விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 27ஆவது நிகழ்ச்சி சிறப்பா நடந்து முடிந்தது. ஒரு இலக்கியக் கூட்டத்தில் வழக்கமாக எதிர்பார்ப்பவர்களைத்தான் எதிர்பார்க்க முடியும். பெருந்தேவி புதுமைப்பித்தன் கதைகளை தீவிரமாக அலசி கட்டுரை மாதிரி படித்தார். அவருடைய பேச்சு சிறப்பாகவே இருந்தது. அவர் பேச்சை ஆடியோவிலோ வீடியோவிலோ பதிவு செய்யக்கூடாது என்பதால் பதிவு செய்யவில்லை. அவர் புத்தகமாகக் கொண்டு வருவார் என்ற நினைக்கிறேன்.
பெருந்தேவி புதுமைப் பித்தன் கதைகளைப் பற்றி பேசும்போது வாடா மல்லிகை என்ற கதையைப் பற்றி குறிப்பிட்டார். கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் இரண்டு முறை நான் அந்தக் கதையைப் படித்துப் பார்த்தேன்.
அந்தக் கதையில் ஒரு விஷயம் புரியவில்லை. மொத்தமே 3 பக்கங்கள் கொண்ட கதை இது. 1934 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கதை. ஸரஸ÷ என்ற பிராமணப் பெண் விதவையாகி விடுகிறாள். 17 வயதிலேயே சமூகம் அவளுக்கு வெள்ளைக் கலையை மனமுவந்து அளித்தது என்று புபி எழுதி உள்ளார்.
அவள் அழகை வர்ணிக்கும்போது ஸரஸ÷ ஒர் உலவும் கவிதை என்கிறார். இயற்கையின் பரிபூரணக் கிருபையில் மலரும் பருவம் என்கிறார்.
அவள் வீட்டார்கள் ஒரு சமண முனி மாதிரி அவளைக் கோரமாக்கத் துணியவில்லை. அதை எடுத்திருந்தாலும் அவள் கவலைப்பட்டிருக்க மாட்டாள்.
ஸரஸ÷வின் தம்பி துரைசாமிக்குச் சாந்திக் கலியாணம் நடக்கிறது. இதுதான் கதையில் திருப்பத்தைத் தருகிறது. முதலில் ஸரஸ÷விற்குத் தாங்க முடியாத குதூகலம் இருந்தாலும், அவளுடைய உள்ளத்தில் ஒரு விதத் துயரம். அதை வெளிப்படுத்திக் கொள்ள தனிமையில் புழக்கடைக்குச் சென்றுவிட்டாள்.
ஸரஸ÷வைப் பார்த்துக்கொண்டிருந்த அவள் மீது இரக்கப் படுகிற ஒரு ஆண் அவளைப் பின் தொடரந்து, அவள் தோளில் கையை வைத்து, ‘நான் இருக்கிறேன்.பயப்படாதே,’ என்கிறான். அவளைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்கிறான்.
அவள் அதை மறுத்து விடுகிறாள். அவள் சொல்கிறாள் : “உமது தியாகத்திற்கு நான் பலியாக மாட்டேன். அதில் எப்பொழுதும் உமக்கு இந்தக் காலத்து நன் மதிப்பு ஏற்படும். தைரியசால் என்பார்கள். அதை எதிர்பார்க்காறீர். நான் பரத்தையன்று. நான்ஓரு பெண். இயற்கையின் தேவையை நாடுகிறேன்,” என்கிறாள்.
உண்மையில் அவன் அவளைப் பார்த்து, “நீ ஒரு பரத்தை,” என்று சொன்னதால் கோபம் கொண்டு ஸரஸ÷ அவ்வாறு சொல்கிறாள்.
இத்துடன் கதையை புதுமைப்பித்தன் முடிக்கவில்லை. அவள் பிரேதம் கிணற்றில் மிதந்தது என்று எழுதியிருக்கிறார்.
ஏன் ஸரஸ÷ என்ற கதாபாத்திரத்தை புதுமைப்பித்தன் சாகடிக்க வேண்டும். இந்த இடம்தான் எனக்குப் புரியவில்லை.