28ஆம் தேதி இரவு காவேரி எக்ஸ்பிரஸில் பங்களூர் சென்றேன். நானும் மனைவியும். பங்களூரில் உள்ள எங்கள் உறவினர் வீட்டுப் பெண்ணிற்கு திருமண நிச்சயதார்த்தம். அது 30ஆம் தேதி நடக்க உள்ளதால், 29 ஆம் தேதி மகாலிங்கம் என்ற நண்பருடன் காலை 10 மணி சுமாருக்கு பங்களூர் வலம் வந்தேன்.
நான் முன்பெல்லாம் வந்தால், ஒரு பூங்காவில் அமர்ந்துகொண்டு எழுத்தாள நண்பர்களை சந்திப்பது வழக்கம். இப்போது அதெல்லாம் முடிவதில்லை. அதனால் ஒரு சிலரை மட்டும் சந்திக்க முடிகிறது. இந்த முறை பாவண்ணனையும், ஸிந்துஜாவையும் சந்தித்தேன். முன்பு போல் பங்களூர் இல்லை என்பதும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடுகிறது. மெட்ரோ ரயிலில் கொஞ்சம் சீக்கிரம் போய்விடலாம். மகாலிங்கம் என்ற நண்பர் மட்டும் இல்லாவிட்டால் என்னால் எங்கும் செல்ல முடியாது. அலுப்பே காட்டாமல் அவர் எல்லா இடத்திற்கும் என்னை அழைத்துக்கொண்டு போய்விடுவார். பங்களூரில் எதாவது ஓட்டலுக்குச் சென்று எதாவது சாப்பிடாமல் இருக்க மாட்டோம். அதேபோல் புத்தகக் கடைகளுக்குப் போகாமல் இருக்க மாட்டோம்.
மகாலிங்கம் தாடி வைத்துக்கொண்டிருப்பார். அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன். ‘நீங்க தாடி வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். சாப்பிடும்போது சாப்பாட்டுத் துணுக்கெல்லாம் ஒட்டிக் கொள்ளாதா?’
அவர் சிரித்துக்கொண்டே, ‘ஒட்டிக்கொள்ளாது,’ என்று கூறினார். ‘நான் ஷேவ் செய்யாமல் இருப்பதால் என் முகத் தாடை மென்மையாக இருக்கும்,’ என்றார்.
மகாலிங்கம் பேசுவதற்கும் பழகுவதற்கும் நல்ல மனிதர். பஙகளூர் சென்றால் மற்றவர்களைப் பார்க்கிறேனோ இல்லையா குறைந்தபட்சம் மகாலிங்கத்தைப் பார்க்காமல் இருக்க மாட்டேன். மேலும் அவர் சென்னை வந்தால் என்னைக் கட்டாயம் பார்ப்பார். ஆனால் மிகக் குறைந்த நேரமே சென்னையில் பார்ப்பார். அவருக்குச் சென்னையில் ஏகப்பட்ட நண்பர்கள்.
மகாலிங்கத்துடன் நான் பாவண்ணனைப் போய்ப் பார்த்தேன். மெட்ரோ ரயிலில் அழைத்துப் போனார். பாவண்ணன் ஒரு கடுமையான உழைப்பாளி. அலுவலகத்தில் அவரைச் சந்தித்தாலும் அவர் கவனமெல்லாம் அலுவல் விவகாரமே சுற்றிக்கொண்டிருந்தது.
பாவண்ணனைப் பார்த்து நான் சொன்னேன் : ‘நான் பத்து கேள்வி பத்து பதில் என்ற ஒன்றை எடுத்து வருகிறேன். இதுவரை 10 பேர்களைக் கேட்டு விட்டேன். உங்களையும் கேள்வி கேட்க விரும்புகிறேன்.’ அவரும் ஒப்புக்கொண்டார்.
அவர் அலுவலகத்தில் வெளிய உள்ள புல்வெளியில் அவரைப் பேட்டிக் கண்டேன். அவர் நின்று கொண்டே பதில் சொன்னார். அன்றே நான் இன்னொரு எழுத்தாள நண்பரைச் சந்திக்க நினைத்தேன். அவர் வேற யாருமில்லை. ஸிந்துஜா. ஆனால் சந்திக்க முடியவில்லை.
நானும் மகாலிங்கமும் மெட்ரோ ரயிலில் ப்ளாசம்ஸ் என்ற பழைய புத்தகக் கடைக்குச் சென்றோம். பழையப் புத்தகக் கடை என்றாலும். விலை மலிவாக இல்லை. மூன்று புத்தகங்களை அங்கு வாங்கினேன். ஓராம் பாமுக், ஐ பி ஸிங்கர், மாப்பசான் புத்தகங்களை வாங்கினேன். பக்கத்தில் இன்னொரு பழைய புத்தகக் கடை இருந்தது. அது ப்ளாசம்ஸ் விட பிரமாதம். புக் வோர்ம்ஸ் என்று அதன் பெயர். அங்கும் போய் முராகாமியின் இரண்டு புத்தகங்களை வாங்கினேன் (நான் போஸ்டல் காலனியில் புத்தகங்களைக் கொண்டு வைத்துவிட்டதால் புத்தகங்களின் பெயர்களை எழுத முடியவில்லை). பத்து கேள்வி பத்து பதில் பகுதியில் நான் மகாலிங்கத்தையும் பேட்டி எடுக்க விரும்பினேன். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். பின் நான் உறவினர் வீட்டிற்கு திரும்பி வரும்போது மணி ஏழாகிவிட்டது.
பங்களூரில் எனக்குப் பிடித்தது கோல வடை என்ற ஒன்று. இதை அதிகமாக வாங்கிக்கொண்டு சாப்பிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் மல்லேஸ்வர ரோடில் அந்தக் கடையை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஹரமாவ் என்ற இடத்தில் தங்க நேர்ந்ததால் மல்லேஸ்வரத்திலிருந்து காரில் நாங்கள் அங்குப் போய்ச் சேர ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது.
திருமண நிச்சயதார்த்தம் அன்று அதாவது 30ஆம் தேதி சிந்துஜாவை சந்தித்தேன். அன்றே சதாப்தி என்ற துரித ரயிலில் நான் கிளம்பி வர நேரிட்டது. ஸிந்துஜாவை பேட்டி எடுக்க முடியவில்லை.