ஒழிந்த நேரங்கள்
காளி-தாஸ்
நான்
ஒழிந்த நேரத்தில் பிறந்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் வளர்ந்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் படித்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் எழுதினேன்
நான்
ஒழிந்த நேரத்தில் விளையாடினேன்
நான்
ஒழிந்த நேரத்தில் காதலித்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் சம்பாதித்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் கல்யாணம் செய்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் புணர்ந்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் பிள்ளை பெற்றேன்
நான்
ஒழிந்த நேரத்தில் குடித்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் தூங்கினேன்
நான்
ஒழிந்த நேரத்தில் சாமி கும்பிட்டேன்
நண்பர்களே வாருங்கள்
ஒழிந்த நேரம் பார்த்து
ஒழிந்த நேரம் ஒன்றில்
நான் செத்துப் போகும் முன்…….
நானும் நானும் – காளி-தாஸ் – கவிதைகள் – மொத்தப் பக்கங்கள் : 48 – விலை : ரூ.50 – முதல் பதிப்பு : மையம் வெளியீடு – இரண்டாம் பதிப்பு : விருட்சம், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை – 33 – தொடர்புக்கு : 9444113205
பின் குறிப்பு :
காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகளை எழுதியவர் ஸ்டெல்லா புரூஸ். அவர் இயற்பெயர் ராம் மோகன். கவிதைகள் மட்டும் அல்ல, சிறுகதைகள், நாவல்கள் என்று எழுதிய பிரபல எழுத்தாளர். அவருடைய பிறந்த நாள் 08 ஆகஸ்டில் வருகிறது. இன்றிருந்ôôல் அவருக்கு 77வயது நிரம்பியிருக்கும். மனைவி இழந்த துக்கம் தாங்காமல் மார்ச்சு 2008ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் கவிதைகள் எளிமையானவை. எனக்கு இரண்டு விதமான கவிதைப் போக்கு இருப்பதாக தோன்றுகிறது. புரிகிற கவிதை புரியாத கவிதை என்று. புரியாத கவிதை வகையில் பாதி புரிந்த கவிதை, பாதி புரியாத கவிதை என்று உண்டு. பாதி புரியாத கவிதையைப் படிப்பவர்கள் கவிஞர் எதாவது எழுதியிருப்பார், படிப்பவர் ஏதோ புரிந்து கொள்வார். தன் மனநிலையை எளிதாக மற்றவர்கள் அறியும்படி காளி-தாஸ் புரியும்படி கவிதைகள் எழுதி உள்ளார். ஆனால் அவர் தற்கொலைதான் எனக்குப் புரியவில்லை. அவர் பிறந்த தினம் ஞாபகமாக இக் கவிதையை இங்கு அளிக்கிறேன்.