அடகுக் கடை
பத்மஜா நாராயணன்
எல்லா அடகுக் கடையுள்ளும்
எப்போதும் ஒரு பெண்
எதையாவது அடகுவைக்க
காத்திருக்கிறாள்.
அது அவள்
புன்னகையாக நிச்சயம் இருக்காது
விற்றுவிட்ட ஒன்றை
அவள் எப்படி திருப்பிவைக்க இயலும்?
சிலநேரம்
அதிகாலையில் அடகுக்கடைக்குச்
செல்பவள்
ஏதோ ஒன்றை திருப்பத்தான்
சென்றிருப்பாள்
அப்போது அவள் தொலைத்த புன்னகையை
அக்கடைக்காரன்
கொசுறாக அவளிடம் கொடுத்துவிடுகிறான்.
மற்றோர் இரவு
மீண்டும் அங்கு வரும் வரையில்
அவள் அதை சுமந்துகொண்டு
அலைகிறாள்
எது எப்படியிருந்தும்
இரவு நேரங்களில்
அடகுக் கடை ஏகும்
பெண்களின் எண்ணிக்கை
குறையவே போவதில்லை
அவர்களின்
துயரைப் போலவே!
நன்றி : தெரிவை – கவிதைகள் – பத்மஜா நாராயணன் – மொத்தப் பக்கங்கள் : 64 – வெளியீடு : டிசம்பர் 2013 – விலை : ரூ.50 – வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் (பி) லிட் – 6 முனுசாமி சாலை, மேற்கு கே கே நகர், சென்னை 600 078 – தொலைபேசி : 044 – 65157525