அழகியசிங்கர்
நான் ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வரியைப் படிக்கும்போது, அந்த வரி என்னை திகைக்க வைத்தது. அந்த வரி இதுதான் : üபடித்துப் படித்துப் பைத்தியமானான் கோசிபட்டன்,ý இது ஒரு பழமொழி. உண்மையில் படித்துக்கொண்டிருந்தால் பைத்தியமாகி விடுவார்களா? எனக்குத் தெரிந்து எப்போதும் படித்துக்கொண்டிருக்கும் பலரை பார்த்திருக்கிறேன். சாப்பிடும்போது கூட எதாவது ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் பாத்ரூமில் படிப்ôர்கள். எனக்கு சாப்பிடும்போதும், பாத்ரூமிலும் இருக்கும்போதும் படிப்பதற்கு விருப்பம் இருக்காது. படிக்கும் பழக்கம் நம் மனத்தையும், அறிவையும் ஆட்கொண்டு நம்மை அடிமைகளாக்கி விடலாமா? இந்தக் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதேபோல் சுலபமாக பொழுதைப் போக்க படிக்கும் பழக்கம் ஒரு சிறந்த வழி. ஆனால் பெரும்பாலோர் படிக்காமலேயே பொழுதைக் கழிக்கிறார்கள். அவர்களை நாம் குறை சொல்ல முடியாது. நேற்று பூங்காவில் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, ஒருவரை விஜாரித்தேன். அவர் சில மாதங்களில் பதவி மூப்பு அடைய உள்ளார். ‘எப்படி பொழுதைப் போக்கப் போகிறீர்கள்? எதாவது தினமும் புத்தகம் படிப்பீர்களா?’ ‘இல்லை,’ என்றார் அவர். ‘படித்ததெல்லாம் எப்போதோ முடிந்து போய்விட்டது. இனிமேல் புத்தகத்தை எடுத்துப் படிக்க முடியாது,’ என்றார். ‘அப்படியென்றால் பொழுது எப்படிப் போகும்?’ என்று கேட்டேன். ‘பொழுது போவதற்கு நான் வழி சொல்கிறேன். ஆனால் புத்தகம் வேண்டாம்,’ என்றார் அவர்.
சரி கோசிபட்டனுக்கு என்ன ஆயிற்று? ஏன் படித்து படித்து பைத்தியம் ஆனான். புத்தகம் படித்து ஒருவர் தன் வாழ்க்கையில் எதிர்படும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என்று நினைத்தால், அதேபோல் ஒரு முட்டாள்தனத்திற்கு நாம் ஒன்றும் சொல்வதிற்கில்லை.
என்னுடைய நண்பர்கள் பலவிதமாய்ப் புத்தகங்களைப் படிப்பார்கள். ஒருவர் சிறுகதைகளை மட்டும் படித்துக்கொண்டிருப்பார். நாவல்களைப் படிக்க பொறுமை இருப்பதில்லை என்பார். அதேபோல் கவிதையைப் படிப்பது என்றால் வேம்பங்காயாய் கசக்கும் அவருக்கு. இன்னொருவர் இருக்கிறார் இவர் வெறும் நாவல்களாகப் படித்துத் தள்ளுவார். அதேபோல் வேறு ஒருவர் கவிதைகளை மட்டும் படிப்பார். இன்னும் ஒருவர் கட்டுரைகளை மட்டும் படிப்பார்.
கதை கவிதை எல்லாம் படிக்காமல் ஆன்மிகப் புத்தகங்களை மட்டும் வாசிப்பவர்கள் உண்டு. இன்னும் சிலர் மருத்துவப் புத்தகங்களை மட்டும் படிப்பார்கள். இப்படி பலர் பலவிதமான புத்தகங்களைப் படித்தக்கொண்டுதான் இருப்பார்கள். நான் ஒரு காலத்தில் ஜே கிருஷ்ணமூர்ததி புத்தகங்களை மட்டும் படித்துக்கொண்டு திரிந்தேன். அப்போது எனக்கு கவிதை, நாவல், சிறுகதை எதுவும் படிக்க பிடிக்காது. நானே ஜே கிருஷ்ணமூர்த்தியாக மாறிவிட்டேனா என்று தோன்றும். நானே கோசிபட்டனாக மாறிவிட்டேனா என்று தோன்றும். ஆனால் இதில் பைத்தியமாவதற்கு வாய்ப்பு ஏன் ஏற்படுகிறது. படிக்கும் பழக்கம் அளவு மீறினால் பைத்தியம் ஆகும் நிலை ஏற்படுமா? அதற்காகத்தான் இது சொல்லப் படுகிறதா?
ஒருவர் டிவியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். காலையிலிருந்து இரவு தூங்கும் வரை ஒருவர் டிவியைப் பார்த்துக்கொண்டிருந்தால் அவருக்கு பைத்தியம் பிடிக்க வழி இல்லையா? அதேபோல் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர், 24 மணிநேரமும் அலுவலகம் ஒன்றையே நினைத்துக்கொண்டிருந்தால் பைத்தியம் பிடிக்க வழி ஏற்படாதா? எப்போது அதுமாதிரி நிலை ஏற்படுமென்றால், ஒரு நாள் அவரைக் கூப்பிட்டு,ü நீங்கள் பணி புரிந்தது போதும்..வீட்டிற்குப் போங்கள்,ý என்று சொன்னால்போதும், அவருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பைத்தியம் பிடித்து விடும்.
தீவிரமாக நாம் எதில் ஈடுபட்டாலும் அந்தத் தீவிரத் தன்மை நம்மை ஒரு வழி செய்து விடும். சிலரிடம் கேட்டு அறிவோம். சில நூல்களைப் படித்துத் தெளிவோம்,ý என்பது புலிசெரெ சோமேசுவர கவியின் கூற்று. அதேபோல் நாம் கேட்டு தெளிவடைவோம். அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால், புத்தகங்களைப் படித்து தெளிவடைவோம்.
என் கையில் கிடைத்தப் புத்தகம் கன்னடக் கட்டுரைத் திரட்டு. அதிலிருந்து படிக்கும் பழக்கம் என்ற கட்டுரைதான் என்னை பலவாறு சிந்திக்க வைத்தது.