பேட்டி

(நவீன விருட்சம் 66வது இதழில் (ஜøன் 2005ல் வெளிவந்தது) அசோகமித்திரன் எழுதிய கட்டுரையைத் தந்திருக்கிறேன் வாசிக்க.  100வது இதழ் கொண்டு வரும்போது இன்னொரு திட்டமும் உள்ளது.  முதல் இதழிலிலிருந்து நூறாவது இதழ் வரை பிரசுரமானவைகளிலிருந்து ஒவ்வொரு இதழிலிருந்தும் முக்கியமான ஒரு படைப்பு விதம் எடுத்து புத்தகமாகக் கொண்டு வர எண்ணம்.) 
அசோகமித்திரன்
                                                                                         பேட்டி


ஒரு புது மாதப் பத்திரிகைக்காக நண்பர் ஒருவர் என்னைப் பேட்டி கண்டார்.  கேள்விகள் அவருடையது.  பதில்களை எழுதிக் கொடுத்து விட்டேன்.  அச்சில் எப்படி வரப் போகிறது என்று காத்திருந்து பார்க்க வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளாகத்தான் நான் பேட்டி காணக் கூடியவனாக நினைக்கப் பட்டிருக்கிறேன்.  பேட்டி காண வருபவர்கள் ஒருவர் தவறாமல் அவர் காணும் பேட்டி மிகவும் வித்தியாசமானது என்றுதான் சொல்வார்.  ஆனால் ஒரே மாதிரிக் கேள்விகள்.  அல்லது ஒரே மாதிரிப் பதில்களைப் பெறக்கூடும் கேள்விகள்.
உண்மையில் இந்தப் பேட்டிகளில் பேட்டி காணப்படுபவரை விட பேட்டி காண்பவரின் நோக்கம்தான் நன்கு வெளிப்படுகிறது.  ஆரம்பத்தில் அச்சில் என்னுடைய பேட்டிகளைக் கண்டு நான் திகைத்துப் போயிருக்கிறேன்.  இப்போது பதில்களை எழுதிக் கொடுத்து விடுவது அதனால்தான்.  இல்லாது போனால் பேட்டி காண்பவர் அவராகவே பதில்களை எழுதிக்கொண்டு விடுவார்.  இதைத் திட்டமிட்டபடி செய்வது உண்டு.  அப்படியொரு திட்டம் இல்லாமல் பேட்டிகள் நிகழ்ந்திருக்கின்றன.  இதெல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியரின் தேர்வு என்று ஒன்றுண்டு.  அவர் வெட்டி விடும்போது எப்படி நான் முக்கியம் என்று நினைத்ததை உணர்ந்து கொண்டு அதை வெட்டிவிடுகிறார் என்றும் ஆச்சரியப் பட்டிருக்கிறேன்.
பேட்டிகளே பத்திரிகைத் தேவைக்காக உருவான ஒரு வடிவம்.  வள்ளுவரும், வீரமாமுனிவரும் பேட்டி கொடுத்ததாக வரலாறில்லை.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் பத்திரிகைகளும் மக்களிடையே ஜனநாயகச் சிந்தனைகளும் எழுச்சி பெற ஆரம்பித்ததில் ஒரு பிரச்னை குறித்துக் கேட்டு அதற்கு அந்த அறிஞரின் பதிலைத் தருவதில் பேட்டி வடிவம் ஒரு மாதிரித் தெளிவு பெறத் தொடங்கியது.
இரண்டாம் உலக யுத்தம் முடிந்தவுடன் சில அமெரிக்க இளைஞர்கள் üபாரிஸ் ரிவ்யூý என்ற பத்திரிகையைத் தொடங்கினார்கள்.  (கம்ப்யூட்டர்க்காரர்கள் திட்டவட்டமான தகவல்கள் பெறலாம்).  இவர்களுடைய பத்திரிகையில் பிரபல எழுத்தாளர்கள் இடம் பெறவும் வேண்டும், அவர்களுக்குச் சன்மானம் தரும்படியாகவும் இருக்கக் கூடாது.  இதற்கு ஓர் உத்தியாக üபாரிஸ் ரிவ்யூý பேட்டிகள் தொடங்கின.  பேட்டிக்கு முன்பு பேட்டி காண்பவர்  அந்த எழுத்தாளரின் படைப்புகள், அவருடைய தொடக்கம், வளர்ச்சி, வாழ்க்கை வரலாறு, படைப்புகள் அனைத்தையும் நன்கு அறிந்து ஆராய்ந்து வைத்திருப்பார்.  எழுத்தாளருக்கு அந்தப் பேட்டி புத்துணர்ச்சியூட்டுவதாக அமையும்.
பேட்டிகள் பற்றி முற்றிலும் எதிர் கோணத்தில் ஒரு கருத்து இருக்கிறது.  பேட்டியைப் படிப்பவர்கள் சாதாரணப் பத்திரிகை வாசகர்கள்.  அவர்களுக்கு எழுத்தாளர்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்கப் போவதில்லை.  ஆதலால் பேட்டி காண்பவர் அந்த வாசகர்களின் பிரிதிநிதியாக இருந்து அந்த எழுத்தாளரின் பதில்களைப் பெறுவதுதான் பெரும்பான்மை வாசகர்களுக்கு நியாயம் செய்வது ஆகும்!
ஆனால் பேட்டிகள் சலிப்படையச் செய்கின்றன.  உண்மையில் எழுத்தைப் பற்றியும் எழுத்தாளரைப் பற்றியும் ஒப்புக்குத்தான் கேள்விகள்.  பல கேள்விகள் ஜோசியர்களைக் கேட்பவையாக இருக்கும்.  இது எப்போது முடியும்?  அது எப்போது மாறும்?  இதை ஏன் நீங்கள் செய்யவில்லை?  அதை ஏன் செய்தீர்கள்?  உண்மையில் இதெல்லாம் யாருக்கும் எந்தத் தெளிவும் ஏற்படுத்தப் போவதில்லை.
எழுத்தாளனுக்கு – புனைகதை எழுத்தாளனுக்கு – அவனுடைய புனைகதைதான் முறையான வெளிப்பாடு.  அப் புனைகதைகளுக்கு அப்பால் அவன் பேச வேண்டியிருந்தால் அவன் புனை கதைப் படைப்பை ஒழுங்காகச் செய்யவில்லை என்றுதான் பொருள்.
இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.  ஆனால் பேட்டி தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.  பல சந்தர்ப்பங்களில் பேட்டி தாட்சண்யத்துக்காக ஒப்புக் கொள்ளப் படுகிறது.  பேட்டி காண வருபவர் நிறுவனம் எதையும் சாராது பாதுகாப்பற்ற நிலையில் இருப்பார்.  இந்தப் பேட்டி எதாவது ஒரு பத்திரிகையில் ஒரு சிறு தொகை அவருக்குப் பெற்றுத் தரக்கூடும்.
எனக்குத் தெரிந்த சிலர் வரிந்து கட்டிக்கொண்டு பேட்டிகள் தந்திருக்கிறார்கள்.  சென்ற ஆண்டு (அல்லது அதற்கு முந்தைய ஆண்டு) சாகித்திய அகாதெமி தலைவர், துணைத்தலைவர், மொழிவாரி ஒருங்கிணைப்பாளர் தேர்வு நடந்தது.  தலைவர் உருது எழுத்தாளர்.  அவரை யாரும் அறிமுகமில்லாதவர் என்றும் சொல்ல முடியாது.  அவர் துணைத்தலைவராக இருந்திருக்கிறார்.  இப்போது தலைவராக விரும்புகிறார்.  நம் குடியரசுத் தலைவர் தேர்தல் கூட ஒரு முறை ஒரு துணைத் தலைவரைத் தலைவராக்கியது.   இந்த உருது எழுத்தாளர் முரளி மனோகர் ஜோஷி பற்றிக் கவிதை எழுதியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு.  உருது மொழியில் இந்துத்துவா!   எனக்கு அன்று அவர் என்னதான் எழுதியிருக்கிறார் என்று அறிய ஆவலாகத்தான் இருந்தது.  ஆனால் பல தமிழ் எழுத்தாளர் தலைவர்கள் (அல்லது பிரமுகர்கள்) அவர் கவிதை எழுதினார் என்று கோபம் கொண்டிருந்தார்கள்.  அந்த மனிதர் விமரிசக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார் என்றுதான் அறிந்தவர்கள் சொல்வார்கள்.  விமரிசகர் கவிதை எழுதியிருந்தால் எப்படி இருக்கும்.  அன்று நிறையத் தமிழ்ப் பேட்டிகள் இந்த உருது மனிதரைத் தாக்கின.  இதை அவர் அறிந்திருந்தால் தமிழ் எழுத்துலகில் இந்த அளவு தாக்கப்படுவதற்கு அவருடைய பெயரும், புகழும் பரவியிருக்கிறதா என்று நினைத்துப் பூரித்துப் போயிருப்பார்.  முரளி மனோகர் ஜோஷியைப் புகழந்து பாடிய கவிதையை யாராவது தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால் யனுள்ளதாயிருக்கும்.  இங்கேதான் எவ்வளவு பேரைப் புகழ்ந்து பாட வேண்டியிருக்கிறது.
         

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன