அஞ்சல் அட்டை எழுதுவோர் சங்கம் என்று பெயரை மாற்றிக்கொள்ளலாம். தபால் கார்டு சங்கம் என்று வேண்டாம். முகநூலில் ஒருவர் குறிப்பிட்டதுபோல.
நான் ஏன் இது குறித்தே எழுதுகிறேன் என்று யோசித்துப் பார்த்தேன். எனக்குப் பலர் அஞ்சல் அட்டை மூலம் எழுதியிருக்கிறார்கள். கோபிகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் பலருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை அஞ்சல் அட்டை மூலம் எளிமையாகத் தெரிவித்து விடுவார். ஒவ்வொரு ஆண்டும் எனக்கும் அவர் தெரிவிப்பதுண்டு.
ஒருவருக்கு ஏன் நாம்அஞ்சல் அட்டை மூலம் எதாவது எழுத வேண்டுமென்று தோன்றியது. முதலில் நாம் கணினியை அதிகமாகப் பயன்படுத்தி கையால் எழுதுவதே விட்டுவிட்டோம். நாம் எழுதிப் பழகுவதற்கு தபால் அட்டைகளைப் பயன்படுத்தலாம் என்றுதான் முதலில் நினைத்தேன்.
தபால் அலுவலகத்தில் போய் அஞ்சல் அட்டைகளை வாங்கும் வழக்கம் உள்ளவன் நான். ஆனால் அதைப் பயன்படுத்தியதில்லை. ஒரு இடத்தில் அடுக்கி அடுக்கி வைப்பேன். என் பத்திரிகைக்கு சந்தா அனுப்பும் படி முன்பெல்லாம் கார்டு மூலம் கேட்பேன். இப்போது ஏனோ அப்படியெல்லாம் கேட்பதில்லை.
இப்படி தபால் அட்டை வாங்கும் மோகம் என்னை விட்டு மறையவில்லை. ஒருநாள் திடீரென்று யோசித்துப் பார்த்தேன். யாருக்காவது கடிதம் எழுதினால் என்ன என்று. முதலில் 8 அஞ்சல் அட்டைகளில் 8 நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதினேன். முதலில் யோசித்தேன் என்ன எழுதுவது. சிலர் எனக்குப் புத்தகங்களைப் படிக்க வாங்கிக்கொண்டு திருப்பி தரவில்லை. அவர்களை நேரில் பார்க்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. மேலும் போனில் பேசிக் கேட்கலாம். ஆனால் போனில் இது குறித்துப் பேச விருப்பமில்லை. அப்படியே போனில் பேசினாலும் அவர்கள் எடுக்காமல் இருக்கலாம். இந்த நிலையில்தான் அஞ்சல் அட்டை எனக்குப் பெரிதும் உதவும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. மடமடவென்று இரண்டு மூன்று பேர்களுக்கு கார்டில் அவர்கள் எடுத்துச்சென்ற புத்தகங்களில் பெயர்களைக் குறிப்பிட்டு திருப்பித் தரும்படி கேட்டுக்கொண்டேன். இன்னும் ஒரு நண்பருக்கு விருட்சம் 103வது இதழை அனுப்பினேனே படித்தீர்களா என்று எழுதிக் கேட்டேன்.
நான் முதலில் 8 பேர்களுக்கு எழுதினேன். அடுத்தநாள் இன்னும் 10 பேர்களுக்கு அனுப்பினேன். மூன்றாவது நாள் 2 பேர்களுக்கு அனுப்பினேன். மொத்தம் 20 அஞ்சல் கடிதங்களை எழுதினேன்.
அஞ்சல் அட்டை நாம் விரும்புவதுபோல் இல்லை. அதில் ஒரு வரி எழுதலாம், 2 வரிகள் எழுதலாம். ஆனால் நான் கடிதம் முழுவதும் எழுதினேன். அப்படி எழுத எழுத எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒரு நண்பருக்கு என்னுடைய புத்தகமான திறந்த புத்தகத்தைக் கொண்டு கொடுத்தேன். அவர் வீட்டிற்குப் போனபோது மாடிப்படிக்கட்டு போகுமிடத்தில் பாதை ஒரே மாதிரியாக இருக்கிறது என்று எண்ணி தடுமாறி விழுந்தேன். நான் புத்தகம் கொண்டு வருகிறேன் என்று முதல்நாள்தான் அவருக்கு எழுதியிருந்தேன். விழுந்தபிறகு இன்னொரு கடிதம் எழுதினேன்.
எல்லாம் எனக்கு வேடிக்கையாக இருந்தது.
நான் அனுப்பிய பல கடிதங்களை பலர் வந்தமாதிரியே காட்டிக்கொள்ளவில்லை. இதையும் நான் எதிர்பார்த்தேன். அலட்சியப் படுத்துவார்கள் என்று நினைத்தேன். அப்படியே நடந்தது. ஏன்என்றால் நானும் அப்படித்தான் இருந்திருக்கிறேன். பல அஞ்சல் அட்டைகளுக்கு பதிலே போட மாட்டேன். புத்தகம் கேட்டு எழுதினாலும் கண்டுகொள்ள மாட்டேன். அதேபோல்தான் என் நண்பர்களும் இருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. இது தவறில்லை. ஆனால் நான் எழுதிய கடிதம் கிடைத்ததா என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் இருக்கும்.
அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது என் மேலதிகாரிக்கு யாராவது திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தால், உடனே திருமணத்திற்கு வர முடியவில்லை. என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதில் எழுதுவார். இது எவ்வளவு நல்ல பழக்கம் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது. யாராவது எனக்கு அழைப்பிதழ் அனுப்பி நான் போகாவிட்டால் பதில் எழுதுகிற வழக்கம் எனக்கு இருந்ததில்லை. இப்போது நான் கடிதம் எழுதும்போது இதையெல்லாம் நாம் செய்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
நான் எழுதிய கடிதங்களைப் படித்துவிட்டு என் நண்பர்கள் என்ன நினைத்துக்கொள்வார்கள் என்று யோசித்தபோது அவர்கள் நல்லவிதமான நினைத்துக்கொள்ள மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஏதோ மறை கழன்று போய்விட்டது என்று கூட யோசித்துப் பார்ப்பார்கள்.
ஆனால் மனந்திறந்து அஞ்சல்அட்டையில் எழுதுவது தனி கலை.