத்தையும் வாங்கவில்லை. சச்சிதானந்தன் கொண்டு வந்த மௌனி கதைகள் சில பிரதிகள் விற்றன. எனக்குப் பெரிய ஏமாற்றம்.
நான் கொண்டு வந்த இந்த இரண்டு புத்தகங்களைப் பற்றியும் எப்படி விவரிக்கிறது என்று தெரியவில்லை. உமாபதியின் கவிதைத் தொகுதியின் விலை ரூ.15தான் 80 பக்கங்கள் கொண்ட புத்தகம். அதேபோல் நகுலனின் இருநீண்ட கவிதைகள் புத்தகத்தின் விலை ரூ.12தான். ஆனால் யாரும் வாங்கத் தயாராய் இல்லை.
உமாபதி புத்தகம் லைப்ரரி ஆர்டர் வந்து எல்லாம் தீர்ந்து விட்டது. ஆனால் நகுலன் புத்தகத்தை வைத்துக்கொண்டு பல ஆண்டுகளாகத் தவித்துக்கொண்டிருந்தேன்.
சுந்தர ராமசாமி உமாபதியின் புத்தக முன்னுரையில் இப்படி எழுதியிருக்கிறார் : ‘நமது கலைஞர்கள் ஒதுங்கி ஒளியக் கூடியவர்கள். நமது ஜோடனையாளர்கள் அசுர உழைப்பாளிகள். தமிழின் துரதிருஷ்டம் .இது,’ என்கிறார்.
உமாபதியைப் பற்றி ராஜ மார்த்ôண்டன் இப்படி எழுதுகிறார் :
‘உமாபதியின் கவிதைகள், சுய அனுபவத்தின் மனச் சாய்வற்ற வெளிப்பாடுகள். இன்று கவிதை எழுதுகின்ற பெரும்பாலோருக்கு அரிதேயான கவிதை மொழி இவருக்கு இயல்பாகக் கைகூடி வருவதும், தன்கேயான ஒரு கவிதை மொழியைத் தெரிந்து கொண்டதும், பிற கவிஞர்களிடமிருந்து இவரை தனித்து இனங்காட்டும் முக்கிய அம்சம். அவ்வகையில் குறிப்பிடத் தகுந்த தமிழ்க் கவிஞர் சிலரில் உமாபதியும் ஒருவர்,’ என்கிறார்.
நான் கொண்டு வந்த இரண்டு புத்தகங்களையும் புத்தகக் கண்காட்சியில் அந்த ஆண்டில் பல கடைகளில் கொடுத்து விற்க வைத்தேன். அன்றைய புத்தகக் காட்சி ஒரு மோசமான புத்தகக் காட்சி. எல்லா ஸ்டால்களும் பற்றி எரிய ஆரம்பித்தது. நான் விற்பதற்குக் கொடுத்த கவிதை நூல்களும் நெருப்பில் எரிந்துவிட்டன.
நிச்சயமாக ‘வெளியிலீருந்து வந்தவன்’ என்னிடம் கிடைக்காது என்றுதான் நம்பிக்கொண்டிருந்தேன். இதோ ஒரே ஒரு புத்தகம் கிடைத்துவிட்டது. உடனே அப் புத்தகத்தை ஸ்கேன் பிரிண்ட் செய்துவிட்டேன். மிகமிகக் குறைவான பிரதிகள்தான் அச்சடித்துள்ளேன். 80 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.50தான் புத்தகத்திலிருந்து ஒரு கவிதையை இங்கு தர விரும்புகிறேன்.
என் கவிதை
மூட்டுகளில் பரவலாக வலி
உணவு நேரத்தில் பசி கரைகிறது
பச்சை பிடிக்கும். வானம்
நீலமாய் இருக்கிறது. மனைவி
தினம் சினிமா கேட்கிறாள். வீட்டில்
தொலைக்காட்சி பார்க்கிறாள்.
பிள்ளைகளின் புத்தகங்கள்
அருவருப்பாய் இருக்கிறது.
கடையில் üசானிடரி நாப்கின்ý
கேட்க கூச்சமாய் இருக்கிறது.
பாதசாரிகசள் காரணத்தோடு
இடித்துப் போகிறார்க. தினசரிகள்
சுட்டுப் பொசுக்குகின்றன.
செருப்பு அறுந்த அடுத்த அடி
எச்சில் மிதக்கிறது.
படிக்க ஆசையாய் இருக்கிறது.
கவிதைகள் இல்லாத
கவிதைப் புத்தகங்கள்
காட்சி சாலைக்குள் மனிதன்
வெளியே
அலகு உதிர்ந்த கிளி
தோலுரித்த ஆடு.
எனது கவிதைகள்.
திரும்பவும் உமாபதியை சந்தித்தால் அவருடைய கவிதைப் புத்தகத்தைக் கொடுக்கலாமென்று நினைக்கிறேன்.