வீடு
அய்யப்பமாதவன்
அந்தரத்தில் தேடுகிறேன் ஒரு வீடு
சதுரம் சதுரமாய்
நீள்கின்றன குறுகுகின்றன
வைரங்களுக்குப் போல் விலைகள்
இன்னும் இன்னும் சுற்றுகின்றேன்
கற்பனையில் சொந்தமாகும்
வீடுகளில் புத்தக அலமாரிகளை
நிர்மாணிக்கின்றேன்
பால்கனியில் மனைவி பூந்தொட்டிகள்
வாங்கி பராமரிக்கின்றாள்
சமையலறை அவள் விருப்பத்திற்கு
விட்டுவிட்டேன்
நடு கூடத்தில் கலர் டிவி
இரண்டு சேர் வைத்தாகிவிட்டது
குழந்தை படங்கள்
மாட்டியாகிவிட்டது
சாமி அறையைத் தீர்மானிப்பதில் குழப்பம்
படுக்கையறையில் பீரோக்கள் வைத்தாயிற்று
கட்டில் போட இடமில்லை
நானும் அவளும்
புனையும் கற்பனையில்
வீடுகளை சொந்தமாக்கிக்
கொண்டே இருக்கிறோம்.
நன்றி : நீர்வெளி – கவிதைகள் – அய்யப்ப மாதவன் – வெளியீடு: அகரம், மனை எண் 1. நிர்மலா நகர், தஞ்சாவூர் – வெளியான ஆண்டு : டிசம்பர் 2003 – விலை : ரூ.35