எங்கள் தெரு ஒரு சாதாரண தெரு. முன்பு ரொம்பவும் மோசமாக இருந்தது. இரண்டு பக்கமும் சாக்கடைகள் ஓடிக்கொண்டிருந்தன. சாரி..தேங்கிக்கொண்டிருந்தன. ஆனால் இப்போது இல்லை.
தெருவில் ஏகப்பட்ட குடியிருப்புகள். நிறையா சின்ன சின்ன பசங்கள். வாலிபர்களும் உண்டு. தீபாவளி அன்று எங்கள் தெருவிற்கு தயவுசெய்து வந்து விடாதீர்கள். நாங்கள் வேறு வழி இல்லாமல் இருக்கிறோம். காலையில் ஆரம்பிக்கும் பட்டாசு சத்தம் காதைப் பிய்த்துவிடும். எல்லோரும் சாதாரண வெடிகளை வெடிப்பதில்லை. அணுகுண்டைதான் ஒவ்வொருவரும் வெடிக்கிறார்கள். அல்லது சரம் வெடிகளை சரம் சரமாக வெடிக்கிறார்கள். எங்கள் தெருவில் என்ன விசேஷம் என்றால் தீபாவளி இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னே ஆரம்பித்துவிடும். பின் தீபாவளி முடிந்தபின்ன்னும் இன்னும் சில நாட்கள் ஓடும்.
சுற்றிச் சுற்றி இந்த பொடியன்கள் பாடாய் படுத்துவார்கள். நான் தீபாவளி அன்று காலையில் எழுந்து விட்டேன். என் வீட்டில் போன ஆண்டு நான் வாங்கிய கம்பி மத்தாப்பைத் தவிர வேற எதுவும் இல்லை. போன ஆண்டே நான் வாஙகியிருந்த கம்பி மத்தப்பை கொளுத்தவில்லை. நேற்றோ தொடக் கூட இல்லை. அதில் ஒரு பாக்கெட்டை தானம் செய்து விட்டேன்.
குளித்துவிட்டு சீக்கிரமாக ஒரு புத்தாடையைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தேன். என் மனைவி டிவி முன் அமர்ந்து விட்டாள். ம்ம்ம் எப்படிப் பொழுதைப் போக்குவது. யார் வீட்டிற்கும் போகப்பிடிக்கவில்லை. எல்லோரும் போனில் விஜாரித்துக் கொண்டிருந்தோம். என் மனவி டிவியில் ஆழ்ந்து விட்டாள். பட்டிமன்றத்தை ரசித்துப் பார்க்கிறாள். நானும் பட்டிமன்றத்தைப் பார்த்தேன். எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதில் தோன்றும் சில முகங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதை ரசிக்க என்று வருகிற கூட்டத்தைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. நானும் ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறேன். தலைப்பு : பட்டி மன்றம் அவசியமா அவசியமில்லையா? அவசியமில்லை என்ற தலைப்பில் நான் பேச விரும்புகிறேன்.
ம்ம்ம்.. என்ன செய்யலாம். நான் தீபாவளி நாட்களை நினைத்து என் மனதில் ஓட்டிக்கொண்டிருந்தேன். கல்லுரி படிக்கும் காலங்களில் தீபாவளி அன்று முதல் காட்சி சினிமா பார்க்காமல் இருக்க மாட்டேன். பெரும்பாலும் சிவாஜி படம்தான் பார்ப்பேன். சொர்க்கம் என்ற படம். தீபாவளி அன்று வந்த அந்தச் சினிமாவை க்ரோம்பேட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் போய்ப் பார்த்தேன். அதே போல் இரு மலர்கள் என்ற படத்தை பிராட்வேயில் க்யூவில் நின்று மாலை காட்சியைப் பார்த்தேன்.
சின்ன வயதில் என்னடா இப்படி முட்டாள்தனமாய் இருந்துவிட்டோமென்று நினைத்துப் பார்க்கிறேன்.
ஆனால் இப்போது தமிழ் சினிமாவைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை. எந்தப் படமும் பார்க்கும்படி இல்லை. ம்ம்..எப்படிப் பொழுதைக் கழிப்பது..
வெளியில் வெடி சப்தம் தாங்க முடியவில்லை. பழைய நானோ கார் இருந்தால், வெடிசத்த அலறலில், கார் கத்தியிருக்கும். இது புது நானோ கத்தவில்லை. ஆனால் மாடியில் உள்ள வராந்தாவில் வெடி சப்த அதிர்வில் மேலே உள்ள விளக்கை மூடியிருக்கும் மூடி கழன்று விழுந்து விட்டது.
காலையில் தமிழ் ஹிந்து வந்திருந்தது. அதைப் படித்தவுடன், எழுத்தாளர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ் ஹிந்துவே வாழ்க என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. முகநூலில் கொஞ்சம் மேய்ந்தேன். ம்ம்ம்….என்ன செய்யலாம்.. அப்போதுதான் தோன்றியது புத்தகத்தைப் படிக்கலாமென்று. என்னிடம் ஏராளமாய் புத்தகங்கள் இருக்கின்றன. எல்லாப் புத்தகங்களையும் நான் மதிக்கிறேன். எந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்தாலும் அதன் மூலம் நான் ஏதோ கற்றுக் கொள்கிறேன் என்று நினைக்கிறேன். அல்லது என் தோழன் மாதிரி புத்தகம் என்னுடன் இருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்.
யாருடனும் நாம் பேச வேண்டாம். புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருக்கலாம். அப்போதுதான் என் பக்கத்தில் உள்ள ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிக்கொண்டிருக்கிறேன். புத்தகத்தின் பெயர் : நூலை ஆராதித்தல் – பத்மநாப ஐயர் – 75. அந்தப் புத்தகத்தைப் பார்த்து பிரமித்து விட்டேன். பத்மநாப ஐயர் நண்பர்கள் பலரும் அவரைப் பற்றி கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 452 பக்கங்கள் கொண்ட இந்த நீண்ட புத்தகம் என் கண் முன்னால்.
179ஆம் பக்கத்தில் யமுனா ராஜேந்திரன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். புத்தகங்களின் புழுதி வாசம் என்ற தலைப்பில். அதில் இப்படி எழுதுகிறார் .
‘புத்தகங்களை விலக்கிவிட்டுச் சென்று ஐயரைப் பார்ப்பது என்பது கடினம். அவரது அறையில் புத்தகங்களினிடையில் அவரது சயனத்தை நாம் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். படுக்கையறைக் கட்டில், சாப்பாட்டு மேசை, விரிந்த தரை, கூரையை முட்டும் அலமாரிகள், சமயலறைக்குப் போகும் இருபக்கமுமான வெளி என அறையின் ஓரத்தில், புத்தகங்கள் விரிந்திருக்கும் கட்டிலில் அமர்ந்துகொண்டு நம்முடன் பேசுவார். புத்தகங்களின் புழுதிதான் உலகிலேயே ஐயருக்குப் பிடித்தமான வாசமாக இருக்க வேண்டும்.’
இந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்கும்போது எனக்கு தீபாவளி சத்தம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. பத்மநாப ஐயரை நான் பார்த்ததில்லை. இப் புத்தகத்தைப் படிக்கும்போது தெரிந்த நண்பரைப் போல் எனக்கு அறிமுகம் ஆகிறார் பத்மநாப ஐயர்.
இன்னொரு புத்தகம் ‘இது போதும்.’ பாலகுமாரன் என்ற எழுத்தாளர் எழுதியது. அவருடைய ஆன்மிக அனுபவத்தை எழுதி உள்ளார்.
‘இந்த உணவு எதற்கு உண்கிறோம் என்று யோசிக்கத் துவங்கிவிட்டால் உண்பதின் மீது மிகத் தெளிவான கவனம் வந்து விடும். ஆஹா, உணவு எவ்வளவு நன்றாக இரக்கிறது என்று நொட்டை விட்டு சாப்பிட்டோம் என்றால் உணவினுடைய பலன் என்ன என்பது மறந்து போய் உண்பதே முக்கியமாகி விடும். ருசியே பிரதானமாகி விடும். ருசி அறுத்தல் என்பது ஆன்மீகத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.’
தெருவில் பட்டாசு சத்தம் காதைப் பிளக்கிறது. என் கவனம் புத்தகங்கள் பக்கம் போய்க்கொண்டிருக்கிறது.