ழ பத்திரிகையும் விருட்சம் பத்திரிகையும்

 

ஆத்மாநாமை நான் மூன்று முறைதான் சந்தித்திருக்கிறேன். முதன் முறையாக அவரைச் சந்தித்தபோது அவரை எல்லோரும் மதுசூதனன் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தர்கள்.  யாருக்கும் ஆத்மாநாம் என்று தெரியவில்லை.  உண்மையில் அப்போது ஞானக்கூத்தன் என்ற பெயர்தான் பிரபலம்.  என்னைப் போன்ற புதியதாக இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு ஆத்மாநாம் பெயர் புரிபடவில்லை.

அது இலக்கு இலக்கியக் கூட்டம்.  ராயப்பேட்டையில் பீட்டர்ஸ் காலனியில் நடந்தது. (என் ஞாபகத்திலிருந்து இதையெல்லாம் எழுதுகிறேன்).  கூட்டம் முடிந்து வந்தபோது ஆத்மாநாம் கையில் ழ பத்திரிகையின் பிரதிகள் இருந்தன.  அதை அவருக்குத் தெரிந்தவர்களுக்கு தயக்கத்துடன் கொடுத்துக்கொண்டிருந்தார்.  எனக்கு அவ்வளவாய் அறிமுகம் ஆகவில்லை என்பதால், என்னிடம் கொடுக்கவில்லை.  நானும் வாங்கவில்லை.  யாரும் அவரிடம் இதழ் பெற்றுக்கொண்டதற்கு பைசா கொடுக்கவில்லை. இதழைக் கொடுக்கும்போது அவர் முகம் மலர்ச்சியாக இருந்ததுபோல் தோன்றவில்லை.  சிலர் அலட்சியத்துடன் அந்தப் பத்திரிகையை வாங்கிக்கொண்டார்கள்.

சிறு பத்திரிகையைப் பொறுத்தவரை யாரும் அதை விலை கொடுத்து அவ்வளவு சுலபமாய் வாங்க மாட்டார்கள்.  பின் படித்து அபிப்பிராயம் சொல்ல மாட்டார்கள்.  கொடுத்தவர்களை மறுபடியும் பார்த்தால் பத்திரிகையை வாசித்ததுபோல் காட்டிக்கொள்ள மாட்டார்கள். சிறு பத்திரிகை விற்பவர்கள் கூட அலட்சியப் படுத்துவார்கள்.  பணம் தர மாட்டார்கள். கட்டுக்கட்டாய் வீட்டில் பத்திரிகையை அடுக்கி வைத்துக்கொண்டிருக்க வேண்டும்.

ழ பத்திரிகை ஒவ்வொரு இதழிலும் திறமையாக கவிதைகள் பிரசுரமாகியிருக்கும்.  ஆத்மாநாமும் எழுதியிருப்பார்.  ரத்தினச் சுருக்கமாக தலையங்கம் எழுதப்பட்டிருக்கும். சில இதழ்களில் தலையங்கம் இல்லாமல் கூட இருக்கும்.

ஆத்மாநாமைப் பார்த்த அன்றிலிருந்து அவர் மீது எனக்கு தனிப்பட்ட இரக்க உணர்வு சூழ்ந்துகொண்டிருந்தது.  ஒரு பரிதாபமான மனிதரைப் பார்ப்பதுபோல் தோன்றியது.  இன்னும் கூட ஞாபகம் இருக்கிறது.  அடுத்த முறை அவரைச் சந்தித்தபோது எனக்குத் தெரிந்தவர் ஆகிவிட்டார்.  அவர் நிஜம் கவிதையைப் படித்துவிட்டு  என்ன சொல்ல வருகிறீர்கள் இந்தக் கவிதை மூலம் என்று அவரிடமே கேட்டேன்.  தெருவில் அவருடன் போய்க் கொண்டிருந்தபோதுதான் கேட்டேன். அவரும் பதிலும் சொன்னார்.  ஆனால் நான் கேள்வி கேட்டதுதான் இப்போது ஞாபகத்தில் இருக்கிறது.  அவர் என்ன பதில் சொன்னார் என்பது ஞாபகத்தில் இல்லை. என்ன கொடுமை இது.

ஆத்மாநாமின் எதிர்பாராத முடிவிற்குப் பிறகு ழ என்ற பத்திரிகை தொடர்ந்து வரவில்லை.  எப்போதும் கவிதை எழுதுவதும், கவிதையை மொழிபெயர்ப்பதும், பச்சை இங்கில் நோட்புக் முழுவதும் எழுதுவதுமாகவே அவர் இருந்திருக்கிறார்.

அவர் முடிவு எதிர்பாராமல் நடந்திருக்காவிட்டால் இன்னும் கூட அவருடைய கற்பனையான ழ என்ற இதழ் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். ஏகப்பட்ட கவிதைகள் எழுதியிருப்பார்.  பலருடைய கவிதைகள் பிரசுரமாகியிருக்கும்.  ஆனால் அவர் இருக்கும்போதே அவரால் தொடர்ந்து ழ பத்திரிகையில் செயல்பட முடியவில்லை.  அவருடைய நெருங்கிய நண்பர்கள்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஆத்மாநாம் எதிர்பாராத முடிவிற்குப் பிறகுதான் அவர் கவிதைகள் எல்லாவற்றையும் தொகுத்து புத்தகமாக பிரம்மராஜன்தான் கொண்டு வந்தார். சுதர்ஸன் கிராபிக்ஸில் ஆத்மாநாம் கவிதைப் புத்தகம் கட்டுக்கட்டாய் இருக்கும்.  அவரால் அந்தச் சமயத்தில் முழுப்பணமும் கொடுக்க முடிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். அந்த முயற்சியை அவர் செய்யாவிட்டால் ஆத்மாநாம் கவிதைகள் காணாமல் போயிருக்கும்.  பரிசல் புத்தகக் கடையில் காலச்சுவடு வெளியீடாக ஆத்மாநாம் கவிதைகள் புத்தகத்தைப் பார்த்தவுடன் பிரம்மராஜனைப் பாராட்டத் தோன்றுகிறது.

1988ஆம் ஆண்டு நான் விருட்சம் பத்திரிகையை ஆரம்பித்தேன்.  அதே ழ இதழ் போல.  ஆனால் ஆத்மாநாமிற்கு அவருடைய நெருங்கிய நண்பர்கள்தான் இதழ் கொண்டுவர உதவி செய்தார்கள்.   எனக்கோ அப்படி இல்லை.  நான் தனியாகத்தான் விருட்சம் இதழை நடத்தினேன்.  மற்ற நண்பர்களுடன் நானும் விருட்சத்தில் கவிதைகள் எழுதுவேன். ஆனால் விருட்சம் இதழில் கவிதைகள் அதிகமாக வந்தாலும், சிறுகதைகளும் வரும், புத்தக விமர்சனமும் வரும். ஆத்மாநாம் போல நானும் இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது விருட்சம் இதழை பார்க்கிறவர்களிடம் கொடுத்துக்கொண்டிருப்பேன்.  பலர் என்னிடமிருந்து வாங்கிக்கொள்வார்கள்.  அப்பத்திரிகைக்கான பணத்தைத் தர மாட்டார்கள்.  சிலர் அலட்சியமாக அதை பேப்பர் ரோஸ்ட் மாதிரி மடித்து வைத்துக்கொள்வார்கள்.  யாரும் எடுத்துக்கொண்டு போய் படித்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்.  கடிதம் எழுதமாட்டார்கள்.   விருட்சத்தில் தொடர்ந்து எழுதும் நண்பர்கள் பார்த்தாலும் விருட்சம் குறித்து ஜாக்கிரதையாகப் பேசுவதைத் தவிர்ப்பார்கள்.  யார் கவிதைக் குறித்தும் முணுமுணுக்கக் கூட மாட்டார்கள்.  அந்தக் காலத்தில் ஆத்மாநாமின் நெருங்கிய நண்பர்கள் சிலர், என்னை அழகியசிங்கர் என்று கூப்பிடுவதற்குப் பதில் ஆத்மாநாம் என்று தவறுதலாகக் குறிப்பிட்டுப் பேசிவிடுவார்கள்.  எனக்கோ கேட்கும்போது திகைப்பாக இருக்கும். அதேபோல் பத்திரிகை கொண்டு வந்த என்னை ஆத்மாநாமாகத்தான் தவறிப்போய் அவர்களால் சொல்ல முடிந்தது.

இதோ நான் 102வது இதழ் வரை விருட்சம் கொண்டு வந்துவிட்டேன்.  நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.  ஆத்மாநாமின் நிறைவுபெற முடியாத ஆசையை நான் நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக.  அவருடைய  மறைமுகமான வாழ்த்துக்களால்தான் என்னால் 100 இதழ்களுக்கு மேல் விருட்சம் கொண்டு வர முடிந்திருக்கிறது என்று.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன