கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நாவல் எழுதுவது எளிதானதா?
அழகியசிங்கர்
இப்போதெல்லாம் நான் புத்தகம் படிக்க ஆரம்பித்தால் ஒரு புத்தகத்தின் கால் பகுதியைப் படித்தவுடன், அப் புத்தகத்தைத் தொடர்ந்து படிக்க எனக்கு எண்ணம் தோன்றாது. மேலும் அப் புத்தகம் என் அருகில் இல்லாமல் எங்காவது போய்விடும். எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாததால் புத்தகம் மறந்து போய்விடும். இன்னும் சில புத்தகங்களை அரைப் பகுதியாவது படித்திருப்பேன். அதுவும் முழுவதும் முடிப்பதற்குள் என்னை விட்டு எங்காவது போய்விடும். இதையும் மீறி வேறு சில புத்தகங்களை நான் முக்கால்வாசிப் படித்து நிறுத்தியிருப்பேன். முழுதாக ஒரு புத்தகத்தைப் படிப்பது என்பது என்னால் இயலாத காரியமாகவே இருக்கும்.
ஆனால் ஒரு கூட்டத்தில் பேசுவதாக இருந்தால் அல்லது ஒரு கட்டுரைத் தயாரித்து எழுத வேண்டுமென்றால் ஒரு புத்தகத்தை முழுவதுமாக நான் படித்துவிடுவேன். 2015ஆம் ஆண்டு நான் இப்படித்தான் ஒரு இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படித்து அது குறித்து எழுத வேண்டுமென்ற முனைப்பில் இருந்து செயல்பட்டேன்.
எம் ஜி சுரேஷ் அவர்களின் தந்திர வாக்கியம் என்ற நாவலைப் படிப்பதற்கு எனக்கு எந்தவித தடங்களும் இல்லை. 230 பக்கங்கள் கொண்ட நாவல் இது என்பதால் இந்தத் தடை இல்லை. கடந்த சில தினங்களாக நான் விடாமல் தந்திர வாக்கியம் என்ற நாவலை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தேன். சமீபத்தில் என் சூழ்நிலை வாசிப்பதற்கு ஏற்றதாக அமையவில்லை என்றாலும் இந்த நாவலைப் படித்து முடித்துவிடவேண்டும் என்ற முனைப்பில் படித்து முடித்தேன்.
தமிழில் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் எம் ஜி சுரேஷ். அவர் கிட்டத்தட்ட 6 நாவல்கள் எழுதி இருக்கிறார். பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். பல கட்டுரைத் தொகுப்புகளைக் கொண்டு வந்திருக்கிறார்.
பின் நவீனத்துவம் என்றால் என்ன என்ற அறிமுக நூலை எழுதி உள்ளார். திரைப்படத்துறையிலும் அவர் தன் பங்கை செலுத்தி உள்ளார்.
ஒரு கோட்பாடை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாவலை எழுதுவது என்பது சற்று சிரமமான ஒன்று. எனக்குத் தெரிந்து ஒரு பின் நவீனத்துவ கோட்பாடு பேசும் ஒரு நாவலாசிரியர் எழுதிய பல நாவல்களை அவர் அப்படியே மேலநாட்டு நாவல்களின் மாதிரிகளை எடுத்து அப்படி எழுதியிருக்கிறார். அந் நாவல்களை எல்லாம் படிக்கும்போது உள் வாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் எம் ஜி சுரேஷ் அப்படி இல்லை. அந்த மாதிரிகளை உதாரணமாக வைத்துக்கொண்டு தன் இயல்பாய் புதிய வகை நாவல்களை எழுதி உள்ளார்.
தந்திர வாக்கியம் என்ற நாவலும் துண்டாடப்பட்ட விவரணைகளைக் கொண்ட நாவல்தான்.
இந் நாவலில் இரண்டு விதமான வாழ்க்கை முறையைக் கொண்டு வருகிறார். ஒன்று தற்கால வாழ்க்கை முறை. இன்னொன்று புத்தர் வாழ்ந்த கால வாழ்க்கை முறை. ஐடி துறையில் படுகிறபாட்டை ரொம்ப சுலபமாக சுரேஷ் விவரித்துக்கொண்டு போகிறார். நிகண்டன் என்பதுதான் நிக்கியின் நிஜமான பெயர். அப்பா ஜெயராமனுக்கும், இருளாயிக்கும் பிறந்த பையன்.
நிக்கிக்கு அம்மாவின் கறுப்பும், அப்பாவின் மாநிறமும் கலந்த அரைக் கறுப்பு நிறம் என்று விவரிக்கிறார். பார்க்க தெற்கு சூடானில் இருக்கும் நூபியனின் தோற்றம் என்று விவரிக்கிறார். பின் நிக்கி பள்ளிக்கூடங்களில் படுகிற பிரச்சனைகளை விவரிக்கிறார். மேல் நாட்டு வர்க்கத்தினர் படிக்கும் விலையுயர்ந்த பள்ளிக்கூடத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியைக்கொண்ட நிக்கி படும் அவஸ்தைகளை விவரிக்கிறார்.
ஐடி கம்பெனியில் ஒவ்வொரு கம்பெனியாக மாறிக்கொண்டிருக்கிறான் நிக்கி. தனுஜா கங்குலி என்பவளைச் சந்திக்கிறாள். அவள் அவனை மாற்றுகிறாள். நவநாகரீக யுவனாக மாறுகிறான். கங்குலி என்ற பிராமண வகுப்பைச் சேரந்த வங்காளி தனுஜா. அவள் அவனைத் திருமணம் செய்துகொள்ள உடனடியாக சம்மதிக்க மாட்டேன் என்கிறாள். சினை முட்டைகளை சேமிப்பு வங்கியில் உறைநிலையில் சேமித்து வைக்கும் நவநாகரீக மங்கை. தற்போது எதிர்கொள்ளும் ஐடி பிரச்சினையை தீவிரமாக இந்த நாவல் ஆராய்கிறது. ஐடி பிரச்சினையை முன் வைத்து நகர்ந்துகொண்டிருக்கிறது. 26ஆம் அத்தியாயத்திலிருந்து சீனாவின் மூன்று பேரரசுகளின் காலம் பற்றி விவரிக்கிறது. ஹøவாகுவாங் ஜாங் என்ற புத்தத் துறவி எழுதிய கடிதங்களின் தொகுப்பை கொஞ்சம் கொஞ்சமாக இந் நாவலில் எம் ஜி சுரேஷ் விவரிக்கிறார். இந்தியாவிற்கு பயணியாகப் புறப்பட்ட ஜாங்கின் பயணத்தைக் கடிதம் மூலம் இந்த நாவல் தொடருகிறது. இந்தப் பயணத்தை மொழிபெயர்த்து தன் அப்பாவிற்கு அனுப்புகிறான் நிக்கி.
திரமிள் நாட்டின் தலைநகரமான மதுரையின் பிரதான சாலையில் ஜாங்கும் லுவோஜியாவும் நடந்து கொண்டிருப்பதெல்லாம் கடிதம் வழியாக நாவல் விவரிக்கிறது.
ஐடி கம்பெனியில் பணிபுரிவது என்பது ஆபத்தானது. குடைராட்டினத்தில் மேலும் கீழும் செல்வதுபோல், நிக்கிக்கு திடீரென்று வேலை போய்விடுகிறது. அந்தத் துக்கத்தைத் தாங்காமல் தனுஜா அவனை விட்டு அவனிடம் சொல்லாமல் போய்விடுகிறாள். ஐடி கம்பெனியில் நேரம் தெரியாமல் பணிபுரியும் ஆபத்து. அதனால் பலருக்கு மனக் குழப்பம் ஏற்படுவதும், பைத்தியம் பிடித்துவிடுவதும், தற்கொலை செய்துகொள்வதும் சகஜமாக வருகிறது.
இந்த நாவல் மாற்றி மாற்றி நிகழ்கால ஐடி துறையில் உண்டாகும் அவலநிலை, பின் புத்தர்கால அனுபவ நிலையை விவரித்துக் கொண்டே போகிறது. புத்தரின் தர்க்கம் என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் வருகிறது. பாரத்வாஜர் புத்தருடன் பேசுவதுபோல் ஒரு காட்சி வருகிறது.
புத்தர் எப்படி பாரத்வாஜருடன் வேறுபடுகிறார் என்ற கேள்வி எழும்புகிறது. அதற்கு புத்தர் இவ்வாறு சொல்கிறார் :
‘அவர் மந்திரங்களை நம்புபவர். பிறப்பு, வாழ்க்கை, இறப்பு என்ற எல்லாவற்றுக்கும் மந்திரங்களை உச்சாடனம் செய்பவர் அவர். எனக்கு மந்திரங்களில் நம்பிக்கை இல்லை . நான் தந்திரத்தை நம்புவன். தந்திரம் என்றால் உபாயம். இவர் மந்திரவாதி. நானோ தந்திரவாதி.’ இந்த நாவலின் முழு தாத்பரியம் இந்த 93வது அதி;தியாயத்தில் அடங்கி விடுவதாகத் தோன்றுகிறது. இந்த வாழ்க்கையின் சாரம்சத்தைத் தருணங்களால் ஆனது என்கிறார் இந் நாவலாசிரியர்.
இருட்டு ஒரு தருணம். வெளிச்சமும் ஒரு தருணம். இது ஒரு நிகழ்ச்சி. மாறி மாறி நடக்கிறது என்கிறார் எம்.ஜி சுரேஷ். இந் நாவலைப் படிப்பது கூட ஒரு நல்ல தருணம் என்று எனக்குத் தோன்றுகிறது.
தந்திர வாக்கியம் – எம். ஜி சுரேஷ் – நாவல் – பக்கங்கள் : 232 – விலை : ரூ.200 – முதல் பதிப்பு : 2016 – வெளியீடு ; சொல்லங்காடி, புதிய எண் : 10, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 600 011