உங்கள் வீட்டு முயல்குட்டி
பெருந்தேவி
நீங்கள் முயல்குட்டி வாங்கியதாகச் சொன்னீர்கள்
சற்று பொறாமையாக இருந்தது
அது கிளிபோல் பேசுகிறது என்றீர்கள்
சற்று சந்தேகமாக இருந்தது
அதன் பாசிக்கண்ணில் பிரபஞ்சத்தைக்
கண்டதாகக் கூறினீர்கள்
சற்று ஆச்சரியமாக இருந்தது
அதன் பெயர் மிருது என அறிவித்தீர்கள்
தொடவேண்டும் போலிருந்தது
தொட்டும் தொடாமலும் அதைத் தீண்ட
கடவுளால் மட்டுமே முடியும் என்றீர்கள்
கடவுள்மேல் சற்று நம்பிக்கைகூட வந்தது
வெல்வெட் துண்டு அதன் காது என
வர்ணீத்தீர்கள்
வெல்வெட் வெல்வெட் என்று
சொல்லிப் பார்த்துக்கொண்டேன்
அது கேரட்டைக் கடிக்கும் அழகுக்குத்
தலையையே தந்துவிடலாமெனப் பரவசப்பட்டீர்கள்
என் தலையையும் கூடவே தரத்
தயாராக வைத்திருந்தேன்
இன்றுதான் உங்கள் முயலை
முதன்முதலில் பார்த்தேன்
என் வீட்டுச் சுற்றுச் சுவரில்
ஒன்றுக்கடித்துக்கொண்டிருந்தது
என்னவாகவும் இருக்கட்டுமே
உங்கள் வீட்டுக்குள் வைத்துக்கொண்டு
நீங்களே பீற்றிக்கொள்ளுங்கள்
நன்றி : வாயாடிக் கவிதைகள் – பெருந்தேவி – பக்கம் : 112 – விலை : 100 – முதல் பதிப்பு : டிசம்பர் 2016 – வெளியீடு : விருட்சம், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 600 033 – தொலைபேசி எண்: 9444113205 – 9176613205
பின் குறிப்பு :
பெருந்தேவியின் முதல் கவிதை விருட்சம் இதழில்தான் பிரசுரமானது. ரொம்ப வருடங்களுக்கு முன்னால். சமீபத்தில் அவருடைய இரண்டு கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்துள்ளேன். ஒரு தொகுப்பின் பெயர் அழுக்கு சாக்ஸ். மே 2016ல் இத்தொகுப்பு வந்தது. அந்த முறை புத்தகக் கண்காட்சியில் அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆன புத்தகம் இது. ஒரு கவிதைத் தொகுதி இந்த அளவிற்கு விற்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. உடனேயே அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுதியான வாயாடிக் கவிதைகளையும் டிசம்பர் 2016ல் கொண்டு வந்துள்ளேன். ஒரே ஆண்டில் பெருந்தேவியின் இரண்டு கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்துள்ளேன். குறிப்பிடும்படியான பெண் கவிஞர் பெருந்தேவி. அவர் கவிதைகள் எளிதாகப் புரிந்துகொள்ளும்படியாகவும் மேலும் விதவிதமான உணர்வுகளை கவிதை மூலம் உருவாக்குவதிலும் பெரும் வெற்றி அடைந்துள்ளன. ஒவ்வொரு கவிதைத் தொகுதியிலும் வேறு வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். வாயாடிக் கவிதைகள் தொகுதி அழுக்கு சாக்ஸ் கவிதைத் தொகுதியை விட வித்தியாசமான தொகுப்பு.