ஞாபகச் சிற்பம் என்கிற பிரம்மாராஜனின் கவிதைகள்…..

அழகியசிங்கர்



பிரம்மராஜனின் ஞாபகச் சிற்பம் என்ற கவிதைத் தொகுதியை தற்செயலாக மிகவும் தற்செயலாகப் பார்த்தேன்.  1988 ஆம் ஆண்டு வந்த இந்தப் புத்தகத்தின் விலை ரூ 12 தான்.  தன்யா பிரம்மா பதிப்பகம் மூலம் வந்திருக்கிறது.  இதில் முக்கியம் நாகார்ஜøனனின் முன்னுரை.  அந்த முன்னுரையைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அவருடைய அனுமதியைப் பெற வேண்டுமென்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  
ஒருவர் பிரம்மராஜன் புத்தகத்திற்கு நாகார்ஜøனன் முன்னுரையைப் படிப்பதற்கு அலாதியான திறமை பெற்றவராக இருக்க வேண்டும்.
ஒரு காலத்தில் வேகம் என்றால் அதை பிரம்மராஜன் என்றுதான் குறிப்பிடுவார்கள்.  கவிதைகளாக எழுதிக் குவிப்பவர் பிரம்மராஜன்.  அழகான அவர் கையெழுத்தில் அவர் அனுப்பிய பல கவிதைகளைப் படித்திருக்கிறேன்.
ஆனால் சமீபத்தில் அவர் கவிதைகள் எழுதுகிறாரா என்பது தெரியவில்லை.  தன்னை கவிதை மூலம் வெளிப்படுத்திக் கொண்டவர், இப்போது மௌனமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. 
அவர் கவிதை எழுதுவதோடல்லாம் இரண்டு முக்கியமான புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளார்.  ஒன்று ஆத்மாநாம் கவிதைத் தொகுதி.  இரண்டாவது சமகால உலகக் கவிதை.  உயிர்மை வெளியீடாக இப் புத்தகம் டிசம்பர் 2007ல் வெளிவந்த தொகுப்பு.
அவருடைய மீட்சி என்ற கவிதைக்கான சிற்றேடு.  அந்த மாதிரி தரமான உயர்வான அச்சில் ஒரு சிறுபத்திரிகை கொண்டு வருவது சிரமம்.  ஆனால் அவர் துணிந்து கொண்டு வந்தார்.  
பொதுவாக பிரம்மராஜன் கவிதைகளை வாசகர்கள் அவ்வளவு எளிதில் அனுக முடியாது.  எனக்கு பிரம்மராஜனின் கவிதைகளைப் படிக்கும் போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாய்ப் புரியும்.  சில புரியாமலே போய்விடும். சிலவற்றைப் படிக்கும்போது வேறு அர்த்ததத்தில் தாவி விடும்.
தற்செயலாக என் கண்ணில் பட்ட ஞாபகச் சிற்பம் என்ற புத்தகத்தில் ஒரு கவிதை.  கவிதையின் தலைப்பு அய்யனார்.
மொத்தமே 3 வரிகள்தான் கவிதையே…
அய்யனார்
அப்பனுக்கு கல்குதிரைகள்
மகனுக்கு மண்குதிரைகள்
எனக்கு மனிதக் குதிரைகள்
மாலை நேரத்தில் இக் கவிதையைப் படித்துவிட்டு நான் யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.  இங்கு எனக்கு என்பது என்ன?
அய்யனாரே அவர் முன் உள்ள மனிதர்களைப் பார்த்துச் சொன்னதா?
இந்தக் கவிதையில் கூறுவது யார்?  அய்யனாரா?  அவர்தான் மனிதர்களைப் பார்த்து அப்படி சொல்ல முடியும் என்று தோன்றுகிறது.
கல்குதிரை, மண் குதிரை என்று சொல்லும்போது. மனிதர்களும் ஒரு விளையாட்டாக அய்யனார் போன்ற சாமிக்கு ஆகிவிடுகிறது.  
இந்தக் கவிதைத் தொகுதியில் வெளிவந்திருக்கும் மற்ற கவிதைகளையும் படிக்க படிக்க சுவாரசியமாக இருக்கிறது.  ஆனால் திட மனதுடன் நீங்கள் நாகார்ஜøனன் பிரம்மராஜன் கவிதைகளைக் குறித்து எழுதியதைப் படிக்க வேண்டும்.     

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன