ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்

அழகியசிங்கர்

 

1. நீங்கள் நல்லவரா கெட்டவரா?
கெட்டவன்
2. நீங்கள் கெட்டவரா நல்லவரா?
நல்லவன்
3. யாரைப் பார்த்து உங்களுக்குப் பயம்?
என்னைப் பார்த்து
4. நீங்கள் எழுதுவதை திரும்பவும் படிப்பதுண்டா?
படிப்பதில்லை.  படித்தால் ஏன் எழுதினோம் என்று தோன்றலாம்.
5. எது எளிது? கவிதை எழுதுவது எளிதா? கட்டுரை எழுதுவது எளிதா? கதை எழுதுவது எளிதா? நாவல் எழுதுவது எளிதா?
எதுவும் எளிதல்ல.  படிப்பதுதான் எளிது.
6. சமீபத்தில் நீங்கள் படிக்கும் புத்தகம் எது?
ரமண மகரிஷியின் சரிதமும் உபதேகமும்.  3வது பாகம் படித்துக்கொண்டிருக்கிறேன்.
6. யார் எழுத்து உங்களுக்குப் பிடித்திருக்கிறது?
அது என்னமோ தெரியவில்லை.  எல்லோருடைய எழுத்தும் பிடித்துதான் இருக்கிறது.
7. சமீபத்தில் முகநூலில் கண்டுபிடித்த உண்மை என்ன?
பிரம்மராஜன், ஆத்மாநாம் பற்றியெல்லாம் எதுவும் எழுதக் கூடாதென்று.
8.  நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று நினைப்பதுண்டா?
ஆமாம்.  படிக்கட்டுகளில் இறங்கும்போதும் ஏறும்போதும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென்று.
9. ஏன்?
சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு பெண் மாடிப்படிக்கட்டுகளிலிருந்து வேகமாக ஓடி வந்து தலைக் குப்புற விழுந்து இறந்து விட்டாள்.
10. நீங்கள் யாரைப் பார்க்க ஆசை படுகிறீர்கள்?
அமெரிக்காவில் இருக்கும் என் பேத்தியை.
11. இலக்கியக் கூýட்டங்கள் கசக்கின்றனவா?
கசக்கவில்லை.  அவற்றை இன்னும் எப்படி செம்மைப் படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
12. காலையில் எழுந்தவுடன் என்ன செய்கிறீர்கள்?
வண்டியை எடுத்துக்கொண்டு பார்க் செல்கிறேன்.  நடக்கிறேன்.  கூடவே சந்தியா நடராஜன் வருவார்.  இருவரும் ஒருவரை ஒருவர் கலாட்டா செய்து கொண்டிருப்போம். பின் சரவணபவன் ஓட்டலுக்குச் சென்று ஒரு சாம்பர் வடை ஒரு காப்பி வாங்கி பாதி பாதி சாப்பிடுவோம்.
13. 500, 1000 நோட்டுகள் உங்களிடம் இல்லையா?
கொஞ்சமாக இருந்தது. வங்கியில் கட்டிவிட்டேன்.  போன மாதம் எனக்கு செலவு கூட அதிகம் ஆகவில்லை.
14. அப்பா எப்படி இருக்கிறார்?
அப்படியே இருக்கிறார்.  கடந்த ஒரு வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கிறார்.  பாலகுமாரன் தினமலர் தீபாவளி மலரில் அவர் அம்மாவிற்குக் கடிதம் எழுதியிருந்தார்.  நான் அப்பாவிற்கு அதுமாதிரி கடிதம் எழுத யோசனை செய்கிறேன்.
15 இந்த முறை புத்தகக் கண்காட்சிக்கு யார் உதவி செய்வார்கள்?
என்னைச் சுற்றி விரல்விட்டு எண்ணக் கூடிய நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் உதவி செய்வார்கள்.
16. விருட்சம் வெளியீடாகக் கொண்டு வரும் புத்தகங்களுக்கு பணத்திற்கு எங்கே போவீர்கள்?
என் பென்சன் பணத்திலிருந்து புத்தகம் கொண்டு வருகிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன