முதியோர் இல்லத்தை விட்டு பறந்த பறவைகள்

 

அழகியசிங்கர்

லட்சியப் பறவைகள் என்றபெயரில் உஷாதீபன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.  இது எத்தனைப் பேருக்குத் தெரியும்.  உண்மையில் பல புத்தகங்கள் பலருக்குத் தெரிவதில்லை.  இந்தப் புத்தகத்தை உஷாதீபன் படிப்பதற்கு எனக்கு அளித்தபோது உடனடியாகப் படிக்க நினைத்தேன். நினைத்தேன் என்பதே படிக்க முடியாமல் போகும் தடைக்கல்லாக நினைதக்கிறேன்.  இதோ இப்போது படித்து முடித்துவிட்டேன்.

ஒரு நாவலில் கதைக்களத்தை எப்படி உருவாக்குகிறார் என்பதை முதலில் கவனிக்கத் தோன்றியது.   முதியோர் இல்லத்திலிருந்து துவங்கும் இந்த நாவல் அதைப் பின்னணியாகக் கொண்டு கதையைப் பிணைத்துக்கொண்டு போகும் என்று நினைத்தேன்.  ஆனால் வேறு பாதையில் இந்த நாவல் பயணிக்கத் தொடங்கியதை அறிந்தேன்.  முதியோர் இல்லத்தைத் திறன்பட நடத்தி வரும் தேவகி, ஒரு நல்ல தரமான படத்தை எடுத்துவிட வேண்டும் என்று துடிப்பாக செயல்படும் பிரபு.  அலுவலக வாழ்க்கையில் நேர்மையாக பணிபுரிய நினைக்கிற பாலன். இவர்களைப் பின்னிப் பிணைந்த இந்த நாவல், முக்கியமாகக் கொண்டு செல்ல வேண்டிய முதியோரின் அவதி என்ற காட்சி பின்புலத்தை வெட்டி விட்டதாகவே எனக்குத் தோன்றியது.

ஆரம்பிக்கும் போது நாவல் இப்படி ஆரம்பமாகிறது : üகம்ப்யூட்டரின் முன் அமர்ந்திருந்த தேவகியின் பார்வை கலங்கியிருந்தது. கடந்த அரை மணி நேரமாகத் திரையையே பார்த்துக்கொண்டிரப்பதால் ஏற்பட்டதுவோ என்று நினைத்தபோது, அது மெயிலில் படித்த செய்தியினால் விளைந்தது என்பது புரிந்தது.ý

நேரிடையாகவே ஒரு கதாபாத்திரம் தன்னையே அறிமுகப்படுத்திக்கொண்டு கதையை அமைக்கலாம்.  ஆனால் இங்கு ஆசிரியர் கூற்றாக இது அமைந்துள்ளது.  மேலும் அந்தக் கதாபாத்திரத்தின் மனநிலை ஓட்டத்தை ஆசிரியர் கூற்று உறுதி செய்ய முடியாமல் இருக்கிறது.  ஒரு பெரியவரின் மரணத்தைத்தான் அந்தச் செய்தி சொல்கிறது.  அந்தப் பெரியவர் அந்த முதியோர் இல்லத்தில் தன்னை மனப்பூர்வமாய் பிணைத்துக் கொண்டவர்.  அவருடைய மரணம் அங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சியைத் தருகிறது.  ஆனால் அவருடைய பையனோ அவர் மரணத்தை அறிந்து இறுதி சடங்கு நடத்தக்கூட அங்கு வரத் தயாராய் இல்லை. அந்த முதியோர் இல்லத்திலேயே இறுதி சடங்கை முடித்துவிட கூறுகிறான்.  அதற்கான செலவை அனுப்பி விடுகிறான்.

இந்த நாவலின் ஆரம்பத்தில் இது ஒரு உருக்கமான கட்டம்.  அல்பெர் கம்யூ என்ற எழுத்தாளர் அந்நியன் என்ற நாவல் எழுதி உள்ளார்.  விடுதியில் தங்கியிருக்கும் அம்மா இறந்து விடுகிறாள்.  இறுதி யாத்திரியில் கலந்துகொள்ள செல்லும் தமையன், அம்மாவின் முகத்தைக் கூடப் பார்க்க விரும்பவில்லை. அவனாவது பரவாயில்லை இறுதி யாத்திரையில் கலந்து கொள்கிறான்.  ஆனால் உஷாதீபனின் நாவலிலோ தனயன் வரவே இல்லை. எல்லாவற்றையும் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று பணத்தை அனுப்பி விடுகிறான். இதன் தொடர்பாக இன்னும் இரண்டு நாவல்களைப் படிக்க விரும்புகிறேன்.  ஒரு நாவல் நீல பத்மநாபனின் üஇலை உதிர் காலம்ý.  இன்னொரு நாவல் நகுலனின் üவாக்கு மூலம்ý.

முதியோர் இல்லத்தை நடத்தி வரும் தேவகி இன்னும் சில நல்ல உள்ளங்களையும் சந்திக்கிறாள்.  எதாவது உதவி செய்ய வேண்டுமென்று நினைக்கிற சிலரும் அங்கு வருகிறார்கள்.  அவள் சேவை மனப்பான்மையை அறிந்து அவளை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று எண்ணுகிற இளைஞன் பிரபு, அவளிடம் கடிதங்கள் மூலம் தன் விருப்பத்தைத் தெரியப்படுத்துகிறான்.

குறுக்கு வழியில் அதிகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று நினைக்கிற சதாசிவம், நேர் வழியில் செல்ல விரும்பும் அவர் புதல்வன் பாலா. இப்படி ஒரு முரண்பாடை நாவலில் கட்டமைக்கிறார்.  தேவகியின் அப்பா

பாலகிருஷ்ணன் நேர்மையான மனிதர்  ஜவுளி வியாபரத்தில் நேர்மையாக ஈடுபட்டு முன்னுக்கு வந்தவர். மனைவியை இழந்தவர். ஆனால் அவருடைய பையன் அவருக்கு முரணாக அப்பாவை மதிக்காமல் இருக்கிறான்.  அவருடைய நண்பரான சதாசிவம், அவருடைய பையன் பாலனை தேவகிக்கு திருமணம் செய்துகொள்ள முன் வருகிறார்.  பாலகிருஷ்ணன் கெட்டிக்காரத்தனமாய் நடத்தும் வியாபாரத்திலும் தன்னை இணைத்துக்கொள்ள நினைக்கிறார். ஆனால் பாலன் மனதோ நந்தினி என்ற பெண்ணிடம். அந்த நந்தினியை பாலா திருமணம் செய்துகொள்ளகூடாது என்று கடுமையாக பையனிடம் ஆரம்பத்தில் சொல்லிவிடுகிறார். ஒரு காலத்தில் நந்தினி அப்பாவுடன் நடந்த சாப்பாடு வியாபாரத்தில் அவள் அப்பா அவரை மோசம் செய்து விடுகிறார்.  அந்த வெறுப்பில் அவர் பெண்ணை பையன் திருமணம் செய்து கொள்ளகூடாது என்கிறார்.  பையன் ஒன்றும் சொல்லவில்லை.  தேவகிக்கும் பிரபுவை விட மனதில்லை.  இந் நாவலில் வெளிப்படையாக சொல்லப்படாத காதலை சாமார்த்தியமாக முடிக்கிறார் நாவலாசிரியர். பாலன் நந்தினி திருமணம் முடிந்த கையோடு அவர் பெண்ணின் திருமணத்தையும் முடித்துவிடுகிறார். எல்லாம் சுலபமாக முடிந்து விடுகிறது.

முதியோர் இல்லத்தில் ஆரம்பித்த இந்த நாவல் கிளைபிரிந்து பல விஷயங்களைத் தொட்டுக் காட்டியிருக்கின்றன. ஆனால் முதியோர் இல்லத்தில் அவதிப்படும் ஜன்மங்களைப் பற்றி லேசாக சொல்லிவிட்டு நகர்ந்து விடுவது சற்று ஏமாற்றமாக இருக்கிறது.

நாவலை சரளமான நடையில் விறுவிறுப்பாக எழுதிக்கொண்டு போகிறார்.

லட்சியப் பறவைகள் – நாவல் – உஷாதீபன் – பக்கங்கள் : 208 – வெளியீடு : கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8 மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி நகர், சென்னை 17 – தொலைபேசி எண் : 24364243, 24322177 – விலை : ரூ.150

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன