அழகியசிங்கர்
அவதார ஆசை
திலகபாமா
மலராய் இருந்திருந்தேன்
மகரந்தத்துள் உனைத் திணிக்கப் பார்க்கின்றாய்
தென்றலாய் இருந்திருந்தேன்
என்னில் சுகம் கண்டு
உனதென்று எனை உன்
சுவாசமாய் உள்ளிழுக்கப் பார்க்கின்றாய்
தீங்கனியாய் இருந்திருந்தேன்
தோலுரித்து விதையெடுத்து
மண்ணில் புதைக்க நினைக்கின்றாய்
சங்கீதமென்றிருந்தேன்
தாளங்களுக்குள் சிக்கவென்று
தொடைதட்டிப் பார்க்கின்றாய்
நெருஞ்சிமுள்ளாய்
அவதார மெடுக்க ஆசை
எனை நானாய் இருக்க
விட்டு விடுவாயென்பதாலும்
மிதிப்பவர்கள் சதை மீறி
குத்திவிடலாமென்பதாலும்
நன்றி : சூரியாள் – கவிதைகள் – திலகபாமா – வெளியீடு : மதி நிலையம் – விலை : ரூ.35 – வெளிவந்த ஆண்டு : 2002