ஒரு ஞாபகம்

அழகியசிங்கர்
ஒரு 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.  தமிழவன் – ஜி கே எழுதிய மர்மநாவல் என்ற ஒரு நாவல் எழுதி உள்ளார்.  அந்த நாவலின் விமர்சனக் கூட்டம் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி 2000 ஆம் ஆண்டில் நடந்தது.  நான்தான் ஏற்பாடு செய்தேன்.  அக் கூட்டம் பாரதியார் இல்லத்தில் திருவல்லிக்கேணியில் நடந்தது.  அன்று ஞாயிற்றுக்கிழமை.  காலை 11 மணி கூட்டம் ஆரம்பம் ஆயிற்று.  பொதுவாக நான் கூட்டத்தில் பேசுவதை காசெட் ரிக்கார்டரை வைத்துப் பதிவு செய்யும் வழக்கத்தில் உள்ளவன்.  அந்தக் கூட்டத்தையும் பதிவு செய்தேன்.  அக் கூட்டம் நேரடியாக மைக் மூலம் காசெட்டில் பதிவு செய்வதுபோல் செய்துள்ளேன்.  அதனால் வெளி சப்தம் காசெட்டில் ஏறவில்லை.
ரொம்ப தெளிவாக எல்லோரும் பேசியது அதில் பதிவாகி உள்ளது.  கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் ஞானக்கூத்தன்.  நான் திரும்பவும் அந்தக் காசெட்டை இன்று கேட்டபோது.  ஆச்சரியப்பட்டேன்.  என்ன ஆச்சரியம் என்றால் தலைமை தாங்கிய ஞானக்கூத்தன் பிரமாதமான முறையில் அக்கூட்டத்தை எடுத்து நடத்துகிறார்.
ஒவ்வொருவர் பேசி முடித்தவுடன் ஞானக்கூத்தனும் பேசுகிறார்.  அவருக்குத் தெரிந்த பல கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.  அக் கூட்டத்தில் பலர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.  அவர்களுடைய லிஸ்டை இங்கு தர விரும்புகிறேன்.
1. அ மங்கை 2. சா தேவதாஸ் 3. எஸ் சண்முகம் 4. அழகியசிங்கர் 5. பா வெங்கடேசன் கட்டுரையை செந்தூரம் ஜெகதீஷ் படிக்கிறார் 6. முரளி அரூபன் 7. பஞ்சு 8. பவா செல்லத்துரை.  இறுதியில் தமிழவன், நன்றி உரையை அந்தப்புத்தகத்தை வெளியிட்ட அலைகள் பதிப்பக அதிபர் சிவனும் உரையாற்றுகிறார். 
ஒவ்வொருவர் பேச்சும் கேட்க  கேட்க சுவாரசியமாக இருக்கிறது. உண்மையில் ஞானக்கூத்தனின் தலைமை உரையைக் கேட்டபோது, ஞானக்கூத்தனே நேரில் வந்து பேசுவதுபோல் தோன்றியது.  அவ்வளவு தெளிவாக ரிக்கார்ட் ஆகியிருக்கிறது.
அந் நாவலைப் பற்றி அ மங்கை அவர்களும், பவா செல்லத்துரையும் ஒன்றை குறிப்பிடுகிறார்கள்.  அந் நாவலில் பெண் பாத்திரமே வரவில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.  இது ஏன் என்றும் கேள்வியை எழுப்புகிறார்கள்.  தலைமை பொறுப்பைக் கொண்ட ஞானக்கூத்தனும் தமிழவன்தான் ஏற்புரையில் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்கிறார். 
தமிழவன் பேசும்போது, ‘ஏன் பெண் பாத்திரம் வரவில்லை என்பது எனக்கே தெரியவில்லை’ என்கிறார்.
நான் இந்த காசெட்டில் பதிவானதை சோனி ரிக்கார்டில் பதிவிரக்கம் செய்து அதை அப்படியே சிடியில் பிரதி எடுத்துத் தரலாமென்று நினைக்கிறேன்.  ஆனால் யார் விருப்பப்பட்டு என்னிடம் கேட்பார்கள் என்பது பெரிய கேள்விதான்.  

“ஒரு ஞாபகம்” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன