எத்தனை திட்டுக்களை ஒரு நாளைக்கு வாங்குவீர்கள்?

 

அழகியசிங்கர்

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 தடவைகளாவது நான் திட்டு வாங்காமல் இருப்பதில்லை. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று என்னைத் திட்டாதவர்கள் தினமும் பத்துப் பேர்களுக்குக் குறையில்லாமல் இருப்பார்கள்.   இதைச் சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.  என்னை யார் திட்டுகிறார்கள் என்ற கேள்வியைக் கேட்பீர்கள்.  உண்மைதான்.  என்னை யார் திட்டப் போகிறார்கள்? திட்டுவதற்குக் காரணம்தான் என்ன இருக்கிறது. ஆனால் நீங்கள் திட்டுதல் என்பதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?  என் முகத்துக்கு நேரே கண்டபடி பேசி திட்டுவதாக நினைக்காதீர்கள்.  யாருக்கும் என்டமிருந்து எந்தப் புகாரும் இல்லை.  பின் திட்டு என்றால் என்ன?

திட்டு என்பது ஒரு பாவனை.  அதை எல்லாரிடமும் எல்லா நேரத்திலும் நமக்குக் கிடைக்காமல் போகாது.  உங்களுக்கு இன்னும் புரியவில்லை என்று தோன்றுகிறது.  உண்மையில் திட்டுபவர்களுக்கு நாம் பிறரைத் திட்டுகிறோம் என்பது தெரிவதே இல்லை.  ஏன் நான் கூட என்னை அறியாமல் யாரையாவது திட்டியிருப்பேன்.

காலையில் எழுந்தவுடன் கம்ப்யூட்டர் முன்னால் அமருகிறேன் என்று வைத்தக்கொள்ளுங்கள்.  என் திட்டு உடனே ஆரம்பமாகிவிடும். ‘காலையிலே எழுந்தவுடனே கம்ப்யூட்டரா?’ என்று மனைவி ஆரம்பிப்பாள் முதல் திட்டை.. ‘படுக்கையை மடித்து வைக்கவில்லையா’ என்று இரண்டாவது திட்டுக்கும் போய்விடுவாள்.   நான் பதில் சொல்ல மாட்டேன்.

   என் வீட்டு பால்கனியில் எப்போதும் காலை வேளையில் காக்கைகள் அமர்ந்துகொண்டு கத்திக்கொண்டே இருக்கும். தாங்க முடியாது சத்தம்.  நான் கிட்டே போய், ‘யே காக்கையே கத்தாதே,’ என்பேன்.  உண்மையில் அது என்னை, என் குடும்பத்தைத் திட்டுகிறது என்றுதான் நினைத்துக்கொள்வேன். இதெல்லாம் திட்டா என்று நீங்கள் கேலியாகப் பார்ப்பது எனக்குத் தெரிகிறது. அப்படிப் பார்ப்பதுகூட திட்டுதான்.  இன்னும் உதாரணம் சொல்கிறேன். போன மாதம் 28ஆம்தேதி டாக் சென்டரில் ஒரு கூட்டம் நடந்தது.  உங்களுக்குத் தெரியுமா?  ஒன்றுமில்லை அந்தக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை  நடக்கும்.  இந்த முறையும் அதுமாதிரி  நடந்தது. தமிழ்மகன் என்ற எழுத்தாளரின் நாவல் பற்றிய கூட்டம் அது.  தமிழ்மகன் அதிகமாக நாவல்கள் எழுதி உள்ளார்.  ‘மானுடப் பண்ணை’ என்ற நாவலைப் பற்றி அன்று பேச்சு.

சரியாக 6 மணிக்கு டாக் சென்டருக்குச் சென்றேன்.  வழக்கம்போல் தட்டில் சுடச்சுட கிச்சடி, ஒரு போன்டா வாங்கிக்கொண்டு வந்து உட்கார்ந்தேன்.  என் தட்டில் ஒரு போன்டாதான் போட்டார்கள். என் அருகில் எனக்குத் தெரிந்த நண்பர் இருந்தார்.  அவர் தட்டில் 2 போன்டாக்கள் இருந்தன.  அவர் கேட்டார். அதாவது திட்டினார்.  “என்ன சரியான நேரத்திற்கு வந்திருக்கீங்க போலிருக்கு,” என்றார்.  உங்களுக்கு இந்தத் திட்டு என்னவென்று புரியுதா? கூட்டத்திற்கு வருவதுபோல் கிச்சடி சாப்பிட வந்திருக்கிறேன் என்ற அர்த்தம்.  இப்படித்தான் நம்மிடம் சிலரும், நாமும் சிலரிடமும் பேசிவிடுகிறோம்.

டாக் சென்டருக்குப் போகும் முன் வழக்கம் போல் அன்றைய திட்டுக்கள் ஆரம்பமாகாமல் இல்லை.  முன்னதாக நான் கார் எடுத்துக்கொண்டு என் பெண் வீட்டிற்குச் சென்றேன். என் கூட காரில் என் மனைவியும் வந்தாள்.  அவளுக்கு நான் காரை எடுத்துக்கொண்டு போவது அவ்வளவாய் விருப்பம் இருப்பதில்லை.  வண்டியில் உட்கார்ந்தவுடன், பெல்ட் போடுங்கள் என்று திட்ட ஆரம்பித்தாள்.  உண்மையில் என்னுடன் காரும் திட்டு வாங்குவதாகத்தான் நான் நினைத்துக்கொண்டேன்.

பெண் வீட்டிலிருந்து கிளம்பி திரும்பி வீடு வந்தேன்.  பெண் கேட்டாள். “ஏன் சீக்கிரம் போக வேண்டுமென்று நினைக்கிறே?” இதுவும் திட்டு.  காரை எடுத்துக்கொண்டு வீடு திரும்பும்போது மனைவி இன்டிக்கேட்டர் போடும்படி அடிக்கடி திட்டு.  காருக்கும் சேர்த்து.

இதெல்லாம் பரவாயில்லை.  வண்டியின் பின்னாலும் முன்னாலும் வருகிற டூ வீலர்கள் எல்லாம், ஆட்டோக்காரர்கள் எல்லாம், காரில் செல்பவர்கள் எல்லாம், ‘வண்டியை   ஒழுங்காய் ஓட்டுய்யா’ என்று திட்டாமல் இருப்பதில்லை.  என் முன்னாலும் பின்னாலும் வருபவர்கள்தான் ஒழுங்காக வண்டிகளை ஓட்டுவதில்லை.  ஆனால் நான் வண்டியை ஒழுங்காகத்தான் ஓட்டுகிறேன். ஆனால் திட்டு எனக்குத்தான்.  ஆர்யகவுடர் ரோடு வழியாக நீங்கள் மாலை நேரத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு ஏன் நடந்துகூட சென்றால் போதும், யாரிடமும் திட்டு வாங்காமல் தப்ப முடியாது.  அதேபோல் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் நீங்கள் மிளகாய் பஜ்ஜி வாங்க நிற்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  உங்களுக்கு பஜ்ஜியைக் கட்டிக் கொடுப்பவர், உங்களையே பார்க்க மாட்டார்.  உங்களை மௌன மொழியில் திட்டுகிறார் என்று அர்த்தம்.     இப்படி தினமும் ஒரு பத்து திட்டாவது வாங்காமல் இருப்பதில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன