இன்று பாரதியார் பிறந்த தினம்

நான் கிருத்துவக் கல்லூரியில் படித்தக் காலத்தில், கல்லூரி நூல் நிலையத்திலிருந்து பாரதியாரின் கட்டரைத் தொகுப்புகளைப் படிப்பேன்.  பெரும்பாலும் மின்சார வண்டியில் வந்துகொண்டிருக்கும்போது படிப்பது வழக்கம்.  நான் கெமிஸ்டிரி படிக்கும் மாணவனாக இருந்தாலும், தமிழில் உள்ள ஆர்வத்தால் தமிழ்ப்புத்தகங்களை அதிகமாகப் படிப்பேன்.  பாரதியாரின் கவிதைகளை விட நான் விரும்பிப் படித்தது அவருடைய உரைநடை நூல்கள்தான்.

பெ தூரன் அவர்கள் தொகுத்தக் கட்டுரை நூல்களை நான் விரும்பிப் படித்திருக்கிறேன்.  இன்று அவருடைய பிறந்தநாள்.  பாரதியார் எப்போதும் எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளும்படி எழுதுபவர்.
பொதுவாக பத்திரிகையில் பணிபுரிபவர்கள்தான் தொடர்ந்து எதாவது எழுதும்படி நேர்கிறது.  பத்திரிகை தொடர்பு இல்லாதவர்களுக்கு அதுமாதிரியான நிர்ப்பந்தம் எதுவும் இல்லை.  பாரதியாருக்குப் பத்திரிகை தொடர்பு இருந்ததால் எல்லாவற்றையும் அவர் எழுதி இருக்கிறார்.  அவர் எழுதியதை இப்போது படிக்கும்போது அவர் எழுதிய காலத்திலும் சரி, இப்போதும் சரி, அது எந்த அளவிற்கு சிறப்பாக இருந்தது என்பதை அறிய முடிகிறது.
பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோதுதான் பலவற்றை எழுதி உள்ளார்.  பல மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார், கவிதைகள் எழுதியிருக்கிறார், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.  அவர் கூட்டத்தில் பேசிய பேச்சுக்கள்  சுதேசமித்திரன் பத்திரிகையில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.
எல்லாவற்றையும் தொகுத்து சீனி. விசுவநாதன் பாரதியின் படைப்புகள் என்று 11 தொகுதிகள் மேல் கொண்டு வந்துள்ளார். எல்லாவற்றையும் தொகுத்த விஸ்வநாதன், தொகுத்தக் கட்டுரைகளுக்கு அடிக்குறிப்புகளும் கொடுத்திருக்கிறார்.  பத்தாம் தொகுதியிலிருந்து ஒரு சிறிய பகுதியை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
வயி. சு ஷண்முகம் செட்டியாருக்கு எழுதிய கடிதம்.
ஸ்ரீமான் வயிசு.ஷண்முக செட்டியாருக்கு ஆசிர்வாதம்
1…..
2. பகவத் கீதையை அச்சுக்கு விரைவில் கொடுங்கள்.  தங்களுக்கு இஷ்டமானால் அதற்கு நீண்ட விளக்கம் எழுதியனுப்புகிறேன்.  நீண்ட முகவுரையும் எழுதுகிறேன்.
(கீதைக்கு) புஸ்தக விலை ரூ.1க்குக் குறைந்து வைக்க வேண்டாம்.  தடித்த காயிதம்; நேர்த்தியான அச்சு; பெரிய எழுத்து; இட விஸ்தாரம் – இவை கீதைக்கு மட்டுமேயன்றி நாம் அச்சிடப்போகும் புஸ்தகங்கள் எல்லாவற்றுக்கும் அவசியம்.
3. ஆங்கிலக் கவிகள், ஆசிரியரின் காவியங்களும், கதைகளும் இங்கிலாந்தில் எப்படி அச்சிடப் படுகின்றனவோ, அப்படியே நம் நூல்களை இங்கு அச்சிட முயல வேண்டும்.  அங்ஙனம் அச்சிட ஒரு ரூபாய் விலை போதாதென்று அச்சுக்கூடத்தார் அபிப்பிராயங் கொடுக்கும் பக்ஷத்தில் புஸ்தக விலையை உயர்த்துவதில் எனக்கு யாதோர் ஆúக்ஷபமுமில்லை.
4. பஞ்சாலி சபதத்திற்கு முகவுரை (இரண்டாம் பதிப்புக்கு) இன்னும் சில நாட்களில் அனுப்புகிறேன்.
தம்பி, இந்தப் பாஞ்சாலி சபதம் இரண்டாம் பாகம் கையெழுத்துப் பிரதி அனுப்பி யிருப்பதைச் சோமபலின்றி தயவுசெய்து ஒருமுறை முற்றிலும் படித்துப் பாருங்கள்.  பிறகு அதை மிகவும் ஆச்சரியமாகவும் அழகாகவும் அச்சிடுதல் அவசியமென்பது தங்களுக்கே விசதமாகும்.
5…..
புதுச்சேரியில் (பாடிய) பாட்டுக்கள் அனைத்தையும் இங்கு குழந்தை தங்கம்மா தன்னுடைய நோட் புக்குகளில் எழுதி வைத்திருக்கக் கண்டு, அதைப் புதையல்போல் எடுத்து வைத்திருக்கிறேன்.
தங்களுக்கு மஹா சக்தி அமரத்தன்மை தருக.
தங்களன்புள்ள
சி சுப்பிரமணிய பாரதி
 
இதற்கு பதிப்பாசிரியர் குறிப்பு என்ற பெயரில் சீனி விசுவநாதன் இப்படி குறிப்பிடுகிறார் :
இக் கடிதம், மேலோட்டமாகப் பார்க்கும்போது, நம் நூல்கள் பிரசுரமாக வேண்டும் என்பதில் பாரதி கொண்டிருந்த அக்கறையைப் புலப்படுத்துவதாக உள்ளது என்பதாகத் தோன்றும்.
ஆனால், வெளிப்படும் தம்முடைய நூல்கள் எந்தமாதிரியான வகையில் அமைந்திருக்க வேண்டும் என்பதிலும் பாரதி மிகுந்த கவனம் செலுத்திய பதிப்புச் சிந்தனையைப் புலப்படுத்திக் காட்டுவதாகவும் இக் கடிதம் அமைந்துள்ளது.
அச்சும் அமைப்பும் ஆங்கில நூல்களுக்கு இணை சொல்லும்படியாகவும், விலையும் தரத்திற்கு ஏற்றப்படியாயும் இருக்க வேண்டும் என்பதே பாரதியின் ஆசையாகவும் இருந்துள்ளது.
இன்றைய கவிதைக்கு ஆரம்பமாக பாரதியின் வசன கவிதைகள் முக்கியப் பங்கு வகிக்கிறது.  பாரதியின் புதுக்கவிதைகள் என்ற பெயரில் நான் தற்போது ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளேன்.  இது ஏற்கனவே 1982 ஆம் அண்டு ழ வெளியிடாக வந்துள்ளது. ஞானக்கூத்தனின் முன்னுரையுடன் இப் புத்தகத்தைத் திரும்பவும் கொண்டு வந்துள்ளேன்.  ஞானக்கூத்தன் இப் புத்தகத்தைக் கொண்டுவரும்படி என்னிடம் கேட்டிருந்தார்.  அப் புத்தகத்திலிருந்து ஒரு சிறிய பகுதி.
சிற்றெறும்பைப் பார். 
எத்தனை சிறியது!
அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு எல்லா அவய
வங்களும் கணக்காக வைத்திருக்கிறது
யார் வைத்தனர்? மஹா சக்தி.
அந்த உறுப்புகளெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன.
எறும்பு உண்ணுகின்றது, உறங்குகின்றது. மணம் செய்து
கொள்கின்றது. குழந்தை பெறுகிறது, ஓடுகிறது,
தேடுகிறது, போர் செய்கிறது, நாடு காக்கிறது.
இதற்கெல்லாம் காற்றுத்தான் ஆதாரம்.
மஹா சக்தி காற்றைக் கொண்டு தான் உயிர் விளையாட்டு விளையாடுகின்றாள்.
காற்றைப் பாடுகிறோம்
அஃது அறிவிலே துணிவாக நிற்பது;
உள்ளத்திலே விருப்பு வெறுப்புக்களாவது.
உயிரிலே உயிர் தானாக நிற்பது.
வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம்.
நாம் அழிவதில்லை.
காற்றுத் தேவன் வாழ்க.
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன