1. இப்போது நடக்கும் ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் யார் நினைப்பதற்கு..நான் சாதாரண குடி மகன்.
2. குடி மகன் என்றால் எப்போதும் ‘குடி’க்கிற மகனா?
இல்லை. இல்லை. நான் வெறுமனே தண்ணீர் மட்டும்தான் குடிப்பேன்.
3. டாஸ்மா கடைக்குக் கூட்டம் முண்டி அடிக்கிறதே..உங்கள் புத்தகங்களை வாங்க யாரும் உங்கள் வீட்டிற்கு வருவதில்லையே..
புத்தகம் வாங்க யாரும் வராவிட்டால் பரவாயில்லை. ஆனால் டாஸ்மா கடை முன் நிற்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
4. எந்த எழுத்தாளரை நீங்கள் போற்றுகிறீர்கள்?
‘மறுதுறை மூட்டம்’ என்ற நேர்காணல் புத்தகம் எழுதிய நாகார்ஜ÷னனை. இப் புத்தகம் ஒரு வித சுயசரிதம் போல் இருக்கிறது. 154 பக்கங்கள் படித்துவிட்டேன். 240 பக்கங்கள் வரை இப் புத்தகம் உள்ளது. இதுமாதிரியான வெளிப்படையான புத்தகத்தை நான் இதுவரை படித்ததில்லை.
5. உங்கள் பேரன் என்ன செய்கிறான் ?
பால்கனியிலிருந்து நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தைத் தூக்கிப் போடுகிறான்.
6. உங்கள் முன்னால் கவிதைப் புத்தகம், சிறுகதைப் புத்தகம், கட்டுரைப் புத்தகம், நாவல் புத்தகம் இருக்கிறது.. எதை எடுத்துப் படிப்பீர்கள்?
கவிதைப் புத்தகத்தை. சீக்கிரம் படித்து முடித்து விடலாம்.
7. எந்த எழுத்தாளர் கையெழுத்தை நீங்கள் ரசித்திருக்கிறீர்கள்..
பிரமிள் கையெழுத்தை. புரியும்படி பிரமாதமாக எழுதியிருப்பார். கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி மணி மணியாக இருக்கும் கையெழுத்து. அவர் கையெழுத்தை அவரிடம் பாராட்டியிருக்கிறேன். பொறாமைப் படாதீர் என்பார்.
8. எதன் மீது உங்களுக்குப் பக்தி அதிகம்?
விருட்சம் பத்திரிகை மீது. 100 இதழ்கள் வந்தபிறகும் இன்னும் நிறுத்த வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை.
9. நீங்கள் இப்போது என்ன நினைக்கிறீர்கள்?
மாதம் ஒரு முறை கூட்டம் கூடி கவிதைகளை வாசிக்க எல்லோரையும் அழைக்க நினைக்கிறேன்.
10. சமீபத்தில் டில்லி சென்ற உங்கள் விமானப் பயணம் எப்படி இருந்தது?
விமானத்தில் போகும்போது காரணம் இல்லாத பயம் தொற்றிக்கொண்டிருந்தது. சென்னை வரும்போது விமானம் ஒரே ஆட்டமாக ஆடியது. வானிலை சரியில்லை என்று காரணம் சொன்னார்கள். இன்னும் சில பயணங்கள் மேற்கொண்டால் விமானப் பயணப் பயம் என்னை விட்டுப் போய்விடும்.
12. 102வது இதழ் நவீன விருட்சம் முடிந்து விட்டதா?
முடிந்துவிட்டது. அசோகமித்திரன் நினைவாக இந்த இதழ் வெளிவருகிறது. 100 பக்கங்களுக்கு மேல். அடுத்த வாரத்திற்குள் வந்துவிடும்.
13. சமீபத்தில் சந்தித்த கவிஞர் நாராணோ ஜெயராமனைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
சும்மா இருந்தால் போதும் என்கிறார். எந்தப் புத்தகம் கொடுத்தாலும் படிக்க விரும்பவில்லை அவர்.