வழக்கம்போல் நவீன விருட்சம் 103வது இதழை எடுத்துக்கொண்டு போய் வைதீஸ்வரனிடம் கொடுத்த போது, அவர் மொத்தக் கவிதைகள் அடங்கிய தொகுப்பான மனக்குருவி என்ற கவிதைத் தொகுதியை என்னிடம் நீட்டினார். திரும்பத் திரும்ப அவர் முன் அப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். பல ஓவியங்களுடன் 366 கவிதைகள் அடங்கிய தொகுப்பு அது.
இக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு டாக்டரிடம் கேட்டுக் கொண்டேன். டாக்டரும் கூட்டம் ஏற்பாடு செய்ய தயாராய் இருந்தார். இந்தத் தருணத்தில்தான் புத்தகம் கொண்டு வந்த பதிப்பாளர் லதாவால் கலந்துகொள்ள முடியாது என்று தெரிந்தது.
அதன் விளைவுதான் புதன் கிழமை நடந்த கூட்டம். கூட்டத்திற்கு வந்திருந்து வைதீஸ்வரன் கவிதைகள் வாசித்த அனைவருக்கும் என் நன்றி.
இக் கூட்டத்தை எப்படி துவங்குவது என்று தெரியவில்லை. ஒவ்வொருவராய் அவருடைய கவிதையை வாசிப்பது என்று தீர்மானித்திருந்தேன். நான் முதலில் அப்படித்தான் வசித்துவிட்டு அமர்ந்தேன். உண்மையில் எல்லோரும் அவருடைய பிடித்தமான கவிதைகளை வாசித்துவிட்டு அமர வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் என்னுடைய தவறு இதைத் தெளிவாக சொல்லவில்லை. பின்னால் வந்த ஒன்றிரண்டு பேர்கள் அவர் கவிதைகளை மட்டும் வாசிக்காமல் அக் கவிதைகளுக்கு விளக்கங்களையும் கூற ஆரம்பித்துவிட்டார்கள். கவிதையைப் படித்தாலே போதும். விளக்கம் தேவையில்லை. பொழிப்புரை சொல்வதுபோல் ஆகிவிட்டது. இதைக் கேட்பவர்க்கு அலுப்பை ஏற்படுத்தி விடும். என்னால் இதை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை. அதேபோல் ஒரு கட்டுரையை வாசித்தது மனதில் ஏறவில்லை. அலுப்பாக இருந்தது.
அற்புதமாக டிவியில் படம் பிடித்த ஷ்ருதி டிவிக்கு நன்றி. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பிடித்தார். அதேபோல் வேடியப்பன். இடம் கொடுத்தவரிடம் எவ்வளவு தர வேண்டுமென்று கேட்டேன். ‘எது வேண்டுமானாலும் கொடுங்கள். உங்கள் இஷ்டம்.’ யார் சொல்வார்கள் இதுமாதிரி. அதேபோல் லதாவும், கே எஸ் சுப்பிரமணியனும். வைதீஸ்வரன் மீது கொள்ளை அன்பு இவர்கள் இருவருக்கும். அதேபோல் டாக்டரைப் பற்றியும் சொல்ல வேண்டும். மனக்குருவி என்ற இந்தப் புத்தகம் நிச்சயமாக எல்லாப் பிரதிகளும் விற்றுவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வந்திருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. இது திட்டமிடாத அவசரமான கூட்டம்.