இந்த மாத முதல் வாரத்தில் நான் பங்களூர் சென்றேன். நெருங்கிய உறவினரின் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக. அங்கு மூன்று நாட்கள் இருந்தேன். ஒரு கல்யாணம் மூன்று நாட்கள் நடப்பதை அறிந்து ரொம்பவும் யோசனை செய்துகொண்டிருந்தேன். மூன்று நாட்களாக நடக்கும் திருமணத்தில் ஏற்படும் செலவுகளைப் பற்றிதான் யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் இது குறித்து யாரிடமும் எதுவும் பேசவும் இல்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு திருமணம் ஒரு நாளிலேயே முடிந்துவிட வேண்டுமென்று நினைக்கிறேன்.
மூன்று நாட்கள் அங்கே இருக்கும்படி இருந்ததால் நான் லேப்டாப் எடுத்துக்கொண்டு போயிருந்தேன். அங்கே போய் விருட்சம் 104வது இதழைக்கொண்டு வந்தேன். லாப்டாப் மூலம் அச்சடிக்க அனுப்பி அச்சடித்தேன்.
மீதி நாட்களில் புத்தகக் கடைகளுக்குச் செல்ல தீர்மானித்திருந்தேன். முன்பு நான் பார்த்த பங்களூர் மாதிரி இல்லை. முன்பு என்றால் நான் மெஜஸ்டிக் போய் அங்கிருந்து பஸ் பிடித்து எல்லா இடங்களுக்கும் செல்வேன். எங்கே போகவேண்டுமென்று ஒரு இலக்கிய நண்பரைக் கேட்டேன். அவரும் எனக்குத் துணையாக வந்தார். அவர் பெயரைக் குறிப்பிட வேண்டாமென்று கேட்டுக்கொண்டதால் குறிப்பிட வில்லை. மகாத்மா காந்தி ரோடில் உள்ள பிளாஸம்ஸ் என்ற இடத்திற்கு ராஜாஜி நகரில் உள்ள சத்திரத்திலிருந்து கிளம்பிப் போய் சில புத்தகங்கள் வாங்கினேன். புத்தகக் கடை பெரிய இடமாக இருந்தது. எனக்கே ஆச்சரியமாக இருந்தது. மேலும் பழையப் புத்தகங்களையும் விற்கிறார்கள். புத்தகம் பின்னால் அட்டையில் விலையைத் தீர்மானித்து விடுகிறார்கள். அதிலிருந்து குறைப்பது இல்லை. நாலைந்து புத்தகங்களை வாங்கிக்கொண்டு சத்திரத்திற்கு வந்து விட்டேன்.
அடுத்தநாள் எழுத்தாளர் ஸிந்துஜாவைச் சந்தித்து அவரைப் பேட்டி எடுத்தேன். பின் அவருடன் இன்னும் சில புத்தகக் கடைகளுக்குப் போனேன்.
சுதா புக் ஹவுஸ் என்ற இடத்திற்குச் சென்றேன். ரொம்ப சின்ன இடம். அந்த சின்ன இடத்தில் ஏகப்பட்ட புத்தகங்கள். அங்கே பல ஆண்டுகளுக்கு முன்பே போகவேண்டுமென்று நினைத்தேன். அந்தக் கடை சத்திரம் இருக்கும் இடத்திலேயே பக்கத்தில் இருந்தது.
எல்லாம் பழைய புத்கங்கள். விலை பின் அட்டையில் அவர்கள் எழுதியிருப்பதுதான். அதற்குக் குறைந்து அவர்கள் புத்தகங்களை விற்கத் தயாராய் இல்லை. அங்கிருந்து இன்னும் ஆக்குருதி என்ற பழைய புத்தகக் கடைக்குப் போனேன். அங்கு சில புத்தகங்களை வாங்கினேன். எல்லாம் பழையப் புத்தகங்கள். திருப்பிக்கொடுத்தால் பாதி விலைக்கு இன்னொரு புத்தகம் எடுத்துக்கொள்ளலாமாம்.
நான், ‘தி புக் தீவ்’ என்ற புத்தகத்தை வாங்கினேன். ரொம்ப பழைய புத்தகம். விலை ரூ.250. அப் புத்தகத்தில் இப்படி எழுதியிருந்தது.
Dear Viji and Sunil,
Hope you Enjoy This Book As much As I did.Don’t know if there is a book in all of us, but thereis definitely ‘Book Thief” in some of us.
Love
Wheny
12.09
அப்புத்தகத்தில் எழுதியிருந்த வாசகங்கள் என்னைக் கவர்ந்தன. நான் மொத்தம் 14 புத்தகங்கள் வாங்கினேன். மொத்தம் ரூ.3500 வரை ஆயிற்று. ரூ.25
என்னன்ன புத்தகங்கள் வாங்கினேன் என்பதை இங்கே கொடுக்க விரும்புகிறேன். எல்லாம் ஆங்கிலப் புத்தகங்கள்.
1. No More Questions – The Final Travels of U G Krishnamurti – Louis Brawley 2. Though is your enemy – Coversations with U G Krishnamurti 3. Osho Fragrance – Swami Chaitanya Keerti 4. Intuition – Knowing Beyond Logic – Insighrts for a mew way of living – OSHO 4. Murakami – Wind PinBall 5. Kazuo Ishiguro – When We Were Orphans 6. Umberto Eco – Travels in Hyper Reality 7. Kundera – Immortality 8. J M Coetz – The Master of Petersburg 9. Dylan Thomas – Collecrted Poems 1934-1952 10. The Periodic Table – Primo Levi 11. Other People’s Trades – Primo Levi 12. the famished road – BenOkri 13. the Book Thief – Markus Zusak
சத்திரத்திற்கு நான் திரும்பியபோது யார் கண்ணிலும் படாமல் புத்தகங்கள் நான் தங்கியிருந்த அறையில் பதுக்கினேன். வழக்கம்போல் புத்தகங்களை அடுக்கி வைத்துவிட்டுப் பார்க்கிறேன். இனிமேல்தான் ஒவ்வொன்றாகப் படித்துவிட்டு என்ன எழுத முடியுமென்று பார்க்க விரும்புகிறேன். .