நேற்று (18.11.2017) விருட்சம் 31வது கூட்டம் வழக்கம்போல ஸ்ரீராம் காம்பளெக்ஸில் நடந்தது. கூட்டத்தில் சிறப்புரை ஆற்றியவர் ராஜேஷ் சுப்பிரமணியன். சில மாதங்களுக்கு முன் தற்செயலாக ராஜேஷ் அவர்களைச் சந்தித்தேன். அவர் பேசும் விதம் பிடித்திருந்தது. பல விஷயங்களைப் பற்றி பேசினார். நான் கூட்டங்களுக்கு வருவதற்கு முன்னாலே வந்திருந்து எந்தவித நோக்கமும் இல்லாமல் உதவி செய்யக் கூடியவர். அவரிடம் நீங்கள் பேச முடியுமா என்று கேட்டேன். அவர் ஒப்புக்கொண்டு லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களைப் பற்றி பேச ஒப்புக்கொண்டார்.
நான் இதுவரை 6 கூட்டங்களை நடத்தி உள்ளேன். முதல் கூட்டம் ஜøன் மாதம் நடந்தது. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தி ஜானகிராமனைப் பற்றி பேசினார். அடுத்து ஜøலை மாதம் நடந்த கூட்டத்தில் புதுமைப்பித்தன் படைப்புகளைப் பற்றி பெருந்தேவி அவர்கள் பேசினார்கள். மூன்றாவது கூட்டமான ஆகஸ்டில் கடற்கரை அவர்கள் ஏ கே செட்டியாரைப் பற்றி பேசினார். நான்காவது கூட்டமான செப்டம்பரில் செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள் ஓஷோவைப் பற்றிப் பேசினார். ஐந்தாவது கூட்டமான அக்டோபரில் சந்தியா நடராஜன் திருவசாகத்தைப் பற்றி பேசினார். இப்போது ராஜேஷ÷ன் லத்தின் அமெரிக்க எழுத்தாளர்களைப் பற்றிய கூட்டம். எல்லாவற்றையும் நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன். இதெல்லாம் ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். ஆனால் செம்ம கஷ்டமாக இருக்கும்.
ஒரு கூட்டத்தை நாம் எப்படி ரசிக்க முடியும்? பேசுபவரை நாம் மதிக்க வேண்டும். அவர் மூலம் நமக்கு என்ன கிடைக்கிறது என்பதை கேட்பவர் உணர வேண்டும். நம்மில் சிலர் தீர்ப்பு கொடுத்துவிடுகிறோம். அந்தத் தீர்ப்பு ரொம்ப மோசமானது. ராஜேஷ் பேசியபோது அவர் மூலம் எனக்கு என்னன்ன தெரிய வருகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்தேன். எனக்குப் பல விஷயங்கள் தெரிய வந்தன. அவருக்கு என் நன்றி. அவர் பேசிய கூட்டத்தின் வீடியோவை நாளையிலிருந்து துவங்குகிறேன்.
இது மாதிரியான கூட்டங்களை நடத்த எனக்கு ஆரம்ப காலத்திலிருந்து ஒரு நண்பர் உதவி செய்கிறார். அவர் வேறு யாருமில்லை கிருபானந்தன் என்ற நண்பர்தான். அவர்தான் இக் கூட்டத்தைப் பற்றிய அறிவிப்பை எஸ்எம்எஸ் மூலம் அனுப்புகிறார். நீங்களும்தான் இக் கூட்டத்தை நடத்துகிறீர்கள் என்று அவரிடம் நான் சொல்வது வழக்கம். அவருக்கும் என் நன்றி. வந்திருந்தவர்களுக்கும் என் நன்றி.