அழகியசிங்கர்
ஒருநாள் காலையில் வாயில் ஒரு எலியைக் கவ்விக்கொண்டு ஒரு பூனை எங்கள் அடுக்கக வளாகத்தில் நுழைந்து விட்டது. பூனையைத் துரத்தும்போது வாயில் வைத்திருந்த எலியைப் போட்டுவிட்டு ஓடிவிட்டால் என்ன செய்வது? ஜாக்கிரதையாக பூனையை வெளியே எலியுடன் துரத்தவேண்டும். அப்படித்தான் மெதுவாக துரத்தி விட்டேன்.
நாயைவிட பூனை மனிதர்களிடம் எளிதில் பழகாது. மேலும் ஒருவர் வீட்டில் நாய் வளர்க்கிறார்கள் என்றால் அவர்கள் வீட்டிற்குப் போவதற்கே விரும்ப மாட்டேன். தெருவில் நாய்கள் நடமாடினால், நாய்களை உற்றுப் பார்க்க மாட்டேன். உற்றுப் பார்த்தால் போதும் நம்மைத் தொடர்ந்து வர ஆரம்பிததுவிடும். பிஸ்கட் கட்டாயம் வாங்கிப் போட மாட்டேன். அதே சமயம் பூனையைப் பார்த்தால் அதை அடித்துத் துரத்துவதுதான் என் முதல் வேலை. அதன் முன் பெரிய சத்தத்துடன் குதிப்பேன். என் சத்தத்தைக் கண்டு அது ஒன்றும் கவலைப் படாது. அப்போதுதான் கையில் எதாவது கிடைக்கிறதா என்று பார்ப்பேன். இந்தச் சமயத்தில்தான் அது நகர ஆரம்பிக்கும்.
காலையில் தெருவில் மீனு மீனு என்று கூவி விற்கும் கிழவி முன் தெருவில் உள்ள அத்தனைப் பூனைகளும் சூழ்ந்து கொள்ளும். காக்கைகளும் ஆவலுடன் உலாவும்.
தற்செயலாக வைதீஸ்வரனின் நிழல் வேட்டை என்ற கவிதையைப் படித்தேன். பூனையைப் பற்றியும் எலியைப் பற்றியும் எழுதியிருந்தது. உடனே இங்கே வாசிக்க அளிக்கிறேன்.
நிழல் வேட்டை
இலையிடையில்
எலி நினைவால்
பூனை நீண்டு
புலியாகும்.
செவிகள் கொம்பாகி
வாலில் மின் பாயும்
நகங்கள் கொடும்பசி போல்
மண்ணைத் தோலுரிக்கும்.
காற்றின் கண்ணிமைப்பில்
இலைகள் நிலைமாறி
எலிகள் நிழலாகப்
புலி மீண்டும் பூனைக்குள் ஒடுங்கி
முதுகைத் தளர்த்தும்.
கிட்டாத கசப்பை
மியாவால்
ஒட்டி, ஓட்டில்
வளைய வரும்
வீட்டுப் பூனை.
அதற்கு மட்டும் ஒரு ஆகாயம் என்ற வைதீஸ்வரன் கவிதைத் தொகுப்பில் வெளிவந்த கவிதை இது. இந்தப் புத்தகம் ஒரு விருட்சம் வெளியீடு.