மறக்க முடியாத சுஜாதா

அழகியசிங்கர்
நேற்றுதான் சுஜாதாவின் மறைந்த நாள் என்பது தெரியாமல் போய்விட்டது. இன்றுதான் என்று தவறாக நினைத்துவிட்டேன். சுஜாதா மாதிரி ஒரு எழுத்தாளர் இனி தமிழில் பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை. தமிழுக்கு அவர் எழுத்து புதிது. ஆனால் பலர் இதை மறுப்பார்கள். இன்று எல்லோரும் படிக்கக் கூடிய நடையை தடங்கல் இல்லாமல் அளித்தவர். சமீபத்தில் லைப்ரரி போய் அவருடைய தூண்டில் கதைகள் என்ற புத்தகத்தை எடுத்து வந்தேன். படிக்க படிக்க விட முடியவில்லை. அப்படியொரு எழுத்து.
 
சி சு செல்ப்பாவின் எழுத்து காலத்தில்தான் வணிகப் பத்திரிகை எழுத்து சிறுபத்திரிகை எழுத்து என்று பெரிய பள்ளம் விழுந்து விட்டது. ஆனால் இப்போது அதுமாதிரியான பள்ளம் இல்லை. பெரிய பத்திரிகைகளை தன் வழிக்குக் கொண்டு வந்த பெருமை சுஜாதாவிற்கு உண்டு. அவர் எவ்வளவு வேகமாகப் படிக்கிறாரோ அதே வேகத்தில் எழுதக் கூடியவர். அறிவியல் புனை கதைகளை தமிழுக்கு முயற்சி செய்த பெருமை அவருக்கு உண்டு. அறிவியல் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.
 
மே 1968ல் நகுலன் குருúக்ஷத்ரம் என்ற தொகுப்பை கொண்டு வந்துள்ளார். அதில் எஸ் ரங்கராஜன் என்ற பெயரில் தனிமைகொண்டு என்ற கதை எழுதி உள்ளார். அந்த ரங்கராஜன் வேறு யாருமில்லை நம்ம சுஜாதாதான். அக் கதையை எப்படி ஆரம்பிக்கிறார் என்பதைப் பாருங்கள் :
 
“இந்தக் கதை ஆர அமரத்தான் செல்லும். ரயில் தப்புகிற அவசரத்திலோ அல்லது ஒரு பிரயாணப் பொழுதுபோக்குக்காவோ இதைப் படிக்க வேண்டாம். தனிமையில் படித்தால் நல்லது. ரேடியோவை அணைத்துவிடுங்கள். குழந்தைகள் எல்லாம் தூங்கட்டும். இரவி இறங்கி இரவு வந்ததும், மௌனம் வந்ததும், தின வாழ்க்கையின் அவசரங்கள் செத்ததும், சமாதானமான நிலையில் உங்கள் மனதில் இரக்கம், பச்சாதாபம், வெறுப்பு, அதி தீவிரமான அன்பு இந்த உணர்ச்சிகளுக்கு எல்லாம் வரவேற்பு இருக்கும்போது படியுங்கள். சாப்பிட்டுவிட்டுப் படியுங்கள். நிதானமாகப் படியுங்கள். தயவுசெய்து வரிகளைத் தப்ப விடாதீர்கள்…”
 
அத் தொகுப்பிலே சுஜாதாவின் இந்தக் கதை குறிப்பிடும்படியான கதையாக உள்ளது. வித்தியாசமாக எழுதி உள்ளார். டைரியில் பேசுவதுபோல் கதையை எழுதி உள்ளார்.
 
ஒரு சமயத்தில் குமுதம் பத்திரிகைக்கு பொறுப்பாசிரியராக அவர் இருந்தபோது, சிறு பத்திரிகைகளில் உலாவி வந்த புதுக்கவிதைகளை ஏராளமாக உள்ளே நுழைந்து விட்டார். இதை அப்போது உள்ள யாரும் செய்திருக்க மாட்டார்கள். அன்றிலிருந்து புதுக்கவிதைகளை பெரும் பத்திரிகைகள் எடுத்துக்கொண்டு விட்டன. அவர் கதைகள் ஒவ்வொன்றும் எப்போதும் படித்துக்கொண்டே இருக்கலாம்.
 
ஆனால் யாரும் சுஜாதாவை பாராட்டி சொல்ல மாட்டார்கள். அதுமாதிரி எழுத இப்போது யாரும் இருப்பதாக தெரியவில்லை. பொதுவாக ஜனரஞ்சக எழுத்தாளர்கள் யார் கண்ணிலும் படாமல் ஜனரஞ்சகமாகவே இருப்பார்கள். ஆனால் சுஜாதா விதிவிலக்கு. தீவிர எழுத்துக்கும் ஜனரஞ்சக எழுத்துக்கும் பாலமாக இருந்து செயல் பட்டிருக்கிறார். நிறையா எழுதி விட்டார். இலக்கியக் கூட்டங்களிலும் அவர் பேசியிருக்கிறார். எழுதி தயாரித்து வந்து கட்டுரையாக வாசித்து விடுவார். அவர் மனதுக்குப் பிடித்த படைப்புகளைப் பாராட்டாமல் இருக்க மாட்டார். அவர் தொடர்கதைகளில் கணேஷ் வசந்த் பேசுகிற உரையாடலில் எல்லாம் இருக்கும். திடீரென்று விருட்சம் பத்திரிகையைப் பற்றிய பேச்சும் இருக்கும். அவர் புத்தகம் எப்போதும் விற்றுக்கொண்டே இருக்கும். ஒரு சமயம் சுந்தர ராமசாமி கொண்டு வந்த காலச்சுவடு இலக்கிய மலரை முழுவதும் படித்துவிட்டு விடு விடுவென்று விமர்சனம் எழுதி விட்டார். என் சகோதரன் அடிக்கடி சுஜாதா புத்தகத்திலிருந்து ஒரு வரி சொல்வான். ‘அவள் உட்கார்ந்த இடத்தைத் தட்டினான்,’ என்று. எந்தப் புத்ததத்தில் இதைப் படித்தான் என்பது தெரியவில்லை. ஆபாசத்தைக் கூட நகைச்சுவை உணர்வோட சொல்லக் கூடியவர்.
 
கணையாழியில் தீவிரமாக கடைசிப் பக்கத்திலிருந்து எல்லாவற்றையும் எழுதி தள்ளி விடுவார். எனக்கு இன்னும்கூட குருபிராசாத்தின் கடைசி தினங்கள் என்ற குறுநாவல் ஞாபகத்திற்கு வருகிறது. திரைக்கதைகளையும் அவர் அலட்சியமாக எழுதி உள்ளார். சுஜாதாவின் கதையைத்தான் எந்திரன் என்ற படமாக எடுத்து உள்ளார்கள். திரைக் கதை எழுதுவது எப்படி என்ற சுஜாதாவின் புத்தகம் பிரபலமான புத்தகம். நாடகம் எழுதுவதிலும் அவர் முயற்சி செய்யாமல் இல்லை.
 
இந்தத் தூண்டில் கதைகள் என்ற புத்தகத்தில் ‘மற்றொரு பாலு’ என்று அறிவியல் கதையும், ‘குந்தவியின் காதல்’ என்கிற பெயரில் சரித்திர கதையும் எழுதியிருக்கிறார். உடனே படித்து முடித்து விடலாம். நான் புத்தகத்தை மூடி வைக்காமல் படித்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் சுஜாதா மாதிரி ஒரு எழுத்தாளர் இப்போது உண்டா என்பது தெரியவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன