1. சமீபத்தில் நடந்த இரண்டு துயரமான சம்பவங்கள்..
ஆமாம். துயரமான சம்பவங்கள்.
2. தற்கொலை செய்துகொள்வதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
தற்கொலையைப் பற்றி யாரும் ஒன்றும் சொல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால் அது நிகழாமல் இருப்பதற்கு என்ன செய்ய முடியும் என்பது தெரியவில்லை.
3. ஏன் ஒருவருக்குத் தோன்றுகிறது தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென்று..
அதுதான் புரியவில்லை. நிறைவேறாத ஆசை, எதிர்பார்க்கிற வாழ்க்கை அமையாமல் போவது. நானும் டாக்டராக வர வேண்டுமென்று விரும்பினேன். ஆனால் எஸ்எஸ்எல்சி படிக்கும்போதே தெரிந்து விட்டது நம்மால் முடியாது என்று. பெரிய கிரிக்கெட் வீரனாக வர நினைத்தேன். ஸ்கூலில் விளையாடும் கிரிக்கெட்டில் பந்தை வீசும்போதே தெரிந்துவிட்டது…முடியாது என்று..சினிமாவில் நடிகனாக நடிக்க வேண்டுமென்று நினைத்தேன்..சாத்தியமே இல்லை என்று உடனே தெரிந்து விட்டது…நாடக நடிகனாக நடிக்கலாம் என்றால் அதிலும் சிறப்பாக நடிக்க முடியவில்லை..சும்மா இருப்பதுதான் சரியான வழி என்று இப்போது சும்மா இருக்கிறேன்.
4. கருத்துரிமைக்கு எதிராகத்தான் கொலை நடந்தது என்று சொல்லுகிறார்களே?
இருக்கலாம். உண்மையான கருத்துûரிமை என்றால் எதுவும் எப்போதும் சொல்லாமல் இருப்பதுதான் கருத்துரிமை என்று தோன்றுகிறது.
5. இப்போது என்ன புத்தகங்கள் படிக்கிறீர்கள்?
இரண்டு புத்தகங்களைப் படிக்கிறேன். ஒரு புத்தகம் சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச், 92 பக்கங்கள் வரை படித்துவிட்டேன். இன்னொன்று தமிழவனின் நாவல் ஆடிப்பாவைபோல. மூன்று விதமாக வாசிப்பதற்குரிய நாவல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தவிர என்னிடம் படிப்பதற்கு ஏகப்பட்ட புத்தகங்கள் உள்ளன. சிறுகதைகள், கவிதைத் தொகுதிகள், இன்னும் நாவல்கள், கட்டுரைத் தொகுதிகள் என்று..
6. என்னன்ன புத்தகங்கள் என்று ஒரு லிஸ்ட் தர முடியுமா?
தருகிறேன்.. ஆனால் அது இரண்டு மூன்று பக்கங்களுக்கு மேல் வந்து விடும். வேண்டாமென்று பார்க்கிறேன்.
7. நான் வேண்டுமானால் பெட் கட்டுகிறேன். உங்களால் படிக்கவே முடியாது..
பார்த்துக்கொண்டே இருங்கள். நான் ஒவ்வொன்றாகப் படித்து முடித்து விடுவேன்.
8. விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்களைப் பற்றி…
சமீபத்தில் மூன்று படைப்பாளிகளைப் பற்றிய கூட்டங்களை நடத்தி முடித்துள்ளேன். நாலாவதாக நடைபெற உள்ள கூட்டம் வரும் 16ஆம் தேதி வர உள்ளது. செந்தூரம் ஜெகதீஷ் ஓஷோவைப்பற்றி பேச உள்ளார். ஒவ்வொரு கூட்டத்திலும் பேசுவோர் மெய்மறந்து பேசுகிறார்கள்.
9. நவீன விருட்சம் 103வது இதழ் எப்போது வரப்போகிறது,
அடுத்த வாரம்.
10. சமீபத்தில் உங்களை அதிகம் யோசிக்க வைத்த விஷயம் என்ன?
ஒரு இலக்கியவாதியின் தனிமை வாழ்க்கை. 80 வயதுக்கு மேல் ஆன அவர், யார் துணையும் இல்லாமல் தனியாக வசிக்கிறார். இன்னும் 100 புத்தகங்கள் வரை எழுத வேண்டுமென்கிறார்..சமீபத்தில் அவர் மனைவி இறந்து விட்டார் என்பதுதான் துக்கம். தில்லியிலும் பங்களூரிலும் அவருடைய பெண்கள் இருக்கிறார்கள். இவர் சென்னையில் இருக்கிறார். பெண்கள் தங்களுடன் வரும்படி கேட்டுத் தொந்தரவு செய்கிறார்கள்.
11. யார் தயவும் இல்லாமல் ஒருவர் வாழ முடியுமா?
நிச்சயமாக முடியாது.
12. சமீபத்தில் நீங்கள் மறைத்த விஷயம் யாது?
காலையில் நான் எப்போதும் வாக் செல்வேன். ஒரு நண்பருடன். அவர் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி பார்கில் நடப்போம். அதுமாதிரி அன்று நடந்து முடிந்து வண்டியை எடுத்துக்கொண்டு திரும்ப நினைத்தேன். எதிர் திசையில் இடிப்பதுபோல் வந்த வண்டிகளைப் பார்த்து நடுங்கிக்கொண்டு பின் ஜாக்கிரதையாக எதிர் திசைக்குத் திருப்பினேன். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு டூ வீலரில் வந்த இளைஞன் என் வண்டி மீது மோதி வண்டியுடன் என்னை கீழே சாய்த்துவிட்டான். நல்லகாலம் பெரிதாக அடிபடவில்லை. வெறும் சிராய்ப்புதான். வண்டிக்குத்தான் சேதம். எதிர்பாராத தருணத்தில் எப்படியெல்லாம் ஆபத்து வரும் என்பதை அந்த இளைஞன் மூலம் தெரிந்துகொண்டேன். இதை என் மனைவியிடம் சொல்லவில்லை.
13. .இத்துடன் போதுமா?
போதும். பின்னால் தொடர்வோம்.