1981ஆம் ஆண்டு கவனம் இதழ் வெளிவந்தபோது அதைப் பெறுவதற்காக மேற்கு மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணிக்கு ஆர் ராஜகோபாலன் விட்டிற்குச் சென்று வாங்கினேன். கவனம் இதழ் குறித்து கணையாழியில் விளம்பரம் வந்தது. வாங்கியதோடு இல்லாமல் சந்தாவும் கட்டினேன்.
எந்தச் சிறுபத்திரிகைக்கும் உள்ள பிரச்சினை. விநியோகப் பிரச்சினை. சரியான இலக்கிய ஆர்வலர்களுக்குப் போய்ச் சேர என்ன வழி என்பது தெரியாது. உண்மையில் கவனம் இதழ்கள் ஏழு வரை கொண்டு வந்ததே பெரிய விஷயமாக எனக்குத் தோன்றுகிறது.
கவனம் இதழ்களின் தொகுப்பாக ஆறு இதழ்களை நான் பைன்ட் செய்து வைத்திருந்தேன். காலப்போக்கில் ஏழாவது இதழ் இருந்ததே எனக்கு மறந்து போய்விட்டது. ஆத்மாநாம் கவிதைக்காக கவனம் இதழைப் பார்க்க கல்யாணராமன் வந்திருந்தார். அப்போதுதான் தெரிந்தது ஏழாவது இதழ் இருப்பதாக. பின் இந்த ஏழாவது இதழ் கிடைப்பதற்காக காத்திருந்தேன். நான் சேகரித்து வைத்திருந்த பத்திரிகைகளில் தேடிப் பார்த்தேன். கவனம் ஏழாவது இதழ் கிடைத்து விட்டது. ஏதோ புதையலை கண்டு பிடித்த நிலையில் நான் இருந்தேன். இந்த ஏழு இதழ்களை மட்டும் வைத்திருந்தால், அது தொலைந்து போய்விடும் என்று எனக்குத் தெரிந்தது. அதற்கான காரணத்தை நான் சொல்ல விரும்புகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன் கசடதபற, பிரஞ்ஞை இதழ்கள் வெளிவந்ததை பலரும் அறிந்திருப்பார்கள். அதில் பிரஞ்ஞை இதழ் மொத்தத் தொகுதியையும் அந்த இதழை நடத்திய ஆசிரியர் குழுவில் உள்ள ஒருவர் பத்திரமாக வைத்திருந்தார். அதை என் நண்பர் ஒருவர் கேட்க, அந்த ஆசிரியர் குழுவில் உள்ள ஒருவர் படிப்பதற்கு அவற்றைக் கொடுத்தார். இதழ்களை வாங்கிய என் நண்பர், வேற ஒரு எழுத்தாளர் கேட்கிறார் என்று கொடுத்துவிட்டார். படிப்பதற்குத்தான். ஆனால் அந்த எழுத்தாளரிடமிருந்து பிரக்ஞை இதழ் மீள வில்லை. ஆசிரியர் குழுவில் இருந்தவருக்கு இருக்கிற ஒரே பிரதியான பிரக்ஞை முழுவதும் போய் விட்டது. எனக்கு இதுதான் ஞாபகம் வந்தது. இருக்கிற கவனம் இதழ்கள் இப்படியே போய் விட்டால் என்ன பண்ணுவது என்றுதான். அப்படிப் போனால் அதைத் திரும்பவும் கொண்டு வருவது சிரமம். மேலும் சிறுபத்திரிகையில் ஆர்வம் உள்ளவர்கள் கவனம் இதழ் வேண்டுமென்று நினைப்பார்கள். எனக்கு ஒரே வழி கவனம் இதழ்களைப் புத்தகமாக தொகுப்பது என்று.
புத்தகமாகத் தொகுக்க வேண்டுமென்றால் அந்த இதழில் வெளிவந்த தலையங்கம், கட்டுரை, கவிதைகள் என்று தனித்தனியாக அடித்துப் புத்தகமாக தயாரித்திருக்கலாம். ஆனால் அதை அடித்து ப்ரூப் பார்த்து பின் அச்சடிப்பது என்றால் காலம் அதிகம் பிடிக்கும், மேலும் தப்புகளும் அதிகமாக சேர்வதற்கு வாய்ப்பும் ஏற்பட்டுவிடும். கவனம் இதழ்களைப் பார்த்த திருப்தியைக் கொண்டு வர முடியாது. அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அப்படியே ஸ்கேன் செய்து அடிப்பது. இந்த முறையில் கவனம் இதழ்களைப் புத்தகமாகக் கொண்டு வந்துவிட்டேன். இனி யார் எப்போது கேட்டாலும் கவனம் இதழ்த் தொகுதி கிடைத்துவிடும். உண்மையான கவனம் இதழ்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் அச்சிடப்பட்டவை. தாள் மங்கிப் போய்விட்டது. ஆனால் இப்போது பார்க்கும்போது உயர்ந்தத் தாளில் கவனம் இதழ் முழுவதும் வந்து விட்டது. புத்தக அளவில் பார்க்க கவர்ச்சியாக இருக்கிறது.
சரி கவனம் இதழ் யார் யாருக்குப் பயன்படும். முதலில் சிறுபத்திரிகைகளை ஆராய்ச்சிச் செய்யும் தமிழ் மாணவர்களுக்குப் பயன்படும். இரண்டாவதாக சிறுபத்திரிகை ஆரம்பிக்க நினைப்பவருக்கு கவனம் இதழ் ஒரு எடுத்துக்காட்டு. உதாரணமாக கவனம் இதழில் வெளிவந்தத் தலையங்கத்தைப் படித்தால், ஒரு தலையங்கத்தை எப்படி எழுத வேண்டுமென்று தெரிந்து கொள்ளலாம். மேலும் இலக்கிய வாசகர்களுக்கு கவனம் இதழ் உண்மையில் ஒரு விருந்து. இந்த இதழ்களில் காணப்படும் கவிதைகள், கட்டுரைகள், மொழிப்பெயர்ப்பு கவிதைகள், கதைகள் என்று படிப்பவரை எப்போதும் தூண்டும்.
கவனம் புத்தகத்தை எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். ஒருவர் ஏழு இதழ்களில் வெளிவந்த தலையங்கங்களையே படிக்கலாம். அல்லது இதில் வெளிவந்த கவிதைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் படிக்கலாம், அதேபோல் மொழிபெயர்ப்பு கவிதைகள் எடுத்துப் படிக்கலாம். இதில் வெளிவந்துள்ள சிறுகதைகள் தரமாக எழுதப்பட்டவை. அதேபோல் புத்தக விமர்சனங்கள்.
இங்கே சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான் கவனம் இதழ்களின் தொகுப்பை யாரிடம் வேண்டுமானாலும் கொடுக்கலாம், தொலைந்து போனால் கவலை இல்லை என்பதுதான்.