என்று தணியும் இந்தத் தண்ணீர் தாகம்….

 

கோடை பயங்கரமான தன் விஸ்வரூபத்தைக் காட்டத் தொடங்கி விட்டது.  கிணற்றில் தண்ணீர் இல்லை.  போரில் தண்ணீர் இல்லை.  கார்ப்பரேஷன் தண்ணீர் வருவது நின்றுவிட்டது.  நாங்கள் மெட்ரோ தண்ணீரை வாங்கிக் கொள்கிறோம்.  முதலில் 3 நாட்களுக்கு ஒரு முறை வந்து கொண்டிருந்த மெட்ரோ தண்ணீர், இப்போது ஒரு வாரம் காலம் ஆகிறது.  போகப் போக இது அதிக நாட்கள் ஆகும்.

கொஞ்சம் வசதியாக இருப்பவர்கள் தண்ணீரை வாங்க முடிகிறது.  ஆனால் தண்ணீர் வாங்க முடியாதவர்களின் நிலை என்ன? எங்கள் தெருவில் தண்ணீரை வாங்க முடியாதவர்கள் நிலை அதிகம்.  லாரியில் வரும் தண்ணீரைப் பெறுவதற்கு அவர்களிடம் போட்டியும் சண்டையும் அதிகமாகவே இருக்கிறது.

ஒருவரை ஒருவர் வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்கள்.  முறையாகப் பேசியவர்கள் முறையில்லாமல் பேசுகிறார்கள்.  தண்ணீரை விலை கொடுத்து வாங்கினாலும், பணம் கட்டிய ரசீதை எடுத்துக்கொண்டு தண்ணீர் கொண்டு தரும் இடத்திற்கு ஒரு வாரம் கழித்துச் செல்ல வேண்டும்.  தண்ணீரை அனுப்பும் படி கேட்டுக்கொள்ளவேண்டும்.  ஒரு லாரி தண்ணீர் ரூ.600 தான்.  அதை எடுத்துக்கொண்டு வருபவர்களுக்கு ரூ100 தரவேண்டும்.

எங்கள் தெருவில் தண்ணீர் லாரி வர பல தடைகள் உண்டு.  தெருவில் நுழைவதற்கு முன் இரு சக்கர வாகனங்கள், கார்கள் நிற்கும், பெரிய மெட்ரோ லாரி நுழைய முடியாதபடிக்கு மூன்று சக்கர வாகனம் நின்றுகொண்டிருக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெள்ளம் வந்து இந்த இடம் நாசமாகிப் போனது.  அந்த இடமா இப்படி வெயிலில் காய்கிறது என்று தோன்றுகிறது.  இந்த வலியைச் சமாளிக்க என்ன வழி என்று யோசிக்கிறேன்.  கீழ்க்கண்டவாறு சில முயற்சிகளை செய்து பார்க்கலாமென்று தோன்றுகிறது.

1. தினமும் குளிக்கும் வழக்கத்தை விட்டு விட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை குளிக்கலாம்;

2.  துணி துவைப்பதைத் தள்ளிப் போடலாம்.  ஒரு சட்டை பேன்ட் ஒரு வாரம் வரை பயன் படுத்திக்கொள்ளலாம்.

3.  தண்ணீரை எல்லோரும் அளந்து அளந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

4. தண்ணீர் ரொம்பப் பிரச்சினையாக இருந்தால், உறவினர் வீட்டிற்குச் சென்று விடலாம்.  ஆனால் உறவினர் வீடு சென்னையை விட்டு வேறு எங்காவது இருக்க வேண்டும்.

5. யாராவது வீட்டிற்கு வருவதாக இருந்தால் தண்ணீரையும் கையில் கொண்டு வரும்படி சொல்லலாம்.

6. தண்ணீரும் கண்ணீரும் என்று கவிதை எழுதி மன ஆதங்கத்தைத் தணித்துக்கொள்ளலாம்.

7. துணியை அலசிய தண்ணீரை கீழே கொட்டாமல் அதையே பாத்திரம் கழுவவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

8.  என்னைப் போல் ரிட்டையர்டு ஆனவர்களுக்குத்தான் தண்ணீர் இல்லாமல் இருப்பது பிரச்சினை.  அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்குப் பிரச்சினை இல்லை.  குளிப்பது, காலைக் கடன்களை முடிப்பது எல்லாம் அலுவலகத்தில் முடித்துவிடலாம்.

9. தண்ணீரைப் பற்றிய கவலையை மறக்க.  எதாவது புத்தகம் எடுத்துப் படிக்கலாம்.  அந்தப் புத்தகம் போர் அடித்தாலும் பரவாயில்லை.

10.  எழுதத் தெரிந்தவராக இருந்தால் அசோகமித்திரன் தண்ணீர் நாவல் போல, தண்ணீர் குறித்து இன்னொரு நாவல் எழுதலாம்.

இதைத் தவிர உங்களுக்கு எதாவது வழி தெரி0ந்தால் சொல்லவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன