டாக்டர் ருத்ரன் சொன்னது நடந்தே விட்டது..

 

அழகியசிங்கர்

உங்களுக்கு ராம் மோஹனைத் தெரியுமா?  தெரியாதா?..காளி-தாஸ் என்ற கவிஞரை – தெரியாதா?  என்ன இது அவருடைய கவிதைத் தொகுதி கூட திரும்பவும் கொண்டு வந்துள்ளேன்.  சரி காளி-தாஸ் யார் என்று தெரியவேண்டாம்..ஆனால் ஸ்டெல்லா புரூûஸத் தெரியுமா? இப்போது புதியதாக எழுதுபவர்களுக்கு அவரைத் தெரிய வாய்ப்பில்லை.  இன்னும் சில வருடங்கள் போனால் சுத்தமாக மறந்து விடுவார்கள்.  இது நிதர்சனம்.  இதற்காக வருந்த முடியுமா?  ஆனால் இன்றுதான் ஸ்டெல்லா புரூஸ் மறைந்த தினம்.

அவர் மரணம் எப்படி நடந்தது?  கொஞ்சங்கூட அவருடன் பழகியவர்கள் நம்ப மாட்டார்கள்.  நானும் நம்பவில்லை.  ஆனால் அவருக்கு மரணம் நடந்தே விட்டது.  2008ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் தேதி அவர் இறந்து விட்டார்.  டாக்டர் ருத்திரனைத் தெரியுமா? அவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.  அவர் எனக்கு நண்பர். எங்கே சந்திப்பேன் என்று கேட்கிறீர்களா?  அவரை ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சி சாலையில் சந்திப்பேன்.

அவரை ஒரு புத்தகக் காட்சி சாலையில் சந்தித்தபோது, ஸ்டெல்லா புரூஸ் பற்றி சொன்னேன்.  ஸ்டெல்லா புரூஸ் அப்போது மகா துன்பத்தில் இருந்தார்.  வாழ்வதற்கே பிடிக்க வில்லை.  அவருடைய மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார்.  அவரால் அந்தத் துயரத்தைத் தாங்க முடியவில்லை.  கிட்டத்தட்ட 6 மாதங்கள் அந்தத் துயரத்துடன் இருந்தார்.

டாக்டர் ருத்ரன்தான் சொன்னார் : “நீங்கள் உடனடியாக அவருடைய உறவினர் வீட்டில் அழைத்துக்கொண்டு போய் விட வேண்டும்.  இல்லாவிட்டால் அவருடன் யாராவது இருக்க வேண்டும்,” என்று.

“ஏன்?”

“அவர் தற்கொலை செய்துகொள்ள நினைப்பார்..”

எனக்கு அவர் சொன்னதைக் கேட்கும்போது, நம்ப முடியாமல் இருந்தது.  ஸ்டெல்லா புரூஸ÷ற்கு அப்போது வயது 68.  ஒருவர் அந்த வயதில் தூக்குப் போட்டுக்கொள்வார் என்பதை நம்ப மறுத்தேன். மேலும் ஸ்டெல்லா புரூஸ் அவர்கள் அவருடைய உறவினர் வட்டத்தைத் துண்டித்து வந்தவர்.  அவரால் யார் வீட்டிலும் பொருந்தி இருக்க முடியாது.

ஆனால் ஒரு காலத்தில் நான் அவரை அடிக்கடி சந்தித்திருக்கிறேன்.  அவர்கள் வீட்டிற்கெல்லாம் சென்றிருக்கிறேன்.   வீட்டில் திருநெல்வேலி முறுக்கும், டீயும் கொடுப்பார்கள். நன்றாகப் பேசுவார்கள்.

அவர் வங்கியில் வைப்புத் தொகையாக வைத்திருந்த வட்டியில் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தார்.  எளிமையான வாழ்க்கை.  புத்தகம் படிப்பார்.  இசைக் கேட்பார்.  அவருக்குப் பிடித்த நண்பர்களைப் பார்ப்பார்.  அவருக்குத் தோன்றுவதை ஆனந்தவிகடனுக்கு எழுதி அனுப்புவார்.  அவர் எழுத்தில் உள்ள வசீகரம் ஆனந்தவிகடன் ஆசிரியருக்குப் பிடித்துப் போயிற்று.  அவருக்கு ஸ்டெல்லாபுரூஸ் மீது அளவு கடந்த மரியாதை உண்டு.

ஸ்டெல்லா புரூஸ÷ற்கு ஜே கிருஷ்ணமூர்த்தி மீது அபார நம்பிக்கை உண்டு.  எனக்குத் தெரிந்து இரண்டு எழுத்தாளர்களுக்கு ஜே கிருஷ்ணமூர்த்தி மீது அபார நம்பிக்கை உண்டு.  ஒருவர் ஸ்டெல்லா புரூஸ்.  இன்னொருவர் பிரமிள்.

ருத்திரன் சொன்னது என் மனதில் உறுத்திக்கொண்டிருந்தது.  நான் என்ன செய்வது என்று முழித்துக் கொண்டிருந்தேன்.  மேலும் அவர் தற்கொலை செய்துகொள்ள மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது.  68 வயதில் யாரும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்  என்று நம்பினேன்.  அந்தத் தருணத்தில் சிபிச்செல்வன், விஜய் மகேந்திரன் என்று என் இலக்கிய நண்பர்களை அழைத்துக்கொண்டு அவரைப் பார்க்கச் செல்வேன்.  மனைவி இறந்ததைச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார்.  இந்த இடத்தில் தேவராஜன் என்ற நண்பரைப் பற்றி சொல்ல வேண்டும்.  அவர் ஸ்டெல்லா புரூஸ÷டன் அவர் வீட்டில் இருந்தார். அவர் மனைவி இறந்த தருணத்தில்.  ஆனாலும் அவராலும் அங்கே தொடர்ந்து இருக்க முடியவில்லை.

இரண்டு நிகழ்ச்சிகள் நடந்திருந்தால், ஸ்டெல்லா புரூûஸ தப்ப வைத்திருக்கலாம்.  ஒன்று : அவருடைய உறவினர்கள் வீட்டில் அழைத்துக்கொண்டு போயிருக்கலாம்.  இரண்டு : அவர் இருந்த இடத்திலிருந்து வேறு எங்காவது அழைத்துக்கொண்டு போயிருக்கலாம். இரண்டும்  நடக்கவில்லை.

“ஒரு முறை என்னைப் பார்க்க வரச் சொல்லுங்கள்,” என்றார் ருத்திரன்.  ஸ்டெல்லா புரூஸ் அப்படியெல்லாம் யாரையும் பார்க்கப் போக மாட்டார்.  அழைத்துக்கொண்டு போவது சிரமம்.

 

என்னசெய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன