ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு அதிகம் பேர் கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்…

 
 
பொதுவாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிகப் பேர்கள் வர மாட்டார்கள்.  அதுவும் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தால் நிச்சயம் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.  எந்த இடத்திலும் நெரிசல்.  போக்குவரத்தைத் தாண்டி வரவேண்டும்.  அதையும் மீறி வருபவர்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டுமென்றால் உங்கள் கூட்டம் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.  ஆனால் பொதுவாக கோயம்புத்தூர் போன்ற இடத்தில் எளிதில் ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு 50 பேர்கள் கூடி விடுவார்கள் என்று என் நண்பர் ஒருவர் கூறுவார். அது உண்மையா என்பது தெரியாது.
ஆனால் சென்னையில் 50 பேர்களைக் கண்டுபிடிப்பது ரொம்ப சிரமம்.  அப்படியே 50 பேர்கள் வந்தால் அவர்கள் கூட்டம் முடியும்வரை தங்க வைப்பது இன்னும் சிரமம்.  நான் கிட்டத்தட்ட 200 கூட்டங்கள் நடத்தி அனுபவப்பட்டவன்.  இலக்கியக் கூட்டங்கள் நடத்துபவர்களுக்கு நான் சில அறிவுரைகளைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.
1. ஒரு கூட்டத்தை நடத்த உங்கள் இலக்கு 50 பேர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  50 பேர்கள் வருவதற்கு நீங்கள் பேசுபவர்களை 45 பேர்களாகவும், பார்வையாளர்களை 5 பேர்களாகவும் மாற்ற வேண்டும்.  வேற வழி இல்லாமல் 45 பேர்கள் பேச வந்து விடுவார்கள்.  அவர்கள் ஒவ்வொரும் பேசி முடிக்கும் வரை எல்லோரும் இருப்பார்கள்.  உங்களுக்கு வெற்றி.
2. நல்ல உணவகத்தில் இருந்து டிபன் அல்லது சாப்பாடு  தருவிப்பதாக இருந்தால், அதற்காகவாவது போனல்போகிறதென்று கூட்டத்திற்கு வந்து விடுவார்கள்.  அப்படி 50 பேர்கள் வருகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் டிபன் அல்லது சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் போய்விடுவார்கள். ஜாக்கிரதை.  நீங்கள் அந்த டிபனை கூட்டம் முடிந்தபிறகு தருவதற்கு வைத்துக்கொள்ள வேண்டும்.
3.  ஆனால் பெரும்பாலோர் கூட்டத்திற்கு வருபவர்கள் கூட்டத்தில் பாதியிலேயே எழுந்து போய்விடுவார்கள்.  அவர்களை எழுந்து போகாமல் இருப்பதற்கு ஒரு வழி இருக்கிறது.  கூட்டம் நடக்கும் ஹால் கதவை சாரத்தி தாப்பாள் போட்டு விடுவது.  அப்படிச் செய்தால் கூட்டம் முடியும்வரை எல்லோரும் தப்பிக்க முடியாது.
4. பொதுவாக நீங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்காக கூட்டம் நடத்துவதாக வைத்துக்கொள்ளுங்கள்.  ஒரே சமயத்தில் 10 பேர்களுக்கு மேல் படைப்பாளிகளின் புத்தகங்களைப் பற்றி பேசுவதாக வைத்துக் கொள்ளுங்கள்.  அந்தப் புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களைக் கூப்பிட்டு, ஒவ்வொரும் 5 பேர்களாவது கூப்பிட வேண்டும் என்று கட்டாயம் சொல்லி விடுங்கள்.  கூட்டம் ஹால் முழுவதும் நிரம்பி வழியும்.
5. கூட்டம் நடத்துபவர்கள் ஒருவரே இருந்தால் ஆபத்து.  ஒரு ஐந்தாறு பேர்கள் இருந்தால் நல்லது.  இந்த ஐந்தாறு பேர்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் இருப்பார்கள்.  அவர்களை கட்டாயம் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுங்கள். அவர்கள் உங்கள் நட்பு வட்டத்தில் இருக்க வேண்டுமென்றால் கட்டாயம் வந்து விடுவார்கள். ஆனால் வேற வழி இல்லாமல் அவர்கள் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதையும் பார்க்கலாம்.
6. கூட்டத்தில் அமைதியாய் பேசுபவர்களைக் கவனிக்க, பேசுபவர்களும் கொஞ்சம் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.  பேசுபவர்கள் ஒரு கட்டுரை மாதிரி எழுதி வாசிக்கக் கூடாது.  அப்படியே வாசிப்பதாக இருந்தால், பார்வையாளர்களைப் பார்த்து பார்த்து மெதுவாக வாசிக்க வேண்டும்.  குறிப்பு எடுத்துக்கொண்டு பேசுவது அவசியம்.  பார்வையாளர்கள் நம்மை விட் அறிவாளிகள் என்று பேசுபவர்கள் நினைத்துக்கொள்ள வேண்டும்.  நாம் பேசுகிறோம் என்று மமதாய் இருக்கக் கூடாது.  பேசுவதில் கொஞ்சமாவது நகைச்சுவை உணர்வு வேண்டும்.  இலக்கியக் கூட்டம் என்பதால் தீவிரமாய் முகத்தை வைத்துக்கொள்ளக் கூடாது.
7.  கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்கு எல்லோரும் பேசுகிற எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி பேச வேண்டும்.
இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.  உங்களுக்கு எதாவது ஐடியா இருந்தால் இத்துடன் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன