அழகியசிங்கர்
தெரிதல் புரிதல்
பிரம்மராஜன்
நான் எழுதிக்கொண்டிருப்பதை
எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதிக்கொண்டிருக்கிறேன்
என்பதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
எழுதிக்கொண்டிருப்பதாக எழுதுவதை
எழுதுகிறேன்.
எழுதுவதை எழுதுகிறேன் என்று
எழுதிக்கொண்டிருப்பதை எழுதுகிறேன்.
எழுதுவதால் எழுதுகிறேன்.
தெரிகிறேன் என்பதால் பார்க்கிறாய்
பார்ப்பவன் பார்க்கப்படுகிறான்
தெரிகிறதா
கேட்கப்படுபவன் கேள்வியாக
தெரிபவன் தெரிதலாக
புரிபவன் புரிதலாக
பூப்பவன் புதிராக
அடுக்கடுக்காய் அதிர்ச்சியாக
சிந்திப்பவன் சிக்கலாக
சிற்பி உளியாக
ஓவியன் காணுதலாக
சிக்கல் சிரமமாக
சிரமம் சிந்தனையாக
சுடர் சாம்பலாக
சாம்பல் உன் எலும்பாக
பாஸ்பரஸ் பகற்கனவாக
பகற்கனவு பதியன் பூவாக
பூத்தது புதிராக புரியாதாய்
புதிய புத்தம் கவிதையாய்
அடுக்கடுக்காய் அணூ அணுவாய்
அலையில் அலையில்
தழுவித் தழுவி
கழுவிக் கரைந்த உடலாக
கரைமீது கால்.
நன்றி : ஞாபகச்சிற்பம் – கவிதைகள் – பிரம்மராஜன் – பக் : 64 – முதல் பதிப்பு : ஜøன் 1988 – விலை ரூ.12 – தன்யா – பிரம்மா பதிப்பகம், பர்ன் வூயு, குன்னூர் தெரு, ஊட்டி 643 001