பின் நவீனத்துவம் என்றால் என்ன? என்ற பெயரில் சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் எம் ஜி சுரேஷ் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அப் புத்தகத்தை எல்லோரும் வாங்கி வாசித்து அறிவை விருத்திச் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நான் இதுவரை படித்த இதுமாதிரியான கோட்பாடு ரீதியாக எழுதப்பட்ட புத்தகங்களில் தெளிவாக எழுதப்பட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று. உண்மையில் இது ஒரு பாடப் புத்தகம் என்று கூட சொல்லலாம். தமிழ் இலக்கியம் படிக்கும் ஒவ்வொரு மாணவனும் இதுமாதிரியான புத்தகத்தைப் படிப்பது அவசியம் என்றும் நினைக்கிறேன்.
இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலிருந்து எம் ஜி சுரேஷ் பின் நவீனத்துவத்தைப் பற்றி எழுதிக்கொண்டு போகிறார்.
போமோ என்றால் என்ன என்று சுரேஷ் முதலில் ஆரம்பிக்கிறார். போமோ என்கிற இந்த இரண்டெழுத்துப் பதம் போஸ்ட் மாடர்னிசத்தைக் குறிக்கிறது. போஸ்ட் மாடர்னிசம் என்று அழைக்கப்படும் பின் நவீன்த்துவத்துக்கு இப்போது வயது முப்த்தியெட்டு ஆகிறது என்கிறார்.
நான் உடனே உங்களை ‘அதிகாரமும் பின் நவீனத்துவமும்’ என்ற ஒன்பதாவது அத்தியாயத்திற்கு அழைத்துக்கொண்டு போகிறேன். அதில் சுரேஷ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“பின் நவீனத்துவத்துக்கென்று தனித்த கண்டுபிடிப்பாளர் என்று யாரும் கிடையாது. ‘ழாக் தெரிதா’, ‘மிஷல் ஃபூக்கோ’, ‘ரொலான் பார்த்’, ‘கில்ஸ் தெலூஸ்’, ‘இஹாப் ஹஸன்’, ‘ழீன் பொத்ரியார்’, ‘ழாக் லக்கான்’ போன்ற ஒரு குழு பின் நவீனத்துவச் சிந்தனையை வடிவமைத்தது.”
பூக்கோ இப்படி குறிப்பிடுகிறார் : ‘அதிகாரம் என்பது அறிவு என்ற அமைப்பின் செயல்பாடுகளால் வருவது. அது சமூகரீதியாக முறைமைப் படுத்தப்படும்போது சட்டமாகவும், சட்டங்களை அமலாக்கும் நிறுவனங்களாகவும் மாறிவிடுகிறது.’
‘அதிகாரங்கள் பல இருக்கின்றன. அதைப்போலவே வரலாறுகளும் பல இருக்கின்றன. ஒற்றையான ஓர் அதிகாரம் என்பது எப்படி இல்லையோ அதேமாதிரி ஒரு வரலாறு என்பதும் இல்லை’ என்பது பூக்கோவின் கருத்து.
இன்னொரு இடத்தில் பூக்கோ இப்படி குறிப்பிடுகிறார் : நவீனத்துவ அறிவு மனப்பிறழ்வுற்றவர்களையும், குற்றவாளிகளையும், நோயாளிகளையும் தகுதியற்றவார்களாக்கி விலக்கி ஒதுக்கி வைக்கிறது.
‘துண்டாடப்பட்ட அதிகாரங்களை, ‘அதிகாரத்தின் நுண் அரசியல்’ என்று குறிப்பிடுகிறார்.
நுண் அலகுகளாக அதிகாரம் எங்கெல்லாம் நிலவுகிறதோ அங்கெல்லாம் அதற்கு எதிரான போராட்டங்களும் நிலவுகின்றன.
பெண்கள், வெள்ளையர் அல்லாதவர், சிறைக்கைதிகள், ஓரினப் புணர்ச்சியாளர்கள் போன்றோரை மற்றமையாக வைத்துப் பார்க்கிறார்.
இந்தப் புத்தகத்தில் சுரேஷ் அப்படியே மொழிபெயர்த்துக் கூறாமல் நம்மிடையே நிலவும் புராணங்களையும் உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.
‘ரொலாண் பார்த்’ சொல்கிற மாதிரி, ‘நாம் ஒரே நேரத்தில் கதாசிரியனாகவும் கதாபாத்திரமாகவும் இருக்கிறோம்,’ என்கிறார்.
இதில் நம் நாட்டு ராமாயணத்தை சுரேஷ் உதாரணம் காட்டுகிறார். ராமாயணத்தை எழுதியவர் வால்மீகி. அவரை அதில் ஒரு பாத்திரமாக லவ-குசர்களுக்கு ஒரு குருகுலத்தில் பாடம் சொல்லித் தருபவராக வருகிறார்.
‘ஃபூக்கோவை’ப் பொறுத்தவரையில் சுயமான முழுமையான மனிதன் என்று யாரும் இல்லை.
‘தெரிதா’வின் முக்கியமான கோட்பாடு ‘கட்டவழிப்பு’. அதைப்போலவே ‘ஃபூக்கோவி’ன் முக்கியமான கோட்பாடு ‘உரையாடல்’ என்பதாகும்.
‘பின் நவீனத்துவமும் இலக்கியமும்’ என்ற அத்தியாயத்தில் சுரேஷ் இப்படி எழுதுகிறார் :
‘பின் நவீனத்துவம் என்றதும் உடனே நம் நினைவுக்கு வருவது ‘கட்டவிழ்ப்பு’ என்ற வார்த்தை. அது ‘தெரிதா’ அறிமுகப்படுத்தியது. அடுத்ததாக நம் ஞாபகத்தில் வந்து மோதுவது ‘உரையாடல்’ என்ற வார்த்தை. இது ‘மிஷல் பூக்கோ’ முன்வைத்தது. மூன்றாவதாக நம் கவனத்துக்கு வருவது ‘ஆசிரியனின் மரணம்.’ இதைச் சொன்னவர் ‘ரொலாண் பார்த்’. இந்த மூன்று கருத்துகளும் சேர்த்து பின்நவீனத்தை ஒரு முப்பரமாணம் கொண்ட அறிதல் முறையாக உருவாக்கியிருக்கின்றன.
ஒரு பிரதியை எழுதும்போதுதான் அவன் ஆசிரியன். எழுதி முடித்தபின் அவனும் ஒரு வாசகன், பார்வையாளன், விமர்சகன். அவன் எழுதிய பிரதியை அவனே விமர்சிக்கலாம். கிழி கிழி என்று கிழிக்கலாம் என்று சொல்லி ஆசிரியனின் தலைக்குப் பின்னால் சுழலும் ஒளிவட்டத்தை பார்த் ரத்து செய்கிறார்.
‘தெரிதா’வின் முக்கியமான கோட்பாடு ‘கட்டவழிப்பு’. அதைப்போலவே ‘ஃபூக்கோவி’ன் முக்கியமான கோட்பாடு ‘உரையாடல்’ என்பதாகும்.
‘பின் நவீனத்துவமும் இலக்கியமும்’ என்ற அத்தியாயத்தில் சுரேஷ் இப்படி எழுதுகிறார் :
‘பின் நவீனத்துவம் என்றதும் உடனே நம் நினைவுக்கு வருவது ‘கட்டவிழ்ப்பு’ என்ற வார்த்தை. அது ‘தெரிதா’ அறிமுகப்படுத்தியது. அடுத்ததாக நம் ஞாபகத்தில் வந்து மோதுவது ‘உரையாடல்’ என்ற வார்த்தை. இது ‘மிஷல் பூக்கோ’ முன்வைத்தது. மூன்றாவதாக நம் கவனத்துக்கு வருவது ‘ஆசிரியனின் மரணம்.’ இதைச் சொன்னவர் ‘ரொலாண் பார்த்’. இந்த மூன்று கருத்துகளும் சேர்த்து பின்நவீனத்தை ஒரு முப்பரமாணம் கொண்ட அறிதல் முறையாக உருவாக்கியிருக்கின்றன.
ஒரு பிரதியை எழுதும்போதுதான் அவன் ஆசிரியன். எழுதி முடித்தபின் அவனும் ஒரு வாசகன், பார்வையாளன், விமர்சகன். அவன் எழுதிய பிரதியை அவனே விமர்சிக்கலாம். கிழி கிழி என்று கிழிக்கலாம் என்று சொல்லி ஆசிரியனின் தலைக்குப் பின்னால் சுழலும் ஒளிவட்டத்தை பார்த் ரத்து செய்கிறார்.
மூன்று மரணங்கள் என்ற அத்தியாயத்தில் சுரேஷ் இப்படி குறிப்பிடுகிறார்.
1. நவீனத்துவத்தின் மரணம்
2. உண்மையின் மரணம்
3. செக்ஸின் மரணம்
பின் நவீன யுகத்தில் உண்மை இறந்து போய்விட்டது. இங்கு எதுவுமே நிஜமில்லை. டிவி, கம்ப்யூட்டர், சினிமா, பத்திரிகைகள், விளம்பரங்கள் போன்ற எல்லாமே நகல்களின் பிம்பங்களைப் பொழிந்தபடி இருக்கின்றன. நகல் உண்மைகளின் (ஹைபர் ரியல்) தாக்குதல்களுக்கு எதிர்ப்பின்றி நாம் ஆளாகிக்கொண்டிருக்கிறோம். நகல்தான் நமது காலத்தின் உண்மைகள் என்று அறிவித்த ‘ழீன் பொத்ரியார்’ ஒரு பிரெஞ்சுக்காரர்.
இப் புத்தகத்தில் ‘மொழியும் பின் நவீனத்துவமும்’ என்ற அத்தியாயம் கீழ் ‘ங’ என்ற எழுத்தை வைத்து ஒரு கண்டிபிடிப்பை செய்திருக்கிறார்.
‘ங’ – ப்போல் வளை’ என்கிறார் ஒளவையார் ஆத்திச்சுவடியில். இதில் ஒளவையாரின் கோணம் என்ன என்று பார்க்கும்போது,
‘தமிழ் மொழியிலே ‘ங’ என்ற எழுத்துதான் அதீத வளைவுகொண்டது. ஓர் எழுத்தை இதைவிட அதிகம் நெளிக்க முடியாது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ‘ங’ என்ற எழுத்தைப்போல் வளைந்து கொடுத்தால்தான் வெற்றியடைய முடியும், என்று ஒளவையார் சொன்னதாக ஒரு கோடி அர்த்தத்தை இதில் நாம் பெறுகிறோம். யோசித்துப் பார்க்கும்போது நமக்குள் இருக்கும் தெரிதாவுக்கு இன்னொரு அர்த்தம் கிடைக்கிறது.
ஒரு மனிதன் ‘ங’ என்ற எழுத்தைப்போல் அஷ்டகோணலாக வளைந்து கொடுப்பது மிக மோசமான செயலாகும். அப்படிப்பட்ட அவலநிலைக்குள்ளானவன் தன்மானம் இல்லாதவன்; சுயமரியாதை கெட்டவன் எனலாம். அப்படிப்பட்ட மனிதன் ஒருபோதும் முன் மாதிரியான மனிதனாக இருக்க முடியாது. மனிதன் நாணலைப்போல் வளைந்து கொடுக்கக் கூடாது. கொடிமரத்தைப் போல உறுதியாக நிமிர்ந்து நிற்க வேண்டும்.
மனிதர்கள் இருக்கட்டும். இப்படி வளைந்துகொடுக்கும் இந்த ‘ங’ என்ற எழுத்துதான் தமிழ்மொழியில் இருந்துகொண்டு என்னத்தைச் சாதித்தது? ‘ங’ ப்போல் வளை என்ற இந்த ஒரு பழமொழியைத் தவிர வேறு எங்கே உபயோகப்படுத்தப்படுகிறது, என்று யோசித்துப் பார்க்கும்போது மருந்துபோல் சொல்லப்பட்ட ஒரு கருத்து விஷமாக மாறுவதை உணர முடிகிறது அல்லவா?
தெரிதாவின் கட்டவிழ்ப்புச் சிந்தனை அமெரிக்காவை அள்ளிக்கொண்டு போயிற்று.
19 அத்தியாயங்கள் கொண்ட இப் புத்தகத்தை ஒவ்வொருவரும் வாங்கிப் படித்து நவீன அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
பின்நவீனத்துவம் என்றால் என்ன? – எம்.ஜி சுரேஷ் – வெளியீடு : அடையாளம், 1205/1 கருப்புர் சாலை, புத்தாநத்தம் 621310 – தொலைபேசி : 04332 273444 – விலை : ரூ.100